Monday, October 7, 2024

அறநிலையம்

அறநிலையம் 




'கோயிலுக்கு போவதால் பயனொன்றுமில்லை. பகுத்தறிவிற்கு ஒவ்வாத,   கல்லை வணங்கினால் உன் கஷ்டங்கள் தீர்ந்து போகாது.' - என்னும் ஒரு கூட்டம்.

'இறைவனை வணங்கு. கல்லானாலும், மரமானாலும் கடவுளாக எண்ணி வணங்கு. ஆலயம் தொழுவது சாலமும் நன்று.' - இப்படி ஒரு கூட்டம்.

சாதாரண மக்கள் இந்த இரண்டு கூட்டத்தில் ஒன்றில் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் அவர்களை அறியாமலே நடந்தேறிவிடுகிறது.

'இல்லை', 'இருக்கு'  என்ற அறிவின் விவாதமே முடிவற்று, வாழும்  வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விடுகிறது. இந்த விவாதமே  ஒருவித பயத்தை உண்டாக்கி, அந்த பயமே இரு சாரார்க்கும் தங்கள் கொள்கைகளை உறுதிப்படுத்தும் ஊன்றுகோலாகிப்  போகிறது.

மனிதன் பயமற்ற வாழ்க்கை வாழவே முடியாதா?

ஏன் பயமற்ற வாழ்க்கை வாழ முடியாது?

பிறக்குமுன் சொந்தமேது, சொத்து ஏது அல்லது ஆசைதான் ஏது? பிறப்பெடுத்த கணத்தில் இருந்து சொந்தம், சொத்து, ஆசைகள் மனிதனிடம் ஒட்டிக்கொள்கிறது. பிறப்பிற்கு முன்னர் காரணப்பொருளாய் இருந்த உயிர், பிறப்பெடுத்தவுடன் உடலுக்குள் நின்று  காரியப்பொருளாய் மாறிவிட்டது. அத்தனைக்கும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் பிறப்பெடுத்த உடலுக்கு இருக்கிறது. 

ஆசைகள்தான் துன்பத்தின், பயத்தின்  ஆணிவேர் என்கிறார் திருமூலர்.

ஆசையை விட்டொழியுங்கள். அது நீ வணங்கும் ஈசனோடு சேரும் ஆசையாக   இருந்தாலும் விட்டுவிடுங்கள். ஆசையினால் வருவது துன்பம். ஆசையின்மையால் வருவது ஆனந்தம்.

திருமந்திரம் - 2615

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் 
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் 
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்  
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.   

எதன் மீதும் உள்ள பற்று நீங்கும் போது கூடவே பயமும் நீங்கி விடுகிறது.

நீங்கள் நேசிக்கும் ஒருவர் எங்கு உங்களை விட்டு நீங்கி விடுவாரோ என்ற பயம், அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்று உள்ளவரைதான். பற்று நீங்கினால், அவருடைய எந்த செயல்களும் உங்களை பாதிக்காது. பயமும் இருக்காது.

இறைவனோடு இருக்கும் பற்றை அவிழ்ப்பதற்கும் வழி சொல்லுகிறது  திருமந்திரம்.

உன்னுடைய உடலே கோயில். உள்ளமே அங்குள்ள ஆலயம். வாயே ஆலயத்தில் உறையும் இறைவனின் கோபுர வாசல்.உன்னுடைய உயிரே சிவலிங்கம். ஐந்து புலன்களும் கோயிலின் மணி விளக்குகள்.

திருமந்திரம் - 1823

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் 
வள்ளல் பிரானாற்கு  வாய் கோபுரவாசல் 
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம் 
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. 

இங்கே, கடவுள் இருக்கு, இல்லை என்ற கேள்வியே எழவில்லை.

இறைப்பற்றற்ற,  பயமற்ற மூன்றாம் நிலை, தெளிந்த நிலை.

சாதாரண மக்களுக்கு இந்த தெளிவு நிலை ஏற்படாமல்  பார்த்துக்கொள்வதுதான் பகுத்தறிவுவாதிகளும், ஆத்திகவாதிகளும் தங்களின்  தலையாய கடமையாக செய்து கொண்டிருக்கிறார்கள். 

கோயில் என்பது அறநிலையம். இன்னொருவகையில் சொல்வதானால், சாதாரண மக்களுக்கு  அறம்  கற்பிக்கும் தொடக்கப்பள்ளி. மேற்படிப்பு படித்து பட்டம் பெற்றவர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு  கற்பித்து வழிகாட்ட வேண்டுமானால் செல்லலாம். 

இவ்வாறு இருப்பவர்கள் உடலிலே இறைவனே குடிகொள்வான்.

திருமந்திரம் - 2671

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்  
கண்ணுமா யோகக்  கடவுள் இருப்பது 
மண்ணு நீர்அனல் காலொடு வானுமாய்  
விண்ணும் இன்றி வெளிஆனோர்  மேனியே.

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் தாண்டி விண்ணும் தடையாக இல்லாமல் இருப்பவர் உடலில், உண்ணும் உணவின் உணர்வாகவும், உடலாகவும், உயிராகவும் யோகத்தை கொடுக்கக்கூடிய கடவுள் குடி இருப்பார்.


*** *** *** *** ***

 


 




No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...