தவறும் தப்பும்
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்
'மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்ததை உண்டு, மண்ணுக்குள் மறையும் மனிதன், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்கும் இறைவனை, உண்டதின் கழிவை சுமக்கும் தன்னையொத்த மனிதனாக உருவகப்படுத்தியது தவறா? இல்லை தப்பா?'
தவறாய் இருந்தால் திருத்த வேண்டும். தப்பாய் இருப்பதால் வருந்தும் மக்களை மேலும் குழப்பாமல் நல்வழி காட்ட வேண்டும்.
மணவாழ்வில் இன்பம் பெறவும், நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கவும், உடலில் சேர்ந்துள்ள உணவின் கழிவுகளைக் அகற்றி, கடைபிடிக்க வேண்டிய வழிதனை காட்டுகிறார் திருமூலர்.
கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டின் அந்நாரி உதரக்
கலத்தின் மலத்தைக் தண் சீதத்தைப் பித்தை
விலக்குவன செய்து மேல் அணைவீரே.
- திருமந்திரம் 1955
காதலில் இன்பத்தைப்பெற, கூடுமுன்னர் உடலில் உண்ட உணவின் கழிவுகள் நீங்கப்பெறுதல் வேண்டும்.
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரம் வந்த குழவிக்கே.
- திருமந்திரம் 481
மந்த புத்தியுடைய, ஊமையான, கண்ணற்ற மக்களை யார்தான் பெற விரும்புவார்கள். மேலும் தொடரும் 482, 483, 484 பாடல்களில் நன்மக்களை பெற்றெடுக்கும் உபாயங்களை தெரிவிக்கிறார் திருமூலர்.
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.
- பாம்பாட்டி சித்தர் பாடல் 59
இந்த மனித உடலானது மேற்கூறிய தன்மைகளை பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாயினும், இறைவனை மனித உருவில் படைத்து, தானுண்ணும் உணவினையும் படைப்பது சரியா, தவறா, தப்பா?
No comments:
Post a Comment