Monday, July 22, 2024

வடவாக்கினி

வடவாக்கினி




உலகத்தின் அழிவு நீரினாலா அல்லது நெருப்பினாலா என்று தெரியாது. சிலர் நீரெழுந்து உலகெங்கும் நிறைத்து உயிர்களை அழித்துவிடும் என்கிறார்கள். மற்றவர்களோ நெருப்பே உலகை அழிக்கும் சக்தியாக இருக்கும் என்கிறார்கள். வடவாக்கினி என்பது பிரளய காலத்தில் நீரில் இருந்து எழுந்து வரும் உலகை அழிக்கும் நெருப்பு.

அது நீரோ, நெருப்போ தெரியாது. ஆனால், நிச்சயம் என்று ஒன்றுக்கு மட்டும் உலகை அழிக்கும் சக்தி  உண்டு. 

அதுதான் வயிற்றில் எரியும் நெருப்பு.

'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த  ஜகத்தினை அழித்திடுவோம்' - என்ற பாரதியின் முழக்கம் பசியின் கொடுமையை விளக்கும்.

உலகில் எது நிச்சயமோ இல்லையோ, வயிற்றுப்பசி நிச்சயம். மற்ற உயிரினங்கள் வயிற்றுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வாழ்வதாக தோன்றினாலும், வயிற்றுப்பசி என்பது மண்ணுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதையே கற்குழி என்கிறார் திருமூலர். கல்லாலான இக்குழியை அடைக்க  [தங்கத்தை என்பது] பொருளினை தேடுவார்கள். பொருட்களைக்கொண்டு யாராலும் அந்தக்குழியை அடைக்க  முடியாது. அடைக்கும்  அறிவை பெற்றவர்கள் முன்னர் அக்குழி ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்கள் நீங்கி   தானாக அடைபட்டுவிடும்.

திருமந்திரம் 

கற்குழி தூரக் கனகமும் தேடுவார் 
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது  
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.  

அந்த கற்குழியை தூர்க்கும் அறிவை பெற்றோர்  சிவயோகியார். அவர்கள் புருவ மத்தியில் ஊறும் அமிர்தத்தை உண்டு உயிர்த்திருப்பார்கள். இந்த அறிவை பெற்றவர்கள் வயிற்றுக்கு எந்த உணவும் தேவை இல்லை. அக்குழி தூர்க்கும்  வழி இதுதான்.

புருவ நெற்றியில் அமிர்த ஊற்றை  உண்டாக்கும் வழியையும் காட்டுகிறார் திருமூலர்.

கீழ் நோக்கி சென்று வெளியேறும் தன்மை கொண்ட சுக்கிலத்தை மறித்து மேல் நோக்கி செலுத்த  வேண்டும். மூலாதாரத்திலிருந்து எழும் அனலைத் தூண்டி விட்டு  சுக்கிலத்தை வற்ற செய்ய வேண்டும். வற்றி வாயு  நிலையில் உள்ள சுக்கிலத்தை சுழு  முனைக்கு  கொண்டு சேர்க்க வேண்டும். சுழு முனையில்  வாயு சுடரொளியாய் மாறி அமிர்த நிலைக்கு செல்லும். இவ்வாறு முழு நிலவாய் விளங்கும் புருவ நெற்றியில் ஊறும் அமிர்தத்தை  சிவ யோகியார்கள் தேவைக்கேற்ப உண்டு வாழ்வார்கள். இவர்களுக்கு வேறு உணவு தேவை இல்லை என்பது கருத்து.

திருமந்திரம் 

வற்ற அனலைக்  கொழுவி மறித்தேற்றி
துற்ற சுழிஅனல்  சொறுகிச் சுடர்உற்று
முற்ற மதியத்து அமுதை முறைமுறை 
செற்று உண்பார் சிவயோகி யோரே. 

இதுவே கற்குழியை தூர்க்கும் அறிவு.

*** *** ***




No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...