Wednesday, December 13, 2023

தீதும் நன்றும் மனம் தரும் மாயை

 தீதும் நன்றும் மனம் தரும் மாயை 



மரணத்தில் மாயும்  மனம் 
ஜனனத்தில் மீண்டும்   வரும் 
மாய்வதும் மீள்வதும்  மாயை.
                                               
பிரபஞ்சம் அடங்கி நிற்பதும், ஆரம்பித்து வளர்வதும்  மாயை.

திருமந்திரம் - 177

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே 
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் 
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் 
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. 

தினந்தோறும் கிழக்கில் உதயமாகும் சூரியன், மாலையில் மறைகிறது. துள்ளிக்குதித்தோடும் கன்றாய் நம் முன்னே தோன்றும் எருது சில நாட்களில் மூப்பெய்தி நம் கண் முன்னே இறந்தும்  போகிறது. இவைகள், தொடர்ந்து மனித வாழ்வில் தோன்றும் உண்மை நிகழ்வுகள். ஆனால், அவை நம் கண் முன்னே தோன்றிய மாயா நிகழ்வுகள் என்று ஏனோ எண்ணத்தோன்றுவதில்லை.

நாம் பிறக்கும்போது, நம்முடன் இருந்தவர்கள் அனைவரும் இன்று நம்மோடு இல்லை. வந்து போகும் அவர்களின் நினைவுகள் நாட்போக்கில் நின்று விடும். வரும் நாட்களில் இந்த மண்ணில் நாம் வாழ்ந்ததற்கான நம் எச்சங்களும் அவ்வளவுதான். சில வருடங்களில்,  காலம்  எல்லாவற்றையும்  துடைத்தழித்துவிடும். 

மானிடம் ஒடுங்கி நிற்பதும், பிறந்து வளர்வதும் மாயை.

நாம் மாயா உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணரச் செய்வது மனம். இந்த உணர்வு நிலை தருவதுதான் விழிப்புணர்ச்சி. விழிப்புணர்வு நிலையில்தான்  போதம் எனப்படும் மெய்யுணர்வும் பெறப்படுகிறது.

உள்ளமே அனைத்துமாய் நிற்கும் மனிதனுக்கு, மரணத்தின் போது அதுவும் மறைந்து மாயை நிலை பெறுகிறது.

மரணத்தில் மாயும்  மனம் 
ஜனனத்தில் மீண்டும்   வரும் 
மாய்வதும் மீள்வதும்  மாயை.

மனமும், மனத்தால் விளையும் கருமங்களுமே பிறவிச்சுழலையும், பிறவிச்சுழலை விடுவிக்கவும் செய்கிறது. ஒருமுகப்படுத்தி செய்யும் தவத்தால் பிறவிச்சக்கரம் நின்று விடுகிறது.

திருமந்திரம் - 81

பின்னைநின்று  என்னே  பிறவி பெறுவது 
முன்னை நன்கு முயல்தவம் செய்கிலர் 
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே.

மானிடர் ஆன்மா மரணம் எய்தாது, மறுபடி பிறந்திருக்கும். இது பொது விதி. நன்றாக முயன்று இறைவனடி சேர தவம் இருப்பவர்கள், வீடு பேறடைந்து, மறுபடியும் மண்ணில் பிறக்க மாட்டார்கள். 

திருமூலர் மீண்டும் பிறந்திருக்கிறாரே! முந்தைய பிறவியில் அவர் தவம் செய்யவில்லையா என்ற கேள்வி எழுகிறதல்லவா? அந்த கேள்விக்கு அவரே, பதில் தருகிறார்.

'இறைவன் தன்னை நன்றாக மக்களுக்கு அறியும்படி செய்வதற்காக, தமிழில் என்னை பாடச்சொல்லி,   பூமியில் மீண்டும் என்னை  பிறக்க வைத்தான்.'

 மனம்தான் அனைத்துக்கும் அச்சாணி என்றால் அந்த மனம் எங்கே இருக்கிறது? 

உடலுக்குள் உள்ளம் இருப்பதாகத்தானே நம் எண்ணம். உண்மையில் உள்ளத்துக்குள்ளேதான் உடல் இருக்கிறது.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்.

உள்ளம் என்னும் பெருங்கோயிலுக்குள் இருப்பதுதான் உடல்.
  
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டதாக எண்ணிக்கொள்ளுமாம். உண்மை, உள்ளம் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுதான் போகும். மீண்டும் பிறப்பெடுத்து உள்ளம் கண் திறக்கும்வரை மாயா உலகமான இந்த பூலோகம் அந்த உயிருக்கு இருள்தான். 

சுத்த மாயையின் அருளால் பிறப்பெடுக்கும் உயிரிகள், முற்பிறவிகளின் வினைப்பயனுக்கேற்ப  உடலெடுக்கிறது. இந்த பிறவியில் நமக்கு கிடைத்திருக்கும் உடல், பல பிறவிகளில் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த நல்வினை, தீவினைக்கேற்பவே  அமைந்திருக்கிறது.

வினைக்கீடாய் மெய்க்கொண்டு.

இவ்வினைகள் அசுத்த மாயையின் தூண்டுதலால் நடைபெறுகிறது. மனித இச்சைகள் அதிகமாக தூண்டப்படும்பொழுது காரியங்கள் சில நேரம் நேர்மறையாகவும், சில நேரம் எதிர்மறையாகவும் நடந்தேறிவிடுகிறது.

இவ்வாறு மனிதனின் செயல்கள், இரு  வினைகள்,  மூன்று நிலையில் தொடர்ந்து  நடந்து கொண்டிருக்கிறது.

முதல் நிலை, நம்முடைய செயல்கள், நாம் விரும்பி செய்ததாக கொள்ளப்பட்டு ஆகாமியம்  என்று சொல்லப்படுவது. உலகில் வாழும் ஒவ்வொரு வினாடியும் இந்தக்கணக்கு விரிந்து கொண்டே செல்லும்.

நம்முடைய செயல்கள் நம்மை சுற்றி சூக்குமமாய்  சூழ்ந்து கொண்டிருக்கும் நிலை சஞ்சிதம் என்று சொல்லப்படுகிறது. மனம் அஞ்சுவதும், மகிழ்வதும் முன்னர் செய்த வினைகள் நம்மை சூழ்ந்து நின்று இயக்குவதால்தான்.

செயல்களின் விளைவு நிலையே, இன்பம், துன்பம் என்னும் மூன்றாம் நிலையான பிராரத்தம் எனப்படுவது. நல்வினைப்பயனாக நல்ல உடலைப்பெற்றவன் பூவுலக வாழ்வினை ஆழ்ந்து இன்பமாய் அனுபவிப்பான். தீவினைப்பயனை சொல்லவே வேண்டாம், உலக வாழ்வில் துன்பம் என்று சொல்லக்கூடிய அனைத்தையும் அனுபவித்து, மேலும் மேலும் தீவினைக்குள் செலுத்திக்கொண்டிருக்கும்.

ஆழ்ந்து சிந்தித்தால், அனைத்துக்கும் மூல காரணம் மாயை என்பது புலனாகும்.

உலகே மாயம். வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.

*** *** ***


 



 
  



No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...