கல்லிலே கலைவண்ணம்
எனக்கு தீப ஆராதனை.
இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்கள், நீர் என மாற்றி மாற்றி ஊற்றி அபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆலயப்பணியாளர்கள் அவர்களை ஒழுங்குபடுத்தி வேகமாக அவர்களை வெளியேற்றி, வரிசையில் வந்த அனைவரும் என்னை தரிசிக்க வசதி செய்து கொண்டிருந்தார்கள்.
'முருகா.. முருகா.. வெற்றி வேல்.. வீர வேல்..' - வெளியே கூட்டம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது.
தரிசனம் முடித்தவர்கள் திண்ணையில் என் மீது அமர்ந்து கொண்டு ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்தார்கள். பஞ்சாமிர்தத்தை விட அதுதான் சுவையாக இருக்கும் போல.
சின்னஞ்சிறு குழந்தைகளும் என்மீது படிக்கட்டுகளில் தவழ்ந்து ஏறிக்கொண்டிருந்தார்கள். வெயில் பட்டு படிக்கட்டுகள் சூடாவதால் அதன்மீது தென்னை நார்ப்பாய்கள் போட்டிருந்தார்கள்.
எனக்கே மலைப்பாக இருக்கிறது. எண்ணற்ற காலம் நீரிலும், நிலத்திலும் பெரிய பாறையாக இருந்த நான் இன்று கருவறைத் தெய்வமாகவும், அமர்வதற்கு திண்ணையாகவும் மற்றும் படிக்கட்டுகளாகவும் மாறி இருக்கிறேன்.
'ஹரஹர ஹரஹர.. வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா..'
பார்த்தவர்களுக்கெல்லாம் பாறையாய் தெரிந்த நான் ஒரே ஒரு ஜோடி கண்களுக்கு மட்டும் தெய்வமாய் தெரிந்திருக்கிறேன். அந்தப்பார்வையில் மட்டும் நான் மூலவராகவும், திண்ணைக்கற்களாகவும், படிக்கட்டுகளாகவும் தெரிந்திருக்கிறேன்.
சிற்பியின் கலைக்கண்கள்.
இன்று, என்னை வணங்குபவர்களின் கண்கள், பக்திக்கண்கள். அவர்களுக்கு நான் தெரியவில்லை; மாறாக அவர்கள் பக்தி சிரத்தையுடன் வணங்கும் அந்த தண்டாயுதபாணியே தெரிகிறார்.
தந்தைக்கு மகளாக இருக்கும் ஒரு பெண், கணவருக்கு மனைவி, குழந்தைகளுக்கு அம்மா. இன்னும் எத்தனையோ உறவுகள் அந்த பெண்ணை சுற்றி.
பெண்ணை பெண்ணாக மட்டும் பார்க்க முடியுமா என்ன?
திருமந்திரம் - 2290
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.
மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது அங்கே மரம் தெரியவில்லை. அது மரம்தான் என்றுணரும்போது அங்கே யானை மறைந்து மரமாகி விடுகிறது. பஞ்ச பூதங்களில் முதலான வானம், எங்கும் பரந்துள்ள பரம்பொருளை உள்ளடக்கி மறைத்து நிற்கிறது. பரம்பொருள்தான் அனைத்தும் என்னும்போது, வானம் மறைந்து விடுகிறது.
*** *** *** *** *** ***
No comments:
Post a Comment