Tuesday, October 27, 2026

ஒரே ஒரு கேள்வி

ஒரே ஒரு கேள்வி 


ஒருநாள் கடவுளைப் பாக்கணும் 
ஒண்ணே ஒண்ணு கேக்கணும்  

மனிதனைப் படைத்தானே காரணம் கேட்கணும்  
வினைப்பயன் என்பான் மூலத்தை கேட்கணும்  

கோயில்கள் தோறும் சிலையாய் நிற்கிறான்  
அத்தனை மனிதனும்  அங்கே பிச்சை எடுக்கிறான் 

எதற்கு இந்த மாயை சொல்லிவிட்டு நில்   
இதற்கு மேலாவது அவன் வாழட்டும் செல்   

ஒருநாள் கடவுளைப் பாக்கணும் 
ஒண்ணே ஒண்ணு கேக்கணும்  

Sunday, October 25, 2026

கடமை அதுவே வாழ்க்கை

கடமை அதுவே வாழ்க்கை 


யாரடா இங்கே கடங்காரன்
காட்டடா நானும் பாக்கணும் 
எங்கிருந்து கொண்டு வந்தான் 
யாருக்கு  அவன் கொடுத்தான் 

கொண்டு வந்தவன்  எவனுமில்லை 
எடுத்து செல்ல ஏதும் இல்லை 
அவனுக்கு கொடுத்தவன் எவனோ 
அவனே இவனுக்கும் கொடுத்தான்  

கடங்காரன்  என்று  யாருமில்லை 
கொடுத்தவனும் இங்கிருந்தே  கொடுத்தான் 
உடலைக் கொடுத்த ஆண்டவனே 
உலகில் வாழவும் வைத்தான் 

உனக்காக நொந்தவள் அன்னை 
வளர்த்திட வந்தவன் தந்தை 
கடனை எல்லாம் தீர்த்துவிடு
கடமை அதுவென வாழ்ந்துவிடு 
 


மண்ணில் பிறந்த நாள் முதல், மறையும் நாள் வரை வாழ்க்கை கற்றுக்கொடுக்கிறது.

முதலில் அம்மா, தொடர்ந்து அப்பா, உறவுகள் மற்றும் ஆசிரியர் என பாடங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நண்பர்கள் வந்த பிறகு கற்றலின் தன்மை மாறுகிறது. நல்லதெல்லாம் அடக்குமுறையாக தெரிகிறது. 

பெண்ணொருத்தி  காதலியாய்  வந்தவுடன், உலகமே வண்ண மயமாகிவிடுகிறது. 

மனைவி என்றானவுடன் கடமை கண்ணுக்குத் தெரிகிறது. குடும்ப சுமை ஏறும்போது வாழ்வில் பயம் நிழலாடுகிறது.

இதற்குமேல் வழியில்லை  என்று தெரியும்போது வாழ்க்கை பற்றிய கேள்வி எழுகிறது. இதுவரை தெரியாத கடவுள்மேல் கோபம் வருகிறது, கூடவே பக்தியும்  வருகிறது.

நான் ஏன் பிறந்தேன்? என்ற கேள்வி எழும்வரை வாழ்க்கை இழுத்துச்செல்கிறது. வாழுகின்ற வாழ்க்கையில் நாம் பட்ட கடனும் கண் முன்னே தோன்றி போகிறது.

அன்னையும், தந்தையும் தவிர யாருக்கும் கடன்படவில்லை என்ற உண்மை விளங்கும் போது, கடமை எதுவென்று தெரிகிறது.

உன்னைச்சுற்றி எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நீ ஒரு தனித்தீவுதான் என்றுணரும்போது தான், வாழும் ஆசை உன்னுள் முளைக்கிறது.

இந்த ஆசை வந்தவுடன்,  வாழும் வகை அறியாமல் மண்ணில் இருந்து மறைவோர் வாழ்க்கை ஓர் நீர்க்குமிழி.

எல்லாவற்றையும் கற்றுத்தரும் வாழ்க்கை, வாழ மட்டும் கற்றுத் தருவதில்லை.

திருமந்திரம் 143

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் 
திண்ணென் றிருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் 
எண்ணின்றி மாந்தர் இருக்கின்ற வாறே. 

இரண்டு வகை மண்ணால் ஆன பாத்திரங்கள் இருந்தது. ஒன்று, தீயினால் சுட்டது, மற்றொன்று சுடாதது. வானத்திலிருந்து மழை பாத்திரங்களின் மீது பொழிந்தால், சுடாத பாத்திரம் மட்டும் மீண்டும் மண்ணாகிவிடும்.  மனிதர்கள் வாழும் நாட்களில், இறைவனை நாடி அற வாழ்க்கை வாழ்ந்து  தீயில் சுட்ட பாத்திரம்போல் திடமாக இல்லாமல்,  மண்ணில் இருந்து மறைந்து போகிறார்கள்.

அற வாழ்க்கை என்பதே, யாருக்கும் கடன்படாமல், பட்ட கடனை தீர்ப்பதையே  கடமையாக எண்ணி வாழ வேண்டும்.

*** *** *** *** ***






Thursday, October 22, 2026

நிலவோடு ஓர் பயணம்

நிலவோடு ஓர் பயணம் 


நீரோடும் பாதையிலே போகலாம் வா 
நிலவோடும் மலரோடும் பாடலாம் வா
காலமெல்லாம் காத்திருப்பது  காதலாகுமா 
பருவத்தில் கனியாதது நியதியாகுமா 

நீரோடும் பாதையிலே போகலாம் வா 
நிலவோடும் மலரோடும் பாடலாம் வா

படிப்பதனால் பலகலைகள் வந்து சேரும் 
அறிந்ததனால் கைகூடி வித்தைகளாகும்  
கைகோர்த்து நடந்து சென்று  சொர்கம் காண்போம்  
இரவு பகல் நேரமெல்லாம் இன்பம் காண்போம்  

நீரோடும் பாதையிலே போகலாம் வா 
நிலவோடும் மலரோடும் பாடலாம் வா

ஆசைகளை அள்ளி தின்னும் பருவம் நமக்கு
அத்தனையும் மாயையாகும் காலம் மறந்தால்  
உடலின்பம் மாயையென்று சொல்பவரெல்லாம் 
உயிரை ஏய்த்து பிறவிச்சுழலில் தவிப்பவராவார்    

நீரோடும் பாதையிலே போகலாம் வா 
நிலவோடும் மலரோடும் பாடலாம் வா
காலமெல்லாம் காத்திருப்பது  காதலாகுமா 
பருவத்தில் கனியாதது நியதியாகுமா 

Tuesday, October 20, 2026

பயணமே மாயை

 பயணமே மாயை

உன்னைப் பற்றிய உண்மைகளை அறிய நினைத்தால் உன்னை ஆளும் தொண்ணூற்றாறு காரணிகளை நீ அறிய வேண்டும்.

அதில் முப்பத்தாறு காரணிகள், பிரதம காரணிகள், உன் உயிரைப்பற்றியது. அறுபது காரணிகள் சார்பு காரணிகள்; பிரதம காரணிகளைப்பற்றி வருவது. இதன் வழியாக உன் குணம் என்னவென்று நீயே அறிந்து கொள்ளலாம்.

பிரதம காரணிகளில் இருபத்து நான்கு, குறிப்பாக மாயையுடனான உயிரின் தொடர்பை விளக்குவது. இதை ஆன்ம தத்துவங்கள் என்பார்கள்.

அதில் நான்கு காரணிகள், அந்தக்கரணங்கள்,  உயிரின் கருவிகளாக உள்ளத்தை சொல்வது. மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என்பதே அந்த நான்கு காரணிகள்.

அகத்தியரின் சௌமிய சாகரம் 32

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.

Saturday, October 17, 2026

உனக்குள் ஒரு பேரொளி

உனக்குள் ஒரு பேரொளி 


மேகங்கள் ஓடி வரும் 
மின்னல் உண்டு 
தேகங்கள் ஆடி வரும் 
தெய்வம் உண்டு

உப்பிருக்கு கடலிலே 
இனிப்பிருக்கு தேனிலே
தெளிவிருக்கும்  மனதிலே 
பிரித்துப் பார்க்கும்  எளிதிலே 

இல்லையென்று சொல்லலாம் 
சுவைத்துப் பார்த்தால் தெளியலாம் 
உருவமில்லா பேரொளியை 
உனக்குள்  தவத்தால் அறியலாம்

உன்னை  நான் பார்க்கும்போது 
ஒளியைத்தான் பார்க்கிறேன் 
ஒளியில்லா உலகமெனில் 
ஒன்றுமில்லா அவனி அது    

மேகங்கள் ஓடி வரும் 
மின்னல் உண்டு 
தேகங்கள் ஆடி வரும் 
தெய்வம் உண்டு


திருமந்திரம் 1797

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?

மனம் தன்னை உணர்ந்த நாளில் இருந்தே இருப்பவன் இறைவன். அவன் புருவ நெற்றியில் இருக்கிறான் என்று தெரியும். ஆனால், அவனைப்  பார்க்க முடியாத  மயக்க நிலையில் இருக்கிறார்கள். உடலுக்குள்ளே பேரொளியாய் உறைபவன் இறைவன். உயிராய் இறைவன் உனக்குள் இருக்கிறான் என்பதை நீ அறியாமல் யாரால் அறிய முடியும்?

தவத்தின் வலிமையால் இறைவனை, உனக்குள்ளே பேரொளியாய்க் காணலாம்.

*** *** *** *** *** 

வீரா.. 171026

Thursday, October 15, 2026

அமிர்த ரகசியம்

 அமிர்த ரகசியம்  

யாருக்கும் தெரியாது
ஊருக்கும் தெரியாது 
கண்டவரைக் காணவில்லை - அமிர்தம் 
உண்டவரும் எவருமில்லை 

மலைகள் குகைகள் தேடினேன்   
பாற்கடலிலும் பாக்கி இல்லை   
வள்ளுவனும் சொல்லில் வைத்தான்  
மூலனவன் அடிசிலில் வைத்தான்

யாருக்கும் தெரியாது
ஊருக்கும் தெரியாது 
கண்டவரைக் காணவில்லை - அமிர்தம் 
உண்டவரும் எவருமில்லை 

கீழோடும் நீரை நிறுத்தி வெச்சா   
உயிர்க்கனலில் மேலேறும் ஆவியாகி    
புருவமத்தியில் நிலவுக்கு போய்ச்சேர்ந்து   
யோகிகள் உண்ணும் அமிர்தம் ஆகும்  

யாருக்கும் தெரியாது
ஊருக்கும் தெரியாது 
கண்டவரைக் காணவில்லை - அமிர்தம் 
உண்டவரும் எவருமில்லை 


திருமந்திரம் - 1949

வற்ற அனலைக்  கொழுவி மறித்தேற்றி
துற்ற சுழிஅனல்  சொறுகிச் சுடர்உற்று
முற்ற மதியத்து அமுதை முறைமுறை 
செற்று உண்பார் சிவயோகி யோரே. 

புருவ நெற்றியில் அமிர்த ஊற்றை  உண்டாக்கும் வழியை காட்டுகிறார் திருமூலர்.

கீழ் நோக்கி சென்று வெளியேறும் தன்மை கொண்ட சுக்கிலத்தை மறித்து மேல் நோக்கி செலுத்த  வேண்டும். மூலாதாரத்திலிருந்து எழும் அனலைத் தூண்டி விட்டு  சுக்கிலத்தை வற்ற செய்ய வேண்டும். வற்றி வாயு  நிலையில் உள்ள சுக்கிலத்தை சுழு  முனைக்கு  கொண்டு சேர்க்க வேண்டும். சுழு முனையில்  வாயு சுடரொளியாய் மாறி அமிர்த நிலைக்கு செல்லும். இவ்வாறு முழு நிலவாய் விளங்கும் புருவ நெற்றியில் ஊறும் அமிர்தத்தை  சிவ யோகியார்கள் தேவைக்கேற்ப உண்டு வாழ்வார்கள். இவர்களுக்கு வேறு உணவு தேவை இல்லை என்பது கருத்து.

*** *** *** *** *** 

வீரா..  151026


Monday, October 12, 2026

உன்னத வினை

உன்னத வினை 

திருக்குறள் - 672

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.  

பசித்தழும் குழந்தைக்கு பாலூட்டுவது அன்னையின் 
தூங்காது செய்யும் வினை.

படிக்கும் துறையினை தெரிந்தெடுப்பது தந்தையின் 
தூங்கிச் செய்யும் வினை.

தூங்குதல் - எடை போடுவது, ஆராய்வது 

வீரா.. 121026

Sunday, October 11, 2026

கானல் நீர் தேடல்

கானல் நீர் தேடல் 


யாருக்கும்  தெரியாத அந்த வலி 
நெஞ்சத்தில் எனக்குள் இருக்கிறது 
சம்மதம் தராமல் இருந்திருந்தால் 
நினைவுகளில் நாட்களை கடந்திருப்பேன் - உன் 
நினைவுகளில் நாட்களை கடந்திருப்பேன்.

சின்னஞ்சிறு தேனீ நான் 
மலர்களை தேடும் பருவம் அது 
மொட்டாக மலர்ந்திருந்தாய் 
தேனாக இனித்து சுகம் தந்தாய் - நீ 
தேனாக இனித்து சுகம் தந்தாய். 

மேகத்தைப்போல் நீ வந்தாய் 
வானவில்லின்  வர்ணம் காட்டி நின்றாய்  
மின்னலாய் மின்னி  மறைந்து விட்டாய் 
என்னிடம் மீதம் ஒன்றுமில்லை - இன்று 
என்னிடம் மீதம் ஒன்றுமில்லை.

இளமை என்பது ஒரு கானல் நீர் 
இருப்பது தெரியும் தொடவே முடியாது  
பருவங்கள்  மாறி மாறி வரலாம் 
காதலும் மாறி மாறி வருமா? - கொண்ட 
காதலும் மாறி மாறி வருமா?


காதல் ஒரு கானல் நீர் 

வீரா.. 111026

காதலும் இளமையும் கானல் நீர்.

Friday, October 9, 2026

ஆதிநாதம்

ஆதிநாதம் 


காலையில் பூக்கும் பூக்களெல்லாம் 
கடவுளின் மலரடி தொழுவதற்கு 
மாலையில் மலரும் மல்லிகையோ 
இரவினில் இன்பம் சேர்ப்பதற்கு

ஆதியில் தோன்றிய இறைவன் 
நாதத்திற்கு  அவனே ஆதாரம் - ஓங்கார 
நாதத்திற்கு  அவனே ஆதாரம்

மூன்றெழுத்தில் பிறந்தது ஓங்காரம் 
முதலெழுத்தே அதிலே அகாரம் - அங்கே 
முதலெழுத்தே அதிலே அகாரம் 

அகிலம் தோன்றிய முதல்நாளே 
அகரமும் பகவனும் ஆதிநிலை - உலகில் 
அகரமும் பகவனும் ஆதிநிலை 

காலையில் பூக்கும் பூக்களெல்லாம் 
கடவுளின் மலரடி தொழுவதற்கு 
மாலையில் மலரும் மல்லிகையோ 
இரவினில் இன்பம் சேர்ப்பதற்கு


திருக்குறள் - 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்:

ஓங்கார நாத வடிவான ஆதி பகவனும், ஓங்கார நாதத்தின் முதல் எழுத்தான அகரமும் உலகில் முதலில் தோன்றியவை.


வீரா 091026


Thursday, October 8, 2026

ஐராவதம்

ஐராவதம்

குரல்வளைக்குள் சென்ற  உணவு 
பள்ளியறையில்  கலைந்த  கனவு 
புலன்கள் மயங்கி செயல்மறக்கும் 
புரிந்தவன் வாழ்வில்  உரமிருக்கும் 

 

 திருக்குறள் -25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங்  கரி. 


மெய்ஞ்ஞானம் உரைத்திடும்  ஆன்ம தத்துவங்கள் இருபத்தி நான்கு. இதில், ஐம்புலன்களான, கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய் என்னும் ஐந்து ஞானேந்திரியங்களும்  அடங்கும். அத்துடன் புலன்களின் தன்மைகளான   பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் மற்றும் ஸ்பரிசம் [உணர்தல்]  என்னும் ஐந்து தன்மாத்திரைகளும்  சேரும்.

ஐம்புலன்கள் பரு உடலில் அமைந்திருக்கிறது. எனினும், தன்மாத்திரைகளை அனுபவித்து உணர்வது ஒளி உடல் ஆகும். இந்த உண்மையை அறிந்து, புலன் வழி செல்லாமல், வாழ்வின் தேவைக்கேற்ப புலன் வழி இன்பம் அனுபவித்தலே புலன்களை அறிந்து அதனை வெல்லும் வழியாகும்.

சரி, நாம் திருக்குறளுக்கு வருவோம். 

ஐந்தவித்தான் - ஐம்புலன்களின் ஆசைகளை அழித்தவன் என்பதை விட ஐம்புலன்களின் தன்மையை அறிந்தவன் என்று கொள்வது சிறப்பு. அதாவது ஐந்தவிழ்த்தான். 

ஆற்றல் - சக்தி 

அகல் விசும்பு ளார்கோமான் இந்திரனே - அகன்ற  வானத்தில் உள்ள தேவர்களின் தலைவனான இந்திரன் 

சாலுங் - சாட்சி 

கரி - யானை [ஐராவதம் - இந்திரனின் வாகனம்]

பொருள்: ஐந்து புலன்களின் தன்மையை அறிந்தவனின்  சக்திக்கு, அகன்ற வானத்தில் உள்ள தேவர்களின் தலைவனான இந்திரனின் வாகனமான, ஐராவதம் என்னும் யானையின் ஆற்றலே சாட்சி.


*** *** *** *** ***



Friday, October 2, 2026

நான் யார்?

நான் யார்?

என்னைத்தான் நானறிவேன் 
என்னை இங்கு யாரறிவார்?

பாசமிகு குடும்பமும் உறவும் 
நேசமிகு நட்பும் தோழரும் 
அரசு வங்கி கணக்குகளிலும் 
ஒப்பந்த பத்திரங்களில் அன்றி  
என் பெயரை யாரறிவார்?

எண்ணில் நூறு தேறுமா - நூறும்  
மண்ணில் நிலைத்து வாழுமா?

'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர்களை பார்க்கும்போது நம்மையறியாமல் இறந்தவரின் வயதைப்பார்க்கிறோம். இளையவராயிருந்தால் மனதுக்குள் சிறிய வருத்தம். வயதில் மூத்தவராயிருந்தால், இன்னும் நமக்கு வாழும் காலமிருக்கிறது என்ற மகிழ்ச்சி. மற்றபடி, RIP போடுவதெல்லாம் ஒரு சடங்காகிப்போய்விட்டது.

இறந்தவுடன் பெயர் மாறி பிணம் என்றாகிவிடும். ஒரு வாரம் பத்து நாட்களுக்கு ஆசை ஆசையாக கட்டிய வீடு இழவு வீடாகிவிடும். ஒரு மாதத்திற்குள் எல்லாம் முடிந்து, அவரவர் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

வாழ்ந்ததுக்கான அடையாளங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டு மிச்சமென்று ஒன்றுமிருக்காது.


திருமந்திரம் - 340

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் 
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் 
தோற்பையுள் நின்று தொழிலறச்  செய்தூட்டும் 
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.

உடலென்னும் தோல் பைக்குள் இருந்து இறைவன் இயக்குகிறான். உடலை விட்டு இறைவன் நீங்கியவுடன், காகங்கள் சொந்தம் கொண்டாடினாலென்ன?
யாரும் பழித்து இழிவாக பேசினாலென்ன? பதினாறாம் நாள் பால் ஊற்றினாலென்ன? தெரிந்தவர்கள் உயர்த்தி பேசினாலென்ன?  
எதுவும் உன்னைப்  பாதிக்கப்போவதில்லை.

மிச்சமென்று ஒன்றுமிருக்காது. காலம் எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடும்.

வாழும்வரை அறம் சார்ந்து வாழ்ந்து விடு.

*** *** *** *** ***

வீரா..
031026

ஒரே ஒரு கேள்வி

ஒரே ஒரு கேள்வி   ஒருநாள் கடவுளைப் பாக்கணும்  ஒண்ணே ஒண்ணு கேக்கணும்   மனிதனைப் படைத்தானே காரணம் கேட்கணும்   வினைப்பயன் என்பான் மூலத்தை கேட்கண...