Thursday, December 28, 2023

பூவா? தலையா?

பூவா? தலையா? 




'பூவா? தலையா?'

பூவும் விழலாம்.. தலையும் விழலாம்..

ஒரு முறை சுண்டினால் இரண்டு வாய்ப்பு.  பூ அல்லது தலை.

இரண்டு முறை சுண்டினால் வாய்ப்பு நான்கு.

இப்படியே தொண்ணூற்றாறு முறை சுண்டினால் 79228 பில்லியன் வாய்ப்புகள்.

உலகத்தின் மக்கள்தொகை சுமார் 7.9 பில்லியன்.

ஒரு மனித உயிரியின்  குணம் பத்தாயிரம்வரை  மாற வாய்ப்பு.

[மேற்படி கணக்கில் சந்தேகம் இருப்பவர்கள் Chat GPT-யிடம் கேட்டு சரி பார்த்துக்  கொள்ளுங்கள்.]

இங்கே முக்கிய காரணியாக நாம்  பார்ப்பது 96. இந்த எண்ணிக்கை மனித உயிரியின் வாழ்க்கை தத்துவமாக சித்தர்கள் அறிந்து சொல்லி இருப்பது.

மண்ணில் வாழும் சூழலில் உயிர்களுக்கு ஏற்படும் அனுபவப்பதிவுகள், இந்த 96 தத்துவங்களின் ஏற்ற இறக்கங்களினால், அந்த உயிரி தனித்தன்மை, தனிக்குணம்  பெற்று விடுகிறது.

பெற்றவரின் குணம் பிள்ளைக்கில்லை; ஓர் வயிற்றில் பிறந்தாலும் பிள்ளைகளின் குணம் ஒன்றுக்கொன்று  ஒன்றுவதில்லை; ஒருவரைப்போல் இன்னொருவர் இவ்வுலகில் இல்லை.

ஆதி இறைவனைப்போல் உயிரிகள் ஆதியில் சுத்த மாயையில் தோன்றி இருந்தாலும், 96 தத்துவங்களைக்கொண்டு வாழ்வதால், வாழ்வின் அனுபவம் ஒவ்வொருவரையும் ஒரு தனித்தீவாக்கி விடுகிறது. 

சுத்த மாயையில் உதிக்கும் உயிர் அசுத்த மாயையில் வாழ ஆரம்பிக்கும்போது குணாதிசயங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை பிடித்த உணவு இன்னொரு சந்தர்ப்பத்தில் பிடிக்காமல் போய் விடுகிறது. முதலில் விழுந்து, விழுந்து காதலித்து மணம் முடித்த  பெண்ணைப் பின்னர் பார்க்கக்கூட  சகிப்பதில்லை.

பரசிவன் தன்னருளால் சக்தியுடன் சேர்ந்து உண்டாகும் விந்துவில் உருவாகிய  உயிர்கள் அனைத்தும் ஆதியில் ஒரே குணம் கொண்டவை. அங்கே உயிராக இருப்பது இறைநிலை. உயிர்கள் அசுத்த மாயையில் வாழ ஆரம்பிக்கும்போது, மாயையுடன் கூடிய  மும்மலங்கள் உடலை  ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது. 

இறைவன் மானிட உடலில் உயிராக, ஆன்மாவாக உறைந்திருப்பதுவே  அடிப்படைத் தத்துவம் ஆகும்.

மனிதன் படைத்த கடவுள்களால் சமுதாயத்திற்கு எந்தப்பலனும் இல்லை. சமுதாயம் சடங்குகள், சம்பிரதாயங்களில் மூழ்கி உண்மை உணர்வற்று மாய்கிறார்கள்.  பிறப்பும், இறப்பும் மனிதனின் கைகளில்லை. வாழ்நாள் முழுதும், இறைநிலை பற்றிய  மயக்கத்திலேயே  வாழ்ந்து மறைந்தும்  போகிறார்கள்.

உண்மை நிலைதான் என்ன?

பகல் வேளையில் நீர் நிரம்பிய குடங்களில் எல்லாம் கதிரவன் தோன்றி இருப்பான். அவனை குடத்துக்குள்ளேயே  வைத்து மூடிவிடலாம் என மூடினால் குடத்துக்குள் அடங்கி இருக்க மாட்டான். அவ்வாறே, விஷத்தை உண்ட இறைவனும், ஒவ்வொரு உடலிலும் மேவி நிற்கின்றான். அவனை உடலில் அடைத்து வைப்போம் என்றெண்ணுவது கைகூடாது என்றும் அறியவேண்டும்.

திருமந்திரம் - 2002

கடம்கடம் தோறும் கதிரவன் தோன்றில் 
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் 
விடம்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றது அப்பரிசு ஆமே. 

உன்னுடைய உடலே இறைவன்  குடி இருக்கும்  வீடு. வேறெங்கும் இறைவன்  தங்குவதுமில்லை. இறைக்கென்று தனி வீடு இருக்கிறதா என்ன? உன்னுடல்தான் அவன்வாழும் வீடென்று தெரிந்த பின்னரும், இறைவனை வேறென்று எண்ணி  வெளியில் தேடி அலைகின்றீர்களே! 

திருமந்திரம் - 2650 

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை 
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்? 
அவனுக்கு அவன்இல்லம் என்றென்று அறிந்தும் 
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.

என்ன மடமை இது.

*** *** ***


No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...