உயிரின் பயணம் முடிவதில்லை
மனிதனுக்குள் இறைவன் ஒளித்து வைத்த ரகசியம்..
உயிரின் பயணப்பாதை
உனக்குத் தெரியும் என்று
உனக்குத் தெரியாது
மனிதன் உடலால் அறியப்படுகிறான். உடல் என்பது ஒரு காரியப் பொருள். உள்ளம் இடக்கூடிய கட்டளைகளை நிறைவேற்றும் கருவி. உடலில் உள்ள கர்மேந்திரியங்கள் எனப்படும் கைகள், கால்கள், வாய், கருவாய், எருவாய் உறுப்புகள் இட்ட வேலையை திறம்பட செய்து முடிக்கிறது. கால் இடறி பெருவிரலில் ரத்தம் வந்தால், உணர்வது உள்ளம் அன்றி பெருவிரல் அல்ல. அதாவது உடல் என்பது உள்ளம் இடும் வேலைகளை செய்யும் ஒரு கருவியே.
உள்ளத்திற்கான நினைவூட்டல்களை செய்வது புலன்கள். மனித வாழ்வு புலன் வழி ஆரம்பித்து புலன் வழியே முடிந்தும் போய்விடுகிறது. உடலுக்குள் மிக முக்கியமான ஜீவநாடி ஒன்றிருப்பதை உணர்வதே இல்லை. அதுதான் உள்ளத்தையும் உடலையும் இணைக்கும் பாலம். அந்த ஜீவநாடி ஒடுங்கி விட்டால் உடலுக்கும், உள்ளத்துக்கும் வேலை இல்லை.
உடலில் ஜீவநாடியாக இருப்பது உயிர். உயிருக்கு உன்னைப்பற்றிய உண்மைகள், உனக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள் முழுவதும் தெரியும்.
மனிதன் தன்னைப்பற்றிய உண்மைகள் தனக்கே தெரியும் என்றாலும், அதைப்பற்றிய உணர்வே இல்லாமல் வாழ்ந்து மறைவது எப்படி நடக்கிறது? அதை யார் செய்வது? வேறு, யார் உயிரை எப்பொழுதும் பற்றி இருக்கும் இறைதான்.
மண்ணில் மனிதனைப்படைக்கும்போதே, உடலின் புருவ மத்தியில் குடியேறும் இறைவன், அவனுடைய பல பிறவிகளின் நினைவுகளை அப்பொழுதே அழித்தும் விடுகிறான்.
கண்ணின்று காட்டி களிம்பு அறுத்தானே..
இதுதான் பிறப்பின் உண்மை நிலை என்றால் எனக்குள் இருப்பது எனக்கு தெரியவே தெரியாதா?
ஏன் தெரியாது? முயன்றால் முடியாததென்றொன்றுண்டா!
உன்னுயிரில் இருந்து நினைவுகளை அழித்தவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். உள்ளம் உடலை இயக்குகிறதென்றால், உயிர் உடலுக்கும், இறைக்கும் இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது. இந்த உண்மையை உயிர் அறிந்து கொள்ளாமல் இருக்கும் வேலையை உள்ளம் பார்த்துக்கொள்கிறது.
உயிர் என்றாவது ஒருமுறை உண்மைகளை சொல்ல வேண்டிய காலம் வந்தால், உள்ளத்திடம்தானே சொல்ல முடியும். எனவே, உள்ளத்திடமே சரணடைந்து விடலாம்.
'உள்ளமே, உள்ளமே எப்பொழுதும் புலன் வழி செல்லாமல், உயிரிடம் என் கதையை கேட்டு சொல்' - என்று கேட்டுப்பார்ப்போம்.
புலன் வழி வரும் எண்ணங்கள் சீர்பட சீர்பட, உள்ளம் உயிரை அறிய முற்படும். மேகங்கள் விலகிய நிலவாய் உயிர் பிரகாசிக்க ஆரம்பிக்கும். உயிருடன் இணைந்திருக்கும் இறையும் வெளிப்படும்.
யாரும் கேட்காமலே உன்னுடைய உயிரின் காலப்பயணம் வெளிப்படும்.
ஏழுலகும், விண்ணும் அவற்றில் வாழும் அனைத்து உயிர்களும் தன்னுள் கொண்ட முழுமையான அண்ட சராசரமும், அவற்றின் குணங்களும், பழமையான வேதங்களும், உலகைப்படைத்த ஆதி பகவனையும் அறிந்த ஆதி யோகியான சிவபிரான் என் கண்களின் உள்ளே அன்றி வேறெங்கும் இல்லை.
திருமந்திரம் - 1871
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்ட சிவனும்என் கண்அன்றி இல்லையே.
நாம் ஒன்று தேடப்போய் நமக்கு ஒன்று கிடைத்துவிட்டது பாருங்கள். உன்னுடைய உயிர்ப்பயணம் மட்டுமல்ல, ஏழுலகும் வசப்படும் சக்தி உன் கண்களுக்கு இடையில் வசிக்கும் இறைவனிடம் இருக்கிறது. அவன் உன் உயிரோடு கலந்திருக்கிறான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
இறை நிலையில் நின்று உயிர் இயங்க ஆரம்பித்தால், உள்ளத்திற்கு உயிரின் பயணப்பாதை தெளிவாகப்புலப்படும்.
இறை நிலையில் முக்காலமும் உணர்ந்த ஞானிகள் சாதாரண மக்களின் எதிர்காலத்தை தங்களின் அறிவுப்பார்வையில் அறிந்து சொல்வதும் இப்படித்தான்.
*** *** *** *** ***
No comments:
Post a Comment