Wednesday, June 19, 2024

காலணா

காலணா 



'சபாபதி, காலணாவிற்கு பாதாம் அல்வா, காலணாவிற்கு பக்கோடா வாங்கிட்டு வா'

எஜமானர் இட்ட கட்டளைக்கேற்ப சபாபதியும் வாங்கி வருகிறான்.

காலணா என்றால் எவ்வளவு பணம்?

அது பைசா வராத காலம். நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்டு, கூடவே அணாக்கணக்கும் நீண்ட காலம் புழக்கத்தில் இருந்தது.

அணாவையும், பைசாவையும் சமப்படுத்த ஒரு அணா என்பது ஆறு பைசாவாக கணக்குப்படுத்தினார்கள்.

அதாவது, காலணா என்பது ஒன்றரை பைசா.

ஒன்றரை பைசாவிற்கு பாதாம் அல்வா வாங்க முடிந்திருக்கிறது.

ஒரு நூறு கிராம் பாதாம் அல்வா இந்த விலை என்றால் ஒரு கிலோ பாதாம் அல்வா பதினைந்து பைசா, இரண்டரை அணா.

இது நடந்த காலகட்டம் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த 1941-ல்.

இதே கால கட்டத்தில்தான் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய். 

சுதந்திரம் பெற்ற 1947-ல் நான்கு ரூபாயாக இருந்து இன்றைக்கு எண்பத்தி நான்கு ரூபாய்.

இதனால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது.

ஒரு ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருளை எண்பத்தி நான்கு ரூபாய்க்கு வாங்குவோம். எண்பத்தி நான்கு ரூபாய் மதிப்புள்ள நம் பொருளை ஒரு டாலருக்கு விற்போம்.

அதாவது, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா எண்பத்தி நான்கு ரன்கள் எடுத்தால் அது ஒரு ரன் என்று கணக்கு வைக்கப்படும்.

சுதந்திரம் பெரும் முன்னர்  அரசியல் அடிமைகளாக இருந்தோம். சுதந்திரம் பெற்றதிலிருந்து பொருளாதார அடிமைகளாக இருக்கிறோம். 

'இந்தியா வல்லரசு நாடாகி விடும்' - என்பதெல்லாம் வெறும் உணர்ச்சியைத் தூண்டும் பொய்கள்.

ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகள்தான்  ஏராளம் நம் நாட்டில்.

அரசாங்கத்தில் அடிமட்ட வேலைக்கு சேர படித்திருக்க வேண்டும். வேலை செய்ய திறன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஓய்வு பெற்று விட வேண்டும்.

அரசாங்கத்தை முன் நின்று நடத்துபவர்களுக்கு, படிப்பு தேவை இல்லை, அவர் சார்ந்த துறை திறன் தேவை இல்லை, இன்னும் மேலாக ஓய்வு தேவை இல்லை.

படிக்காதவன் முட்டாள். அவனைப்  பார்க்காதீர்கள். முட்டாளுடையப்  பேச்சைக்   கேட்க வேண்டிய அவசியமுமில்லை. முட்டாளுக்கு முட்டாள்தான்  நல்லவனாகத் தெரிவான். முட்டாள்கள்  உண்மை நிலையை அறிய மாட்டார்கள்.

திருமந்திரம்-317

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது 
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று 
கல்லாத மூடர்க்குக்  கல்லாதார் நல்லராம் 
கல்லாத மூடர் கருத்து அறியாரே.

படிக்காதவனே அரசனாக வந்து விட்டால் மக்களின் நிலை என்ன?

நம்ம ராஜாவும் எமனுக்கு சமமாக உயிர்களை எடுப்பான். ஆனால், எமன் அரசனை விட மிக நல்லவன். ஏன் என்றால், அறம் சார்ந்த நியதிகளை ஆராயாமல் நல்லவனையும்  கொன்று விட ஆணையிடுவான் படிப்பறிவற்ற அரசன்; எமனோ, நல்லவர்கள் பக்கமே செல்லாமல் சென்று விடுவான்.

திருமந்திரம்-238

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் 
கல்லா அரசனின் காலன் மிகநல்லன் 
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான் 
நல்லாரைக் காலன் நணுகவும்நில் லானே.

'அரசே, மக்கள் புரட்சி செய்கிறார்கள்.'

'ஏன், தளபதி?' 

' பண மதிப்பை உயர்த்தி வறுமையை அழிப்பதாக சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள். வறுமை எங்கும் தலை விரித்தாடுகிறது. அதற்குத்தான் போராட்டம்.'

'ஓ.. அப்படியா. ஒன்று செய்யுங்கள். போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து ஓரிடத்தில் போராட சொல்லுங்கள். அங்கேயே அவர்களை தீர்த்து  விடுங்கள்.'

'அரசே..'

'வறியவர்களை அழித்தால் வறுமை அழிந்ததாகவே அர்த்தம். நம் வாக்குறுதியும் நிறைவேறிவிடும். எப்படி, நம் தீர்க்கதரிசனம்.' 

*** *** *** *** ***







No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...