நோக்கக்குழையும் மனம்
மகிழ்ச்சியாக காத்திருக்கிறேன்.
இளமை முடிந்துவிட்டது.
இதயம் வலிக்க நேசித்தவை ஒன்றுமில்லை என்னுடன்.
ஓரிருவரின் நினைவலைகளில் நான் இருக்கலாம். அதுவும் நிச்சயமில்லை, அவர்கள் நினைவில் நான் இருப்பதால் மட்டும் ஆகப்போவதொன்றுமில்லை.
எனக்கோ நினைத்துப் பார்க்க யாருமில்லை, சந்தோசப்பட எதுவுமில்லை.
மீதமுள்ளவை நாட்களா.. வாரங்களா.. அல்லது மாதங்களா என்றும் தெரியவில்லை.
ஆனாலும், மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.
இனி சொத்து சேர்த்து வைக்க தேவை இல்லை. புகழ், பெருமை மற்றும் அதிகாரத்தை தேடிப்போகவும் அவசியமில்லை.
தேடிய வரை போதும். ஆடிய வரை அனுபவம்.
முழுமையான தேவை அமைதி.. அமைதி.. அமைதி மட்டுமே.
சமாதியில் கிட்டும் அமைதி மட்டுமே அடுத்து எனக்கு ஆனந்தத்தை கொடுக்கும்.
சிறிய சிறிய சந்தோஷத்திற்காக தெரிந்தே செய்த தவறுகள் தண்டனை தரலாம்; தெரியாமல் செய்தவை மன்னிக்கப்படலாம். எதையும் ஏற்றுக்கொள்ள மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.
இதுவரை செய்த நல்ல காரியங்கள் நிம்மதி தரலாம். அல்லது அடுத்த பிறவிக்கு வரவு வைக்கப்படலாம்.
என்னுடைய நல்வினை, தீவினை செயல்களின் படிமம் நிழல்போல் என் மீது படிந்திருக்கிறது. அது என்னை விட்டு எப்பொழுதும் அகல்வதில்லை.
ஒரு வினை நடந்தால், அதற்கான எதிர் வினை நடப்பது இயற்கை. அது எனக்கு மட்டும் நடக்காது என்று நான் நினைத்தால் அது அறிவீனம்.
இப்பிறவியில் நான் பெற்ற உடலில் இருந்து, ஒவ்வொரு நிகழ்வும் என்னுடைய முந்தைய பிறவிகளில் செய்த வினைகளின் எதிர்வினைகளால் நடப்பதுதான். இதை முழுமையாக நம்புகிறேன்; எண்ணிப் பெருமையும் கொள்கிறேன்.
இளமை கொல்லைப்புற வாசல் வழியாக வெளியேறி விட்டாலும் முதுமை இன்னும் வாசல் கதவை தட்டவில்லை. இதுவே மகிழ்ச்சியல்லாமல் வேறென்ன?
இள வயதில் செய்த அத்தனை வேலைகளும் இன்னும் சிறப்பாக, அனுபவ பதிவுகளோடு செய்ய முடிகிறது. வேறென்ன வேண்டும் எனக்கு?
சந்தோஷங்களை கடந்து நிற்கிறது மன மகிழ்ச்சி. மகிழ்ச்சியை தொடர்வது ஆனந்தம்தானே?
மகிழ்ச்சியுடன் ஆனந்தத்தை வரவேற்க காத்திருக்கிறேன்.
சந்தோஷமும், மகிழ்ச்சியும் சின்ன சின்ன இன்பங்களைத் தந்தது. ஆனந்தம் தருவது பேரின்பம்தானே.
அந்த பேரின்பம் சமாதியில்தானே கிடைக்கும்.
அந்த ஆனந்தத்தை பெறுவதற்காக மரணத்தை எதிர் கொள்ள வேண்டுமா என்ன?
தேவையில்லை.
மனம் எங்கே நிலை பெறுகிறதோ பிராணன் அங்கே நிலை பெறுகிறது. எண்ணங்கள் அடங்கிய நிலையில் மனம் சமாதி நிலைக்கு அழைத்து செல்கிறது. மனம் நிலை பெறாத போது எண்ணங்களின் வழியே பிராணனும் வெளியேறிவிடுகிறது. மனதுக்குள்ளே எண்ணங்களை செலுத்தி பிராணனை நிலை நிறுத்தி மகிழ்ந்திருப்போர்க்கு மனதுக்குள்ளேயே ஆனந்தம் பொங்கும்.
திருமந்திரம்
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.
இது அனைவர்க்கும் சாத்தியமான சமாதி நிலை.
எண்ணங்கள் நெறிப்பட நெறிப்பட மனம் அமைதி அடையும். அமைதியான மனதில் பிராணன் மட்டும் என்ன, அந்த இறைவனே குடி கொள்வான்.
சந்தோசத்துடன் மகிழ்ச்சியாக ஆனந்தத்திற்காக காத்திருக்கிறேன்.
மனதில் அமைதி நிலை பெறும்போது பேரின்பம் கிட்டாமலா போகும்?
*** *** ***
No comments:
Post a Comment