வேலியில்லா வெள்ளாமை
வேலியில்லா வெள்ளாமை
வீடு வந்து சேருமா?
அறுபது வயது வாழ்ந்த மனிதன், சுமார் இருபது வருடங்களை வெறும் தூக்கத்தில் மட்டும் கழித்திருப்பான்.
ஒரு சோதனை முயற்சியாக, ஐந்து மரண தண்டனை கைதிகளை தூங்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று சோதிக்க எண்ணினார்கள். அவர்கள் அறையில் நல்ல வெளிச்சம், மற்றபடி அனைத்து வசதிகளும். பத்து நாட்களில் விடுதலை என்ற ஒப்பந்தம் இருப்பதால் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்ட கைதிகள், பத்து நாட்கள் முடிவில் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை. தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டும், அடுத்தவரை காயப்படுத்தியும் எல்லோரும் இறந்து விட்டிருந்தார்கள்.
உயிர் வாழ தூக்கம் எவ்வளவு அத்தியாவசியம் என்று இந்த சோதனை முடிவு நமக்கு காட்டுகிறது.
ஒரு அடிப்படைக்கேள்வி, தூக்கம் என்றால் என்ன? அது எவ்வாறு நிகழ்கிறது?
படுக்கைக்கு சென்றதும், முதல் கட்டளை மனதிடமிருந்து, தூங்கு என்று. ஐம்புலன்கள் தங்கள் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். உடல் உறுப்புகள் எந்த வேலையும் செய்யாமல் செயலற்று இருக்க வேண்டும். மூச்சுக்காற்று மட்டும் சீராக பிராண வாயுவை செலுத்தி உயிரை அலைக்கழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிர், இறை நிலையின் தொடர்பில் இருக்க வேண்டும்.
தூக்கத்தின் போது,
1. மனம் - உள்ளம் பெருங்கோயில்
2. புலன்கள் - கள்ளப்புலன்கள் காளா மணிவிளக்கு
3. உடல் - ஊனுடம்பு ஆலயம்
4. உயிர் - சீவன் சிவலிங்கம்
5. இறை - வள்ளற்பிரானாற்கு வாய் கோபுர வாசல்
இவை ஐந்தும் அமைதி நிலையில், செயலற்ற நிலையில் செயல் படவேண்டும்.
திருமந்திரம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானாற்கு வாய்கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.
நிலையற்ற உடல், உள்ளம் மற்றும் ஐம்புலன்கள் ஓய்வு நிலைக்கு, செயலற்ற நிலைக்கு செல்கிறது. நிலையான அழிவற்ற உயிர், உயிரைப்பற்றி இருக்கும் இறை எப்பொழுதும் செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இனி முக்கியமான விழிப்புணர்வு பகுதிக்கு செல்வோம்.
இந்த தருணத்தில் வாழ்வோம் என்பது விழிப்புணர்வு. இங்கேயும் இரண்டு நிலைக்களன்கள். உடல், உள்ளம் மற்றும் புலன்களால் பெரும் அனுபவத்தை பெறுவது ஒன்று. இரண்டாவது உயிர் மற்றும் இறை பற்றிய விழிப்புணர்வு.
சாதாரண வாழ்க்கை வாழும் நாம் இறை, உயிர் என்னும் ஒரு விழிப்புணர்வு நிலை இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறோம்.
உறங்கும் காலத்திலும், விழித்திருக்கும் வேளையிலும் நமக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.
பின்னர் எப்படிதான் அந்த விழிப்புணர்வு நிலைக்கு செல்வது என்று கேட்டால் திருமூலர் அதற்கொரு வழி காட்டுகிறார்.
உள்ளத்தால் உயிரினை உற்று அறியுங்கள். இறை உங்கள் உடலில் உறைந்திருப்பதை காணுங்கள் என்கிறார்.
இதற்காக நீங்கள் வேத, சாஸ்திர நூல்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. இறைவனையே எண்ணி, காதலால் கசிந்துருகவும் வேண்டாம். உயிர் மற்றும் இறையை உற்று அறியும் வண்ணம் சமாதி கை கூடினால், உங்களுக்கு சாவும் வராது. புலனிச்சைகளை பூர்த்தி செய்ய அதன் கட்டளைகளை ஏற்காமல் மேற்படி உயிரையும், இறையையும் அறியும் விழிப்புணர்ச்சி உள்ளவர்கள், கோயில், குளம், காடு, மலை என்று எங்கும் சுற்ற வேண்டியதில்லை.
திருமந்திரம்
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.
தூக்கத்திற்கும் இந்தப்பாடலுக்கும் என்ன சம்மந்தம் என்றும் பார்க்கலாம்.
1. உள்ளம் - உயிர்க்குயி ருள்ளுற்றாற்
2. புலன்கள் - புலன்வழி போகார்க்கே
3. உடல் - காய மிடம்
4. உயிர் - உயிர்
5. இறை - மெய்க் காய மிடம்கண்டாற்
உறக்கத்தின் போது உள்ளம், புலன்கள், உடல் செயலற்ற நிலைக்கு செல்கிறது என்று பார்த்தோம்.
விழிப்பின் போதும் உள்ளம், புலன்கள் மற்றும் உடல் செயலற்ற நிலைக்கு செல்ல வேண்டும். உள்ளத்தால் உயிரை உற்றறிந்த நிலையில் இறை நிலையை உணர்வதே சமாதி நிலை.
இவ்வாறாக சமாதி கைகூடினால் சாவும் உன்னை நெருங்காது என்கிறார் திருமூலர்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது.
உற்றறியா உயிரும்
வேலியில்லா வெள்ளாமையும்
வீடு போய் சேராது.
*** *** *** *** ***
No comments:
Post a Comment