மறுசுழற்சி
மீன் தொட்டியில் வண்ண மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன, சில மீன்கள் வேகமாகவும், சில மீன்கள் மெதுவாகவும்.
மீன்களின் கழிவுகள் நீரின் அடியில் சேர்ந்திருந்தது.
மீன்களுக்கு கழிவறை, உணவறை, பள்ளியறை என்று அனைத்தும் அந்த நீருக்குள்தான். யோசிக்க, யோசிக்க மீன்களை நினைத்து அனுதாபமாக இருந்தது. மீன்தொட்டியில் உள்ள மீன்கள் மட்டுமல்ல, கடலில் மீன்கள் இருந்தாலும் இதே நிலைதான் என்று எண்ணம் விரிந்து கொண்டே போனது.
மனிதனுக்கு மட்டும் நல்ல தெம்பூட்டும் புதிய காற்று, தெளிந்த நீர், வகை வகையான தானியங்கள், பழங்கள், தேன், இறைச்சி, போதாதற்கு போதை தரும் மது வகைகள். மனைவி, மக்கள், நண்பர்கள், உறவினர்கள், ஒரே இனம், ஒரே ஜாதி என்று ஆண்டு அனுபவிக்க ஏராளமான காரணிகள்.
கொஞ்சம் நில்லுங்கள். என்ன சொல்ல வந்தேன்.. புதிய காற்று?
ஆதியில் பூமி தோன்றிய நாள் முதல் இருப்பது காற்று. பூமியில் காற்று குறையவும், நிறையவும் வாய்ப்பில்லை. புதியதாக காற்றைத் தயாரிக்க எந்த அறிவியலும் சொல்லித்தரவில்லை.
இந்த வினாடி, நாம் சுவாசிக்கும் காற்று, பல பல கோடி உயிர்கள், நாயோ, நரியோ, பூனையோ யானையோ சுவாசித்த காற்றின் மறு சுழற்சிதானே!
தெளிந்த நீர். நீர் மட்டும் ஆதியில் இருந்ததைவிட கூடவும், குறையவும் கூடுமோ?
பல உயிர்கள் நீரினை உண்டு, வெளியேற்றியதன் மறு சுழற்சிதானே நாம் உட்கொள்ளும் நீர். செயற்கையாக மறுசுழற்சி செய்த நீரினை செடிகளுக்கும், சுத்தம் செய்வதற்கும் உபயோகிக்கிறோம்.
ஆனால், நாம் குடிக்கும் நீர், மீன்கள் மற்றும் பல கோடி உயிரினங்கள் உபயோகித்து வாழ்ந்த நீரின் மறுசுழற்சிதானே.
எண்ணிலடங்கா உயிர்கள் மண்ணில் பிறந்து, வாழ்ந்து மண்ணிலே மக்கி மறைந்த மண்ணில் விளைந்த தானியங்கள், கனிகள், காய்கள், கிழங்குகள் என உண்டு மகிழ்கிறோம்.
இதில், தொட்டியில் உள்ள மீன்களைப்பார்த்து பரிதாபம் கொள்வதில் என்ன ஆகப்போகிறது.
நம் உயிரே பல பிறவிகளை கடந்து வந்த மறுசுழற்சிதானே!
கடந்த பிறப்பில் தாயாக இருந்தவள் இந்த பிறப்பில் அவள் மகளுக்கே மகளாக பிறக்கலாம். யார் தீர்மானிப்பது, யார் வயிற்றில் யார் பிறப்பதென்று?
இங்கே ஒரு முக்கியமான உருமாற்றத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
முதலில் மறுபிறப்பு என்ற ஒன்று உண்டா என்பது. மற்றொன்று, மீண்டும் பிறந்தால் மனிதனாகவே பிறப்போமா என்பது.
திருமூலர் மீண்டும் தான் மறுபிறப்பெடுக்குமுன், சுத்த வெளியில் ஒளி உடலில் எண்ணற்ற கோடி வருடங்கள் இருந்ததாகவும், வானிலுள்ள தேவர்கள் அவரை போற்றித் துதிக்கும் வகையில் இருந்ததாகவும், நந்தியம்பெருமானின் காலடியில் இருந்ததாகவும் சொல்கிறார்.
திருமந்திரம்
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
'நீயோ சித்தர் பரம்பரை. பிறவிச்சுழலில் சிக்கிய மறுபிறப்பாளர்கள் என்பது முன்னர் மண்ணில் வாழும்போது தவம் மேற்கொள்ளாதவர்கள். எப்படி உனக்கு மறுபிறப்பு கிடைத்தது?' - என்று யாரும் கேட்குமுன்னரே பதிலையும் தருகிறார்.
'இறைவன் தன்னைப் பற்றி உலகறிய செய்து, தவ வாழ்வின் மெய்ப்பொருளை உணர்த்த, தமிழில் பாட சொல்லி மறுபடியும் படைத்துவிட்டான்' - என்கிறார்.
திருமந்திரம்
பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.
அடுத்து வருவதுதான் திருப்பமே.
உயிருக்கு மரணமில்லை, மீண்டும் மீண்டும் பிறந்திருக்கும்.
உண்மை. உயிருக்கும் ஒரு ஆரம்பம் இருந்திருக்க வேண்டுமல்லவா? அதுவும் காலத்தைப்போல், 'எப்பொழுது ஆரம்பித்தது? எப்பொழுது முடியும்?' என்ற முடிவற்ற எல்லை நோக்கி பயணிக்கிறது.
ஆதியில் இறைவன் தோன்றிய கணமே, உன்னுடைய உயிரும் தோன்றி விட்டது. உயிருடன் இச்சா சக்தி இணைந்தே தோன்றி இருக்கிறது. இச்சா சக்தி இல்லை என்றால், உயிருக்கு வேலையே இல்லை. உயிரும், இச்சா சக்தியும் இறைவன் இருப்பதை அறிவதில்லை. ஒரு வேளை இறைவனை அறியும் பட்சத்தில் உயிரும், இச்சா சக்தியும் இறையுடன் கலந்து விடும்.
திருமந்திரம்
பதி பசுபாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசுபாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதி அணுகிற் பசுபாசம் நிலாவே.
சரி, நாம் நம் உயிரின் மறுசுழற்சிக்கு வருவோம்.
நம் உயிர், ஆதியில் இறைவன் தோன்றும்போதே அவனுடன் தோன்றியது. பல பல கோடி ஆண்டுகள், பலவிதமான உடல்களைப் பெற்று இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறது.
தொடர்ந்து நம் உயிர் மறுசுழற்சிக்கு ஆட்பட்டிருக்கிறது.
போனது போகட்டும், இனி வருவதைப்பார்ப்போம்.
மரணம் எப்படி நிச்சயமோ, மறுபிறப்பும் நிச்சயம் என்று அறிந்து கொண்டோம். மீண்டும் பிறந்தால் குறைந்தபட்சம் மனிதனாக பிறக்க வேண்டும். வாழ்வாங்கு வாழ்ந்து தேவர் ஆவதெல்லாம் சாத்தியமில்லை. பதிமூன்று வருடங்கள் அஷ்டாங்க யோகம் செய்து, சித்தர் ஆவதெல்லாம் நமக்கு முடியுமா என்ன?
இறைவன் மீண்டும் உன்னைப் படைக்கும்போது நீ இந்தப்பிறவியில் செய்த நல்வினை, தீவினைக்கேற்ப உடலைத்தருகிறான்.
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு.. ..
உன் உயிரின் மறுசுழற்சியை நீதான் தீர்மானிக்கிறாய். மனிதனா, மாடா, நாயா என்பதை பூமியில் வாழும்போது நீ செய்யும் கர்ம வினைகள்தான் தீர்மானிக்கிறது.
இறைவன் மறுசுழற்சியை செய்து முடிக்கிறான்.
அஷ்டே..
*** *** *** *** *** ***
No comments:
Post a Comment