Thursday, January 4, 2024

ஆசை அலைகள் ஓய்வதில்லை

ஆசை அலைகள் ஓய்வதில்லை



கருஞ்சிவப்பில் கீழ் வானம். 

இரவும் பகலும் கைகுலுக்கிக்கொள்ளும்  அதிகாலை வேளை.   

சிட்னியிலிருந்து அதிகாலை புறப்பட்டு மெல்போர்ன் செல்லும் விமானத்தில் இருந்து பார்த்தபோது, மேகங்கள் செம்பஞ்சுப்  பொதிகளாய்  தேவர்கள் உறங்கும் பள்ளியறை மெத்தையைப்போல் தோற்றமளித்தது. 

கதிரவனின் கதிர்கள் பாயாத இடங்களில் இன்னும் கருமை. நேரம் ஆக ஆக, செம்பஞ்சுப்பொதிகள் எல்லாம் வெண்பஞ்சு மெத்தைகளாக மாறியது. வானத்தில்  மேலே மேலே  போனாலும்,  மேகத்திற்கும்  ஓர் எல்லையுண்டு என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

மனித உடலில் இல்லாத தேவர்கள் பள்ளி கொள்ளலாம். உடலெடுத்த எவரும் மேகத்தை மெத்தையாக்கக்கூடுமா? நான்  அதன்மேல் படுத்தால் என்ன ஆகும்? சின்ன ஆசைதான். சிதறி சின்னாபின்னமாகிவிட மாட்டேனா?

ஆசைதானே அத்தனைத் துன்பங்களுக்கும் விளை நிலம். 

ஆனால், இந்த ஆசை எங்கிருந்து பிறக்கிறது?

ஆசையைப்பற்றி அறிய நாம் சுத்த மாயைக்குள் செல்ல வேண்டியதிருக்கிறது. ஆதி அந்தமற்ற இறைவன் தோற்றத்தின் போதே, இறை அம்சமாக  உயிரினங்களும் தோன்றியது. இறைவனை பற்றாத  இச்சா சக்தி அல்லது ஆசை உயிரிகளின் அடிப்படைக் குணம் ஆகியது.

திருமந்திரம் - 115

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் 
பதியைப் போல்பசு பாசம் அநாதி 

உயிரும் பாசமும் பின்னிப்பிணைந்தவை. உயிர்கள் ஆதி இறைவனை அணுகாத அளவிற்கு இந்த பாசம் என்னும் உலக ஆசை பார்த்துக்கொள்ளும். ஒரு வேளை, பற்றறுத்து தவத்தின் மூலம் அணுக நேர்ந்தால், இறைவனோடு ஒன்றாக கலந்து விடும்.

பதியை சென்றணு காப்பசு பாசம் 
பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

ஆசைகள் மனிதனிடம் மூன்று முக்கிய நிலைகள் கொண்டுள்ளது. இதனை ஏடணை என்னும் சித்தர்கள், தாரவேடணை, புத்திர்வேடணை மற்றும் அர்த்தவேடணை  என்று மூன்று பகுதிகளாக சொல்கிறார்கள்.

தாரவேடணை என்பது பெண்ணாசை, ஆணாசை அல்லது உடல்மேல் ஏற்படும் ஆசை.

புத்திர்வேடணை என்பது குழந்தைகள், குடும்பம், உறவினர் மீது ஏற்படும் ஆசை.

உலக பொருட்கள், புகழ், அதிகாரம் போன்றவற்றின் மீது ஏற்படும் ஈர்ப்பு அர்த்தவேடணை

எப்படி இந்த ஆசைகளில் இருந்து விடுபடுவது? சாதாரண காரியம் அல்லவே இந்த மூன்று ஆசைகளையும்  உதறுவது.

திருவள்ளுவர் அதற்கு ஒரு வழி சொல்கிறார்.

திருக்குறள் - 350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்  
பற்றுக பற்று விடற்கு. 

இச்சா சக்தி இல்லாதவன் இறைவன், அதாவது எந்த பற்றும் இல்லாதவன். அவனுடன் சேரும் ஆசையை பிடித்துக்கொள்ளுங்கள். அதுவே, எல்லா ஆசைகளையும் உதறுவதற்கு உறுதுணையாக அமையும்.

ஒரு படி மேலே சென்று திருமூலர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

திருமந்திரம் - 2615

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் 
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் 
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் 
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

ஆசையே படாதீர்கள். இறைவனோடு சேரவேண்டுமென்றுகூட ஆசைப்படாதீர்கள். ஆசையே துன்பத்தின் விளைநிலம். ஆசையை விடுவதே இன்பத்தின் ஆரம்பம்.

ஆசையற்றவன் ஆதி இறைவன். ஆசையற்றிருந்தால் நீயும் இறைவனே!

ஆசையின் அலைகள் கடலலைகளை விட அதிக வலிமை பெற்றிருக்கிறது.

ஆசை அலைகள் என்றும் ஓய்வதில்லை.

*** *** ***








No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...