பயம்! அபாயம்!! எச்சரிக்கை!!!
மரணம்.
தினம் தினம் நம் கவனத்திற்கு வரும் மரண அறிவிப்புகள். ஒவ்வொருமுறையும் கொஞ்சம் அனுதாபமாக யோசித்துவிட்டு வேகமாக அடுத்த காரியத்திற்கு நகர்ந்து விடுகிறோம்.
செத்தாதான் தெரியும் சுடுகாடு என்பார்கள். செத்த பின்னர் சுடுகாடாவது, நந்தவனமாவது. எல்லாம் ஒன்றுதானே.
சாகாமலேயே நமக்கு சுடுகாட்டை காட்டுவது பயம். எது நம்மை பயமுறுத்துகிறது என்று தெரியாமலே பயம். மூளையில் உள்ள அத்தனை நியூரான்களும் விழிப்பு நிலையில் இருக்கும். தூக்கம் வராது. உடல், நாக்கு வறண்டு போகும்.
எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள்.
கடந்த வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு இரண்டு நாட்கள், ஒரே சிந்தனை. மனித உடல் மண்ணால் வனையப்பட்டது என்று ஒரு ப்ளாக் எழுதி, அதனை சீர்செய்து காணொளியாக்கி முகநூலில் வெளியிட ஞாயிறு மாலை எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது.
முகநூலில் காலையிலேயே பார்த்தேன். ஒரு பிரண்ட் வேண்டுதல். வெகு அழகான பெண். வழக்கமாக ரொம்ப அழகாயிருந்தால், மறுத்து விட்டு சென்றுவிடுவேன். சக நண்பர் ஒருவர் கூட்டு நண்பராக காட்டியதால் அழைப்பின் முகப்பை சென்று மேலும் விவரங்களைப் பார்த்தேன்.
ப்ரொபைல் மூடப்பட்டிருந்தது. வாழும் இடம் கலிபோர்னியா. ஒரு வேளை, நண்பரின் நண்பி வேலை விஷயமாக பேச முக நூலில் அழைக்கிறாளோ என்று பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டேன். பிரண்ட் வேண்டுதலை மறுக்கவில்லை. மறந்தும் விட்டேன்.
மண்மாண் புனைபாவை என்ற காணொளியை சமூக வலை தளங்களில் பதிவேற்றிவிட்டு, ஒருவகையான இறை மனவெழுச்சியோடு இருக்கும்போது, பிரண்ட் வேண்டுதலை மீண்டும் முகநூல் காட்டியது.
சரி, நண்பரின் நண்பர் என்ற முறையில், எதாவது உதவ முடிந்தால் செய்யலாம், இல்லை என்றால் அதையும் முறையாக சொல்லி விடுவோம் என்று எண்ணிக்கொண்டே வேண்டுதலை ஏற்றுக்கொண்டேன்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் நடந்த நிகழ்வுகளை முடிந்த அளவு கோர்வையாக சொல்ல முயற்சிக்கிறேன்.
Hii என்று அவள் ஆரம்பித்தது தான் தெரியும்.
பின்னந்தலையில் யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது, எனக்கு அவள் அனுப்பிய காணொளியைப் பார்த்து.
உள்பெட்டியில் சாட் என்று ஆரம்பித்து, வீடியோ அழைப்பிற்கு சென்று, சாட் செய்து கொண்டிருக்கும்போதே ஒரு 20 வினாடி காணொளி எனக்கு அனுப்பினாள்.
இனி அது அவளல்ல. அவள் என்று அவர்கள் காட்டியது ஒரு தூண்டிலில் போட்ட இரை மட்டுமே. பெரிய இணைய மாய வலையால் பின்னப்பட்ட AI செய்யும் மாயாஜாலம்.
அவள் என்பது பெரிய இணையவழி வடமாநில திருட்டுக் கும்பல். இவர்களின் இலக்கு எளிதில் மாட்டக்கூடிய என்னைப்போன்ற வயதானவர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தனித்து வாழக்கூடிய பணம் படைத்தவர்கள்.
காணொளியில் அச்சு அசல் எல்லாமே நான்தான். என்னாலே அதை மறுக்க முடியாது. அவ்வளவு தொழில் நேர்த்தி. AI செய்து முடித்திருந்தது.
ஐந்து நிமிடத்திற்கு முன்னர் எங்கிருந்தேன்; இப்பொழுது எங்கு வந்து தூண்டிலில் சிக்கிய மீனாய் மாட்டியிருக்கிறேன்.
காணொளியை காட்டிய கையோடு, அதை என் மகனுக்கு அனுப்புவதாக செய்தி வேறு.
என்னுடைய ஆறாம் அறிவைத்தாண்டி உள்ளம் வேலை செய்ய ஆரம்பித்தது.
முதலில், அவர்களின் தொடர்பை முடக்கினேன். தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளை மறுதலித்தேன்.
முகநூலை முடக்கினேன். அனைத்து வகையான இணைய இணைப்புகளையும் முடக்கினேன். கைப்பேசியில் இருந்த சிம்மை அகற்றினேன்.
அப்பாடா.. இனி தூங்கலாம் என்று படுத்தபோதுதான் தெரிந்தது. இன்று தூங்க முடியாதென்று.
ஏதேதோ நினைவுகள். எல்லாம் பயம் கலந்தது. உலகமே என்னைப்பார்த்து எள்ளி நகையாடியது. குடும்பத்தில், உறவினர்கள், கூட வேலை செய்பவர்கள், நண்பர்கள், கண்ணுக்கு தெரிந்த தெரியாத கூட்டம் என எல்லோரும் கூட்டம் போட்டு என்னைப்பற்றி தூற்றுவதாக ஒவ்வொரு வினாடியும் உறக்கம் வராத இரவு அது.
எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராத இரவு. உடலின் வெப்பம் ஏறிக்கொண்டே போனதுதான் மிச்சம்.
அடுத்து என்ன செய்யப்போகிறேன்?
அடுத்த நாள் நண்பனிடம் பகிர்ந்துகொண்டேன். அவரும் நான் செய்தது சரியானது, இனி அதைப்பற்றி சிந்திக்கவே வேண்டாம், எந்த அழைப்பையும் ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஒருவேளை, நண்பர்களுக்கு இந்தக் காணொளி உலா வருமானால் அவர்களுக்கு ஒரு கவன நினைவுறுத்தல் மட்டும் அனுப்பி வை என்றார்.
அதன் விளைவுதான் இந்தப்பதிவு.
*** *** *** *** *** ***
அருவமான முகமற்ற இணைய வழி சதிகாரனே!
நீ எனக்கு செய்தது சதிசெயல். வடஇந்திய திருட்டுக்கும்பல் மூலம் இந்த குற்றத்தை செய்திருக்கிறாய். உன் முயற்சியில் பாதிக்கிணறு தாண்டிவிட்டாய். மீதிக்கிணறு இறைவன் நினைத்தாலும் மாற்ற முடியாத விதியின் கையில்.
தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த தீவினைகளுக்கு தண்டனை தந்ததன் மூலம் என் கர்ம வினைகளை நேர் செய்ததற்கு நன்றி!
உன்னுடைய செயல்கள் சொல்கிறது, நீ எனக்கு மிக நெருங்கிய உறவு என்று. நான் குருவாக வணங்கும் திருமூலர், உனக்கு காலம் வழங்கும் விதியின் தீர்ப்பை நிச்சயம் எனக்கு காட்டியே தீருவார்.
நீ உபயோகித்த Kanika Bhardwaj என்பது fake FB ID. Whatsapp எண் :+91 92010 46150
No comments:
Post a Comment