மனதை கேளது சொல்லும்
இளங்காலை வெயில். மென்மையான யூகலிப்டஸ் மணம் கலந்த ஊட்டி மலைக் காற்றும், குளிரும்.
'ஹேனே.. இல்லி பா' - சரித்திர ஆசிரியர் ஜோகியின் குரலுக்கு தேன் சிட்டுக்களாய் பறந்து வந்தார்கள், ஏழாம் வகுப்பு மாணவிகளான சரோஜாவும், பார்வதியும்.
என்னைக்காட்டி, 'இவன, செவந்த்-பி கிளாஸ்ல சேத்தி புடு'.
அவர்களும் செவந்த்-பி கிளாஸ் என்பதால் என்னை சந்தோஷமாக, குன்றின் உச்சியில் இருந்த வகுப்பறைக்கு கூட்டி சென்றார்கள்.
வகுப்பறைக்கு குடிநீர் எடுக்க, குன்றுக்கு கீழே வந்த அவர்களின் உற்சாகமான பேச்சும், கிளு கிளு சிரிப்பும், அதிசயமாக இருந்தது எனக்கு.
'பிக்கண்ணுனே' - செல்லும் வழியில் விக்கிப்பழ மரத்தடியில் கிடந்த பழத்தை பொறுக்கிய பார்வதி சத்தம் போட்டாள்.
'எனகா.. எனகா ' - சரோஜா கெஞ்சினாள்.
எனக்கு படுகு மொழி தெரியாது. ஆனால் அவர்கள் பேசியது மனதில் அப்படியே பதிவாகிவிட்டது.
இந்த முதல் நாள் நினைவு மலர்கள் என் மனதில் பசுமரத்தாணிபோல் உயிரில் பதிந்து விட்டது.
இந்த நிகழ்வின் எந்த அம்சமும், அது வெயிலாகட்டும், குளிராகட்டும், மணமாகட்டும், சிறுமிகளாகட்டும் வாழ்வில் அதனை ஒத்த நிகழ்வுகள் வர நேரிட்டால், மனம் பாய்ந்து அங்கு ஒரு நிமிடம் வாசம் செய்துவிட்டு, அங்கிருந்து எண்ணங்கள் மனதில் கிளை விட்டு வளரும்.
மனதின் தன்மையே அதுதான்.
கடனே என்று எதையோ செய்து கொண்டிருப்போம். அந்த செயலின் விளைவுகள், மூளையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனுபவப்பதிவுகளுடன் ஒன்றும்போது, அந்த அனுபவ நிகழ்வை எடுத்து வைத்து மனம் அசை போடும். சிறு மயிரிழை அளவு ஒத்துப்போகும் செயல்களை கூட மனம் விட்டு வைக்காமல் தாவி விடும்.
மிகுந்த சிரமப்பட்டு தியானத்தில் அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்கும் வேளையில், ஊதுபத்தி மணம்கூட, முப்பது வருடங்களுக்கு முன்னர் சுவாசித்த மணத்துடன் ஒத்துப்போனால், மனம் அங்கே போய் நின்று நம் தியானத்தை கேலிப்பொருளாக்கும்.
இவ்வாறு தொடரும் எண்ண அலைகள் மனதை ஓரிடத்தில் நில்லாமல் தொடர்ந்து திசை திருப்பிக்கொண்டே இருக்கும்.
அனுபவ நினைவுகளுடன் எண்ண அலைகளை ஒப்பீடு செய்ய விழி, செவி, மூக்கு, வாய் மற்றும் மெய் முதலியன மனதிற்கு தொடர்ந்து கொடுக்கும் செய்திகள் முக்கிய காரணிகளாக அமைகின்றன. கூடவே, புதிய அனுபவங்களை மூளையில் சேமித்து வைக்கவும் செய்கிறது.
மனிதனுக்கு இன்பத்தை கொடுக்கும் இதே காரணிகள்தான் துன்பத்திற்கும், மயக்கத்திற்கும் காரணமாகின்றன.
புலன்களுக்கு, புறக்காரணிகளால் கிடைக்கும் இன்பம், சிற்றின்பம் என்னும் போகம். அகக்காரணிகளால் கிடைக்கும் இன்பம், பேரின்பம் என்னும் போதம்.
போதம் என்பது ஞானம். விழிப்புணர்வில் மெய்யுணர்வு, மெய்யறிவு பெற்று துரிய நிலையில் பெரும் பேராஇயற்கை அல்லது முடிநிலை. இந்நிலையே சுத்தம் எனப்படும்.
இதுவே ஆன்மா சுத்த நிலையில் பெரும் போதம் என்னும் ஆனந்தமாகும்.
உண்மை விளக்கம் - 1
பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதாநந் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய்! விண்ணப்பம்;- பொய்காட்டா
மெய்யா! திருவெண்ணை வித்தகா! சுத்த வினா
ஐயா!நீ தான்கேட் டருள்.
ஆன்ம தத்துவங்கள் 24, வித்யா தத்துவங்கள் 7, சிவ தத்துவங்கள் 5 என்னும் முப்பத்தாறு தத்துவங்களில், ஆன்ம தத்துவங்கள் பொய்யான, நிலையில்லாத இன்பம், துன்பம், மயக்கம் என்னும் மூவுணர்வுகளைத்தருகிறது.
புலன்களால் பெறப்படும் இந்தப்பொய்யான மாயை அகலும்போது போதானந்தப்பொருள் வெளிப்படுகிறது.
இறை நிலை, ஜோதியாய், அறிவாய் வெளிப்பட்டு இன்பம் வழங்குவதே போதானந்தப்பொருள். இதனையே, துரிய அருள் நிலை என்றும் துரியாதீத ஆனந்த நிலை எனவும் சொல்வார்கள்.
திருமந்திரம் - 1459
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
வோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுத் தறியாமே.
போதானந்த வேளையில், மலரின் மொட்டுக்குள் மணம் அடங்கி இருப்பதுபோல், ஜீவனுக்குள் அடங்கி இருக்கும் இறை மணம் வெளிப்படும். தியானத்தில் துரிய நிலையில், மெய்யுணர்வில் நிற்பவரின் சுழுமுனை நாடியில் கஸ்தூரி மணம் பரவி நிற்பதைபோல் இறைமணம் பரவி நிற்பதை உணர்ந்தின்புறுவார்கள்.
கேவல நிலை என்னும் பிறப்பின் முன்னரும், சுத்த நிலை எனப்படும் இறப்பின் பின்னரும் இல்லாமல் சகல நிலையில் இருக்கும் நாம் எவ்வாறு போதானந்தப்பொருள் பெறுவது என்ற கேள்வி மனதில் தோன்றுகிறதல்லவா?
அதற்கான பயிற்சி இதோ!
எளியமுறை நான்கு படிகள்:
1. குறைந்த பட்சம் ஒரு முப்பது நிமிட நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி.
2. காயகற்ப பயிற்சி அறிந்திருந்தால், காயகற்ப பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
3. தியானப்பயிற்சி துவங்குமுன்னர் ஒரு பத்து நிமிடம் பிராணாயாமப் பயிற்சி.
4. தியானம்:
முதலில், நம் புலன்களை கருத்தில் கொண்டு அவற்றை அகத்தின் உள்ளே நிலை பெறுமாறு தியானப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆக்கினையில், புருவ மத்தியில் இருக்கும் இறை நிலையை மனதில் எண்ணுங்கள். அங்குள்ள ஜோதியை கண்களில் உள்முகமாக கண்டு உணர தலைப்படவும். அங்கு எழும் நாதத்தை காதுகளால் கேட்கவும். அந்த ஆகுதியில் உண்டாகும் மணத்தை முகருங்கள். அண்ணாக்கில் வழியும் அமிர்தத்தை உண்பதாக கருத்தில் கொள்ளுங்கள். உடலின் ஒவ்வொரு சிற்றறையிலும் பேரானந்தம் பரவுவதை, இந்நிலையில் சிந்தித்திருங்கள்.
பேரானந்த நிலையில் இருப்பதை பதினைந்து நிமிடத்திலிருந்து வளர்த்துக்கொண்டே செல்லுங்கள்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
போதானந்தமும் மனப்பழக்கம்.
*** *** ***
No comments:
Post a Comment