Sunday, June 14, 2026

மும்மலங்கள்

மும்மலங்கள்




கோயிலைக்கட்டியவன் மனிதன் 
சிலைதனை வடித்தவன் மனிதன் 
உண்டியலை வைத்ததும் மனிதன் 
பூட்டினைப்  போட்டதும்  மனிதன் 

- சேருகின்ற காசுக்கு காவலாளியா இறைவன்? 

பன்னீரில் நீராட்டி கற்சிலைக்கு 
பளபளப்பாய் பட்டுஜரிகை வேட்டிகட்டி 
வண்ணமலர் மாலைபோட்டு வாழ்த்துப்பாடி 
ஆயிரம் விளக்கில் தீபாராதனை

- மும்மலங்களை கடந்தவன்  இறைவன்  

ஆணவமே மும்மலத்தின் முதல்மலம்  
இம்மூலஇருள் இல்லாத அமரருமில்லை
ஆணவத்தை கலைப்பது அறிவாகும் 
அறிவுக்கு அறிவே  பகையாகும்  

- ஆணவ மலம் மட்டும் கொண்டவர் விஞ்ஞானாகலர் 

அகவிருளினை போக்கிடும் கலையொன்றே 
ஆணவத்தை அகற்றிடும் ஒளியாகும்   
மனமதை தானென்று  கொள்ளலாகும் 
கன்மமென்ற மலமுமிங்கு  அதனையாளும் 

- ஆணவமும், கன்மமும் கொண்டவர் பிரளயாகலர்  

கலைத்தொழிலும் கன்மமென்ற வித்தையாகி 
காலமெல்லாம் நிழலான மாயையென்றாகும்
பெண்ணின் கருவறைக்குள் நுழைந்தக்கணம் 
மண்ணின் மாந்தரின் பொதுமாண்பதுவாகும்  

- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களில் வாழ்பவர் சகலர் 

விளக்கம்:

மெய்யியல் பற்றிய உண்மை  அறிய முற்படுவோர்க்கு சித்தர்கள் காட்டிய அருள்நெறி:

மனிதனின் சாத்வீக, சத்திரிய மற்றும் தாமச  என்னும் முக்குணங்களை ஆள்வது முப்பத்தாறு  பிரதம உண்மைகள். அவைகள், இருபத்தி நான்கு உண்மைகள் ஆன்ம உண்மைகள் என்றும், ஏழு உண்மைகள் வித்தியா உண்மைகள் என்றும், ஐந்து உண்மைகள் சிவ உண்மைகள் என்றும் பிரிவினைப்படும்.

இதில் வித்தியா உண்மைகள் என்பது,

 1. காலம்  2. நியதி  3. கலை  4. வித்தை  5. அராகம்  6. புருடன்  7. மாயை 

கலை என்பது ஆன்மா கொண்டுள்ள மூல மலமான அறியாமையை கலைக்கக்கூடியது. அறியாமை அகலும்போது, அது மாயையின் பண்பு என்றறியாமல் ஆன்மா தானே முன்னின்று செய்கிறேன் என்று, 'நான்' என்ற அறியாமையை மீண்டும் ஏற்றுக்கொள்கிறது.  இதனால் தான் கலையின் மூலம் பெற்ற அறிவுக்கு புறம்பாக, சிற்றறிவின் எல்லைக்குள்  நின்று செயல்படுகிறது. இந்த நிலையே, அவரவர் பிறப்பின்  கன்மம் என்றறியப்படுகிறது. கலை கற்றுத்தந்த வித்தையின்மீது ஈர்ப்பு ஏற்பட்டு, விரும்பி வித்தைகளை அறிய முயற்சி செய்கின்றது.  இந்த விருப்பமே அராகம் என்பது.

மேற்படி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஆன்மா புருடன் என்றறியப்பட்டு, பிறப்பிலிருந்து இறப்பு வரை, மாயையினால் சூழப்பட்டு,  மாயா உலக நியதிகளிலிருந்து விடுபடாமல் வாழ்ந்து மறைகிறது.

பள்ளிகளும், கல்லூரிகளும் வித்யாலயா என்றோ கலைக்கல்லூரி என்றழைக்கப்படுவது இதனால்தானோ என்னவோ?

*****     *****    *****    *****    *****    *****    *****


 


  



Friday, June 5, 2026

காலப்பரிமாணம்

 காலப்பரிமாணம் 


இப்பொழுதென்பது எப்பொழுதும் இல்லை;
எப்பொழுதும் இருப்பதுவோ இப்பொழுதே!

காலம் ஒரு மாயை.

பிறவிப்பயனால் காலப்பெருவெளிக்குள் நுழைகிறேன்.

அங்கே நிகழ் காலம் என்னும் மாயா உலகின் அமானுஷ்யப்பெருவெளிக்குள் நிற்கிறேன். 

ஒரு புறம், எக்காரணம் கொண்டும் திரும்பி செல்ல முடியாத, மாயமாக மறைந்துவிட்ட கடந்த காலம். எதிரிலோ, கண்களுக்கோ மற்ற  புலன்களுக்கோ,  எட்டாத எதிர் காலம்.

இதில் நான் உணரும்  உண்மை என்னவென்றால், உடலுடனும், உடலற்றும்  கடந்த காலங்களில்  நாம் இருந்துகொண்டே இருந்திருக்கிறோம் அல்லது  இருக்கிறோம் .

திருமந்திரம் - 80 

இருந்தேன் இக்காயத்தே  எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே 
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே 
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

திருமூலர் சூக்கும உடலுடன் பல கோடி வருடங்கள், காலப்பெருவெளிக்குள் இருந்ததை 'இருந்தேன் இக்காயத்தே  எண்ணிலி கோடி' என்று  குறிப்பிடுகிறார். பின்னர், இறை அருளால் மூலனின் உடலில் புகுந்து, மீண்டும் மனிதப்பிறவி பெறுகிறார்.

சித்தர்கள் முக்காலமும் அறிந்த ஞானிகள். அவர்களுக்கு  காலப்பயணம் மிக எளிதாக கை வரப்பட்டிருக்கிறது. போகர் தனது போகர் 7000 என்ற நூலில் காலப்பயணம் செய்ததைப்பற்றிய பாடல்களை எழுதி இருக்கிறார். காலப்பயணத்தில் சந்தித்த முனிவர்களிடம் இருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும்  சஞ்சீவினி மருந்து செய்யும் முறையை கற்று வந்திருக்கிறார். எதிர்காலப்பயணம் பற்றிய குறிப்பு எதையும் விட்டு சென்றதாக தெரியவில்லை.

எதிர்காலப்பயணம் பற்றிய குறையை, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்கள் தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள ஆகாய விமானம் முதல் கைப்பேசி வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே செதுக்கிய சிற்பங்களில் விட்டு சென்றிருக்கிறார்கள். அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிர்கால பயணம் மேற்கொண்டு, இன்றைய நாகரிகத்தை அன்றே தெரிந்து சிற்பமாக்கி இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய், புதிதாக கட்டிக்கொண்டிருந்த கோயிலின் நுழைவாயில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதை கோயிலின் உட்புற வளாகத்தில் சிற்பமாக செதுக்கி சென்றிருக்கிறார்கள். அந்த அதிசயத்தை பார்க்க விரும்பினால் நீங்கள் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும். அங்கே நீங்கள் காணும் வெளிப்புறம் சிதிலமடைந்த முன்புற வாசல், அச்சு அசலாக உட்பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள  சித்திரத்தில்  காணலாம்.

காலப்பயணத்தில் கடந்த காலம், எதிர் காலம் சென்று வரும் சாத்தியம் நிகழ் காலத்தில் உண்டு என்னும் உண்மை நமக்கு தெளிவாகிறது.

[சமீபத்தில் OTT-ல் வெளிவந்த BLINK  என்னும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட கன்னட  திரைப்படம் காலப்பயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.]

இவை அனைத்திலிருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டென்றால் அது காலப்பயணம் சாத்தியம் என்பதே.

இனி முக்கியமான ஆய்வுக்கு  வருவோம்.

இன்றிலிருந்து முறையாக பயிற்சி செய்து ஒரு பத்து வருடங்களில் நாம் காலப்பயணம் செய்யும் திறனைப்பெறுகிறோம்  என்று வைத்துக்கொள்வோம். 

அன்றைய நாளில், சோதித்து பார்க்கும் ஆவலில் பத்து வருடம் பின்னோக்கி இன்றைய நாளுக்கு வந்தால், நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். பத்து வருடம் முன்னோக்கி இருந்த நான் அந்த உணர்வு நிலையில் இருப்பேன். அதே சமயம், நிகழ் கால வாழ்விலும் எழுதிக்கொண்டிருக்கும் நானும் இன்றைய உணர்வு நிலையில் இருப்பேன்.

இது எப்படி சாத்தியம்?

முறையாக யோகப்பயிற்சி செய்த சித்தர்களுக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.

காலப்பெருவெளியில் எங்கு வேண்டுமானாலும் என்னால் செல்ல முடியும்; உணர்வு நிலையில் இருக்க முடியும். அதாவது, கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று நிலையையும் ஒரே காலத்தில் அனுபவிக்க முடியும்.

முக்காலமும் ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. பழைய கால இசைத்தட்டை எடுத்துக்கொள்வோம். அதில் எந்த புள்ளியில் முள்ளை வைக்கிறோமோ அங்கிருந்து இசை கேட்க ஆரம்பிக்கும். அப்படித்தான் மாயை நிலையில் உள்ள காலமும். 

நாம் உறக்கத்தில் இருந்து கண்விழிக்கும் வேளையில், காலப்பெருவெளியில் எந்தப்புள்ளியில் இருந்து  வேண்டுமானாலும் விழித்தெழலாம். விழித்தெழுவது எந்த யுகமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

யோசிப்பதற்கே சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. யோசிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் என்னைப்போல் நீங்களும் காலப்பரிமாணத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.

மெய்யியல் பற்றிய உண்மை  விளக்கம்  தரும் சித்தர்கள், வித்யா தத்துவம் என்று மாயா தத்துவத்தை விளக்குகிறார்கள். மாயா தத்துவத்தின் ஏழு கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காலம். 

காலம், காலப்பரிமாணம் என்பது மீள முடியாத ஒரு மாயை.

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...