Tuesday, April 9, 2024

உணவே உயிர்

உணவே உயிர் 


சமீப கால இளவயதினரின் மரணங்கள் சமுதாயத்திற்கு பெரிய சவாலை விட்டு செல்கிறது. மரணங்களுக்கான  காரணம் என்னவென்று  தெளிவாக யாராலும் சொல்ல முடியவில்லை.  அவர்களின் குடும்பங்களில் இந்த மரணங்கள் விட்டு செல்லும் ரணங்கள் ஆற்றமுடியாதவையாக உள்ளது. பெருந்தொற்று விட்டு சென்ற காயங்களே இன்னும் ஆறாத நிலையில், அகால மரணங்கள் நிறைய குடும்பங்களின் வாழ்க்கையை  கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

கடந்த  வாரம், நடுத்தர வயதுடைய பெண், தன்னுடைய பதினோறாம் வகுப்பு படிக்கும் மகள், பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுடன் சென்னையிலிருந்து கோவை வந்து ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். கடன் தொல்லையால் கணவன் குடும்பத்தை விட்டு சென்றதால், அபலையான பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளுடன் வாழ வழி தெரியவில்லை. கடன் தொல்லை  வேறு. 

என்னுடைய சிந்தனை எல்லாம், ரயிலில் பயணம் செய்யும்போது யாருமே இவர்களுடன் பேசவில்லையா? பசித்திருக்கும் மூவரின் நிலை புரியவில்லையா? என்பதுதான். எட்டு மணி நேர பயணத்தில் இவர்களை சுற்றி எத்தனை பேர் பயணித்திருப்பார்கள், உண்டிருப்பார்கள்.

பசியும், மரணமும்  பொதுவானது. ஜாதி, மதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லை. ஆண்டிக்கும் பசிக்கும் அரசனுக்கும் பசிக்கும். பேதைக்கும்  மரணமுண்டு ஞானிக்கும் மரணமுண்டு.

பசி ஆரம்பம்; மரணம் முடிவு.

பசி வேளையில், அனைவருடன் பகிர்ந்துண்ணுங்கள். வேண்டியவர், வேண்டாதவர்  என்று பிரித்து பார்க்க  வேண்டாம். பசித்து களைத்து வருபவர்களை பார்த்து அவர்கள் பசியாற உணவளித்து உண்ணுங்கள். மீதமான சமைத்த பொருட்களை வைத்திருந்து மீண்டும் மீண்டும்  உண்ணாதீர்கள். உணவில் நாட்டம் இருப்பது இயற்கை. அதற்காக பொறுமையாக சுவைத்து உண்ணாமல் அவசர அவசரமாக உண்ணாதீர்கள். காகத்தை பாருங்கள், உறவுகளை அழைத்து உண்ணுகிறது, அவ்வாறே நீங்களும் உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள். பசித்த பின், உண்ணும் நேரம் பார்த்து உண்ணுங்கள்.

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் 
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின் 
வேட்கையுடையீர் விரைந் தொல்லை உண்ணன்மின் 
காக்கை  கரைந்துண்ணும் காலம் அறிமினே.
 

யாரோ ஒருவர்,  அவர்களுடன் பேசி  கொஞ்சம் உணவளித்து இருந்தால் அவர்கள் கோவையில் எப்படியாவது உயிர் பிழைத்திருக்கலாம்.

இறை நம்பிக்கையுடன்,  கடவுளின் படம் வைத்து வணங்கும், கோயில்களுக்கு எவ்வளவோ செய்கிறோம். அவை எதுவுமே இந்த மாதிரி நடமாடும் கோயில்களான, மனிதர்களுக்கு சென்றடைவதில்லை. ஆனால், வாழ வழி தெரியாமல் மயங்கி நிற்கும் நிராதரவான மனிதர்களுக்கு  கொடுக்கும் ஆதரவும், பொருளும் நேரடியாக இறைவனையே  சென்றடைகிறது.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

காலத்தால் அழியாத அற வாழ்வு வாழ வழி வகை காட்டி சென்ற திருமூலர் போன்ற சித்தர் பெருமக்களை போற்றி வணங்கி அவர்கள் காட்டிய வழியில் நடமாடும் கோயில்களான சக மனிதர்களுக்கு உதவி வாழ்வோம்.

*** *** *** *** ***



No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...