Friday, September 20, 2024

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

கண்ணா லட்டு தின்ன ஆசையா?


ஜருகண்டி.. ஜருகண்டி..

திருப்பதிக்கே மொட்டை அடித்து விட்டார்கள். 

ஒன்றும் கெட்டுவிடவில்லை.  ஒருவருக்கும் உடல் நலனில் பாதிப்பில்லை. மண்ணுக்குள் விளைந்ததால் வெங்காயம் சாப்பிடாதவர்கள்தான் லட்டை  அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்பார்கள்.  மற்றவர்களுக்கும் பிரசாதமாய், திருப்பதி சென்று வந்த பெருமையை பறைசாற்ற  கொடுத்திருப்பார்கள்.

இது சரியா, தவறா என்ற புலன் விசாரணைக்குள் நாம் செல்ல வேண்டாம். இது கொண்டு வந்திருக்கும் அரசியல் மற்றும் ஆன்மீக சலனங்களை மட்டும் பார்ப்போம்.

அரசியலை விடுவோம். கொஞ்சம் பின்னோக்கி போனால், ஆரம்பம் முதலே லட்டு தயாரிப்பு இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று முடித்து விடுவார்கள்.

இந்த ஆன்மீகவாதிகள், பகுத்தறிவுவாதிகள் ஆட்டம்தான் சுவையாக இருக்கும். 

பசு உண்ணும் புல்லும், புண்ணாக்கும்தான் உடலில்  பாலாகவும், கொழுப்பாகவும் மாறி இருக்கிறது. பாலில் நெய்யும், கொழுப்பில் எண்ணையும் கிடைக்கிறது. இரண்டையும் கலந்து லட்டு செய்திருக்கிறார்கள்.

'இது பெரிய தீட்டு. பரிகாரம் செய்யாமல் கோயில் நடை திறக்கக்கூடாது.' - என்று ஆன்மீகவாதிகள்  கிளம்புவார்கள்.

நமக்கே சாமி இல்லை, பூதம் இல்லை. இது அடுத்தவன் வீட்டு விவகாரம், என்று சும்மா இருக்க மாட்டார்கள் பகுத்தறிவுவாதிகள்.

'கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி லட்டே கோவிந்தா.. உங்க கோவிந்தனால ஒண்ணும் புடுங்க முடியாது.'

பன்னிரண்டு மணி நேரம், பதினெட்டு மணி நேரம் வரிசையில் நின்று வெங்கடேசனைத் தரிசித்து, புனிதமான பிரசாதமாக எண்ணி வாங்கிய லட்டு மாட்டு கொழுப்பில் தயாரானது என்று தெரிய வரும்போது பக்தர்கள் மனம் தளர்ந்து போவது இயற்கையே.

அதற்குத்தான், திருமூலர் இப்படி சொல்கிறார்:

படமாடக் கோயில் பகவற்கு ஒன்றீயில்  
நடமாடக் கோயில் நம்பர்க்கு  அங்குஆகா 
நடமாடக் கோயில் நம்பர்க்கு  ஒன்றீயில்
படமாடக் கோயில் பகவற்கு   அதுஆமே. 

இறைவனை படமாக வைத்து வணங்கும் கோயிலில் உள்ள தெய்வத்துக்கு நீங்கள் பொருட்களை கொடுப்பதால், எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அதுவே, எளிய மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் பொருளானது நேராக அந்த இறைவனுக்கே சென்று சேர்ந்துவிடும். 

இப்படி எளியவர்களுக்கு  உதவுவதால்  நேரமும் மிச்சம், மனதிற்கும் நிம்மதி.

திருப்பதிக்கு லட்டு; பழனிக்கு பஞ்சாமிர்தம்.

'லட்டுக்கு நெய் வார்த்த அதே மகாப்பிரபுதான் பஞ்சாமிர்தத்திற்கும் நெய் வார்த்திருக்கிறார்.'

நல்ல வேளை, இந்த செய்தி இட்டுக்கட்டியது என்று தெரிவித்துவிட்டார்கள்.

என்ன கொடுமை சரவணா?

*** *** ***




No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...