Sunday, April 14, 2024

காலம்

காலம்  


காலம் 

கால தேவன் ஒரு மாயாவி.

நீ நிஜம் என்று நினைக்கும் ஒவ்வொரு வினாடியும் காலதேவனால்  கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வாழ்வில் காலத்தால் கிடைக்கும்  அனுபவம் அனைத்துமே ஒரு நாள்  ஒன்றுமே இல்லாமல் போய்விடக்கூடிய மாயை தான்.

நேற்று என்பது திரும்ப வராது. நாளை என்பது  வரவே வராது.

''நாளை நான் புதிய உடை உடுத்தினால்  சந்தோஷமாக இருப்பேன். அடுத்த வாரம் சம்பளம் போட்டால் சந்தோசம்தான். அவனிடமிருந்து சம்மதித்து  பதில் வந்தால் மனம் குதூகலிக்கும். இந்தப் பரீட்சையில் தேர்வாகிவிட்டால் ஆயுளுக்கும் சந்தோசம்.'' - இப்படியாக ஆளுக்கொரு சந்தோஷ எதிர்பார்ப்புகள்.

நீங்கள் கேட்டது எல்லாம் நடந்ததுதானே. நீங்கள் சொன்ன சந்தோசம் மட்டும் எங்கே போனது? வந்த வேகத்தில் காணாமல் போனது எங்கே?

உங்கள் சந்தோசத்தை கரைத்தது யார்? வேறு யாருமல்ல  காலம்.

காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.

சந்தோஷத்திற்கான   காரணிகளை அடுத்தவர் மேலோ அல்லது   நாளைக்கு, நாளைக்கு  என்று எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களுக்கு அந்த  'நாளை' வராமலேகூட  போய்விடக் கூடும்.

நீ பிறந்ததும்  துடிக்க ஆரம்பிக்கும்  காலக்கடிகாரம் ஒரே ஒரு முறை நிற்கும்.

அப்பொழுது உங்கள் பெயர் போய் விடும். இந்த உடல்தான் நான் என்றிருந்த நிலை மாறிவிடும். ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்து அழுவார்கள். உயிர் நீங்கிய அடுத்த கணமே  உடலை  பிணம் என்று சொல்வார்கள். மேளமடித்து, ஆட்டமாடி  சுடுகாட்டிற்கு கொண்டு சென்று உடலை எரித்துவிடுவார்கள். ஆற்றங்கரையில் இறங்கி நீரில் மூழ்கி எழுவார்கள். நீ இந்த மண்ணில் அவர்களுடன் இருந்த நினைவையும் நீரோடு கரைத்துவிடுவார்கள். 

திருமந்திரம் 

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்  
பேரினை நீக்கிப்  பிணம்என்று பேரிட்டுச் 
சூரைஅம் காட்டிடைக்  கொண்டுபோய்ச்  சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு  அழிந்தார்களே.

நேற்றிருப்பார் இன்றில்லை. இன்றிருப்பார் நாளையில்லை.

காலம்தானே இங்கே சூத்திரதாரி.

காலத்தை கையாள மனிதன் அறிந்து விட்டால்?

காலத்தின் மாயவலையில் சிக்காமல் தப்பி விடலாம்தானே!

பதஞ்சலி முனிவர் தன் யோக சூத்திரத்தில், அஷ்டாங்க யோகத்தினால் சித்திகளை அடையும் ஒருவனால் முக்காலமும் அறிய முடியும் என்கிறார். 

அறியலாம், ஆனால் நிறுத்த முடியாது.

ஓடிக்கொண்டிருக்கும் காலதேவனின் தேர் சக்கரத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

மெய்கண்ட சாத்திரத்தில், முதன்மையான முப்பத்தாறு தத்துவங்களில், ஏழு வித்தியா தத்துவங்கள். வித்தியா தத்துவங்கள்,  ஆன்மா கட்டுண்டிருக்கும்  மாயையை விளக்கக்கூடியது. 

வித்தியா தத்துவங்களில் முதன்மையான மாயா தத்துவம், காலம்.

காலம் ஒரு மாயை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் உண்டோ?

*** *** *** *** *** 











No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...