தன்னிழல் தனக்குதவாது
சட்டங்கள் அரசனுக்கில்லை
தர்மங்கள் ஆண்டிக்கில்லை
சட்டங்களும், தர்மங்களும்,
தண்டனைகளும் குடிமக்களுக்கே!
இதுதான் இன்றைய சமுதாய நியதி.
'நீ குற்றவாளி' - நீதியரசரின் தீர்ப்பை கேட்ட அந்த பேராசிரியையின் நிலையை சற்று எண்ணி பார்ப்போம்.
'நாளை, 30-04-2024, தண்டனை அறிவிக்கப்படும்.'
குற்றமென்ன?
கூட்டிக்கொடுத்தது. தன்னிடம் கல்வி கற்க வந்த பெண்களின், பொருளாதார நிலையினை சாதகமாக்கிக்கொண்டு, அவர்களின் கற்பை விலை பேசியது.
இந்த சமுதாய சீர்கேட்டை, யார் செய்திருந்தாலும் குற்றம், குற்றமே.
இந்த குற்றப்பின்னணியில் சம்மந்தப்பட்ட மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.
இந்த இளம் பெண்களுக்காக இடையில் இருந்த இடைத்தரகர்கள், அனுபவிக்க இருந்த அதிகார வர்கத்தவர் யாரும் சட்டத்தின் வளையத்திற்குள் வரவில்லை.
யாரை மகிழ்விக்க இந்த குற்றம் நடந்தது?
தனி ஒருத்தியாக இதை செய்திருக்க முடியுமா? செய்ய வேண்டிய அவசியம்தான் என்ன?
இவள் ஒரு கருவிதானே?
இதுவா சமுதாய கட்டமைப்பு? இது எந்த மாதிரியான சமுதாய நியதி?
இந்த ஒரு பேராசிரியை மட்டுமா இடைத்தரகர்களுக்கு இலக்காக இருந்திருக்க முடியும்.
இடைத்தரகர்கள் யாரும் நீதிக்குமுன் காணோம். அனுபவிக்க இருந்தவர்களையும் காணோம்.
ஆனால், இவள் மட்டும் தண்டனைக்குள்ளாவது ஏன்?
இதுதான் இயற்கையின் நியதி.
திருமந்திரம்
கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலத்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.
என்னை யாரும் கவனிக்கவில்லை என்று பலவித குற்றங்களில் ஈடுபடுவார்கள். சிந்தித்து பார்த்தால் நம்மை ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது தெரியும். அவன் நம்முள்ளாகவே, நாமாகவே கரைந்து நமக்குள் இருக்கின்றான். அவ்வாறு இருப்பதை உணர்ந்தவர்கள் குற்றம் செய்வதில் இருந்து விலகி விடுவார்கள்.
ஏழு வித்தியா தத்துவங்களில், காலத்திற்கு அடுத்து வருவது நியதி என்னும் மாயா தத்துவம்.
'இதனையே நுகர்க, ஏனையவற்றை நுகரற்க' என வரையறுத்து நிறுத்துவது நியதி தத்துவமாகும். நியதி தத்துவம் அவரவர் செய்த வினையின் பயன்களை அவரவரே அனுபவிக்குமாறு நெறிப்படுத்தி நிற்பதாகும்.
கட்டு நிலையில் இறைவனது சத்தி தானே நேராக எதனையும் செய்யாது ஏதேனும் ஒரு கருவியைக் கொண்டு அதன் வழியாகவே செய்யும்.
நுகரத்தகாததை அனுபவிக்க எண்ணியதால் பேராசிரியை இன்று ஒரு தண்டனைக்குற்றவாளி.
இறைவனின் நீதி மன்றத்தில் அரசனுக்கும், ஆண்டிக்கும், சகலருக்கும் நியதி ஒன்றே!
நியதி தத்துவத்தில் தவறிழைத்தால் தன்னிழல் தனக்குதவாது.
*** *** ***
No comments:
Post a Comment