நீ தலைவண்டா
ஜூலை 21, 2024 குரு பூர்ணிமா.
நானும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.
அட.. கைலாசா நம்ம தமிழ்நாட்டுக்குள்ளும் இருக்கிறது என்ற அதிபரின் அதிரடி அறிவிப்பால் ஒரு வினாடி திகைத்து போனேன். என்ன, அங்கே செல்ல கைலாசாவின் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் கைலாசா நாட்டின் ஒரு பகுதி. இன்னும், அதிபர், பிரதமர் இருக்கும் தலைநகர் எங்கிருக்கிறது என்ற அறிவிப்பு இல்லை.
உலகின் ஒரே இந்து நாடான கைலாசாவின் நாட்டின் பொருளாதாரம் நிதி உதவி மூலமே இயங்குகிறது. எந்த வரிவிதிப்பு இல்லை. காவல் துறையோ சிறைத்தண்டனையோ கிடையாது.
அருணாச்சலம் ராஜசேகரன் என்பதுதான் நித்யானந்தாவின் இயற்பெயர்.
'நானே ஒரு பொறம்போக்கு. ஏதோ கோயில் அன்னதான உண்டக்கஞ்சி வாங்கி சாப்டுட்டு சிவனே என்று இருந்தவனை இப்படி பண்ணிட்டாங்க' - நித்யானந்தாவின் சுய வாக்குமூலம்.
தடைக்கற்கள் வளர்ச்சிக்கான படிக்கற்களானது, எப்படி என்று பார்க்கலாம்.
ஆன்மீக நாடான இந்தியாவில் உருவாகும் சாமியார் ஆசிரமங்கள் மிக அதிக லாபமீட்டும் வணிக மையங்களாக திகழ்கின்றன. இங்கே ஆன்மீக சரக்குகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகின்றது. இருந்தாலும், இவர்கள் அரசியல்வாதிகளால், துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள் .
அரசியலில் சின்னஞ்சிறு பதவிகள் கூட பல கோடி வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. அவர்களின் கண்ணுக்கு எளிதில் பணம் சேரக்கூடிய நித்யானந்தாவின் ஆசிரமங்கள் அதன் சொத்துக்கள் உறுத்திக்கொண்டே இருந்தது.
நித்யானந்தாவை சர்ச்சையில் சிக்க வைத்து, ஆசிரமங்களை ஒழித்துக் கட்டி, சொத்துக்களை வசப்படுத்தும் முயற்சிகள். அதில், அவர்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும், நித்யானந்தாவின் பயணத்தை நிறுத்தி வைக்க முடியவில்லை.
ஆனானப்பட்ட ராவணேஷ்வரனையே பாலியல் வளையத்திற்குள் கொண்டு வந்து அவனது திறமையை கொச்சைப்படுத்த முடிந்ததென்றால், நித்யானந்தா எம்மாத்திரம்?
அழகுப்பெட்டகம் ரஞ்சிதா. சொல்லவா வேண்டும் பொறாமைத் தீயின் வேகத்தை. நீதி தேவதை விழித்துக்கொண்டு நீதி தர நித்தியை தேடினால், நித்தி கம்பி நீட்டி விட்டான், ரஞ்சிதாவோடு.
இன்று நித்தியானந்தா அதிபர். ரஞ்சிதா பிரதமர்.
முகவரி மட்டும் கிடைத்தால் போதும் தமிழகமே கரை கடந்து கைலாசாவில் கரை சேர்ந்து விட காத்திருக்கிறது, தலைவா.
ஒரு தனி மனிதனின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அடக்கு முறைகளில் இருந்து மீண்டு வரும் மன வலிமை, சமுதாய பெரு நோக்கு மற்றும் மகிழ்ச்சி என்று நித்தியானந்தாவின் வாழ்க்கை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
பாதைகள் மாறினாலும் அவனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'வலிமை என்பது ஒரு தலைவனுக்கு வலிகளை தாங்கும் தன்மை' - நித்யானந்தா
நீ தலைவண்டா...
திருமந்திரம் - 171
ஈட்டிய தேன்பூ மணம் கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்துஒரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டியே துரத்திட்டு அதுவலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
மேலோட்டமாக பார்த்தால் மிகவும் எளிய பாடல்.
தேனீக்கள் மணமிக்க மலருக்கு மலர் சென்று சுவையான தேனை சேகரித்து மரத்தின் ஒரு கொம்பில் தேனடையில் வைத்திருக்கும். அந்த தேனடை பார்வைக்கு எளிதாக தெரிவதால், தேனெடுப்பவர்கள் தேனீக்களை துரத்திவிட்டு, தேனை எடுத்து சென்று விடுவார்கள்.
பாடலில் மறைந்துள்ள பொருளை புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது.
உயிர் மற்றும் செல்வம் நிலையாமை பற்றியது இப்பாடல்.
பணம், சொத்து என்று செல்வத்தை தேடி வாழ்க்கை முழுதும் பணத்தை சேமிக்கிறோம். அது அதிகாரம் மிக்கவர்கள் கண்ணில் படும்போது, அதை நம்மிடமிருந்து பலவந்தமாக பிடுங்கி எடுத்துக்கொள்வார்கள். அப்படித்தான் நம் உடலும். பெற்றோர்கள் குழந்தையை பேணிக்காப்பார்கள். ஒரு நாள், காலனின் கண் பட்டு இறப்பு நேர்ந்துவிடும்.
இவ்வளவு வலிகளைத்தாங்கி, 'நான் பூமியை விட்டு ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறேன்' என்று அறைகூவல் விடும் நித்யானந்தா, ஆன்மீக வரலாற்றில் இடம் பெரும் மாமனிதன்.
ஆன்மீகத்தில் ஆரம்பித்த உன் வாழ்வு செல்வத்தின் வரவால் வலியார் கண் பட்டும் கலங்காமல் இன்றைக்கும் முன்னேறத்துடிக்கும் உன் ஆற்றல் தலைமைக்குரியதே.
நித்யானந்தாவின் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் ஓடி ஒளியும் அணுகுமுறை தவறாகப்படலாம். எனினும், பின்னொருநாளில் இவனை ஒரு சரித்திர நாயகனாக மக்கள் வரலாற்றில் படிப்பார்கள் என்பதுமட்டும் நிச்சயம்.
*** *** *** *** ***
No comments:
Post a Comment