Thursday, January 25, 2024

இறைவன் இருக்கின்றானா?

இறைவன் இருக்கின்றானா?  


பிராண பிரதிஷ்டா.

உயிர்களை  படைத்த இறைவனுக்கு உயிர் கொடுக்கும்(?) விழா பிராண பிரதிஷ்டா. 

அயோத்தியில் இறைவனை குடி அமர்த்தி விட்டார்கள்.  இனி அவர் அங்கே இவர்கள் கொடுக்கும் உணவினை உண்டு  குடித்தனம் செய்ய வேண்டியதுதான். 

வால்மீகியின் கதாநாயகன் ஒரு ஸ்த்ரீலோலன். புலால் உண்பவன். அரச குணமிக்கவன்.  வடமொழி காவியத்தை  தமிழாக்கிய கம்பனின் கதாநாயகன் ஒரு ஏகபத்தினி விரதன். புலால் மறுப்பவன், அரசனை மிஞ்சிய தேவ புருஷன்.

ஆச்சர்யத்தை பார்த்தீர்களா, கெட்டவன் என்று சொன்ன காவிய நாயகனை  வடமாநில மக்கள் கொண்டாடுகிறார்கள்.நல்லவன் என்று சொல்லிய நாயகனை  தென் மாநில மக்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

ராமனை விட்டுத்தள்ளுவோம். மனிதனாய் பிறப்பெடுத்த எவருமே  இறைவனில்லை என்பதே நம் கோட்பாடு. அது கண்ணனானாலும், ஏசுவானாலும் அல்லது முஹம்மது நபி  ஆனாலும் சரிதான்.

இறைவன் உண்டு என்று சொல்லும்போதே அதன் மறுபக்கமாக இல்லை என்ற பிரதிபலிப்பு  உருவாகிவிடுகிறது. இல்லை என்று சொல்லும்போது உண்டு என்ற பொருள் உருவாகிவிடுகிறது. எனவே, இறைவன் இருக்கின்றானா, இல்லையா என்ற வாதம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. உண்மையில் இந்த  இரண்டு நிலையையும் தவிர்த்து ஆனந்தமயமாக  வாழும்  வழி அறிந்தால், இறைவன் உன்னுடன் அந்த இன்பத்தினூடே  இருப்பான்.


திருக்களிற்றுப்படியார்

உண்டெனில் உண்டாகும் இல்லாமை; இல்லைஎனில்
உண்டாகும்; ஆனமையின் ஓரிரண்டாம் - உண்டு இல்லை
என்னும் இவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை
உன்னில் அவன் உன்னுடனே ஆம். 36

இறைவன் இருக்கின்றான் எனில் அவன் எங்கே வாழ்கிறான்?  உன்னுடைய உள்ளம்தானே அவனுடைய வீடு, வேறு ஏதாவது இடத்தில் அவன் வசிக்கிறான் என்று சொல்ல முடியுமா? அவனுடைய வீடு உன்னுடைய உள்ளம்தான் என்று தெரிந்த பின்னரும் அவனை வெளியே  வசிக்கும் ஆளாக  எண்ணி அவனைத் தேடுகின்றாயே?

திருமந்திரம் - 2650 

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை 
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்? 
அவனுக்கு அவன்இல்லம் என்றென்று அறிந்தும் 
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.


*** *** ***


No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...