Monday, November 18, 2024

மண்மாண் புனைபாவை

மண்மாண் புனைபாவை




'அ' - என்று சொல்லிக்கொண்டே ஒன்றாம் வகுப்பு சுப்புலக்ஷ்மி டீச்சர் கரும்பலகையில் எழுதினார். 

'எல்லாரும் சிலேட்ல எழுதுங்க. பென்சில இப்படி புடிங்க' - தனது கையில் மூன்று விரல்களை குவித்து காட்டினார்.

குழந்தைகளுக்கான சிறிய மரப்பலகையில் அமர்ந்திருந்த ரகு, சிலேட்டை பக்கவாட்டில் சாய்த்து, எழுத முயற்சித்தான். கோடுகள் அங்கும் இங்கும் போனதே தவிர, கரும்பலகையில் இருந்த எழுத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

கொஞ்சநேரம் பொறுத்துப்பார்த்த டீச்சர், ஒவ்வொருவருக்கும் சிலேட்டில் 'அ' எழுதி, அதன் மீது எழுத சொன்னார்.

ரகுவிற்கு இப்பொழுது கொஞ்சம் எளிதாக இருந்தது. 

'டீச்சர்.. ' - தாகம் என்று, வகுப்பு மூலையில் வைக்கப்பட்டிருந்த பானையை பார்த்துக்கொண்டே, கையால் சைகை  காட்டினான்.

மணல் குவித்து, அதன் மீது  வைக்கட்டிருக்கும் பானையை, தினமும் காலையில் சுத்தம் செய்து  அதில் ஆற்று நீரை நிரப்பி வைப்பது ஆயம்மாவின் வேலை.

டீச்சர் கொடுத்த, குளிர்ந்த  நீரைக்  குடித்து விட்டு மீண்டும் எழுத்தை நகல் எடுக்க ஆரம்பித்தான்.

'வீட்டில் குடிக்கும் தண்ணீர் இவ்வளவு ஜில்லுன்னு இல்லையே..' - மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கைகள் எழுதிக்கொண்டிருந்தது.

'ஒரு வேளை, பானைக்கு வெளியே  அவங்க பூசும் திருநீறினால்  இருக்கும்.'

அம்மா சாதம் சமைத்ததும், சட்டிக்கு அடுப்பு சாம்பலையே திருநீறாக பூசி, பரிமாற ஆரம்பிப்பது நினைவுக்கு வந்தது.

'இருக்கலாம். இருக்கலாம்.' 

'பானைத்தண்ணீர் ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது, அதே தண்ணிதான் வீட்டில். ஆனால்,  பித்தளை   அண்டாவில் இருக்கிறது.  பானைத்தண்ணீர் மாதிரி ஜில்லுன்னு  இல்லை.' - திருநீறைத்தாண்டி மனம் தேடிக்கொண்டிருந்தது.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சயின்ஸ் வாத்தியாரிடம் இருந்து தற்செயலாக  பதில் வந்தது.

'பசங்களா, பானைத்தண்ணி ஏன் ஜில்லுன்னு இருக்கு தெரியுமா?'

'ஏன்னா.. மண்ணால் செய்த பானையில் கண்ணுக்குத் தெரியாத சின்ன, சின்ன துவாரங்கள் இருக்கு. தண்ணீர் துவாரங்களின் வழியாக பானைக்கு  வெளிப்புறம் வரும்போது ஆவியாக மாறுது. அப்பொழுது, பானைக்குள் இருக்கும் நீரின் சூட்டையும் உறிஞ்சி எடுக்குது. அதனாலே, பானைக்குள் இருக்கும் நீர் ஜில்லுன்னு இருக்கு.'

ரகுவுக்கு தன்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஆனால், இந்த சந்தோசம் அடுத்த கொஞ்ச வருஷத்துக்குத்தான்.

ஒருமுறை, ரகுவும் தன்னுடைய நண்பன் தனபாலுவும் சைக்கிளில் யார் சீக்கிரம் கல்லூரி செல்வது என்பதில் போட்டி. காலை எட்டு மணி எதிர் வெயிலில், வேகமாக ஒட்டி வந்த சைக்கிளை  மர நிழலில் நிறுத்திய ரகு, ஒழுகும்  வியர்வையை துடைக்க மார்பில் கை வைத்த போது, மார்பு ஜில்லென்றிருந்தது.

இது எப்படி சாத்தியம்?

இடையில் பல வருடங்கள். வாழ்க்கை வெள்ளம் அடித்து, துவைத்து, காயப்போட்ட போதும், இந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

சேட் ஜிபிடி அண்ணன் சொல்கிறார், 'மார்புக்கு வெளியே வரும் வியர்வை, ஆவியாகும்போது உடலில் உள்ள வெப்பத்தை எடுத்துக்கொள்வதால் தோல், குறிப்பாக மார்புத்தோல் குளிர்ச்சியாகி விடுகிறது.'

அட, இந்த அறிவியல் விளக்கம், நம் ஆறாம் வகுப்பு  ஆசிரியர் சொன்னதுக்கு சரியாக ஒத்துப்போகிறதே.

இனிதான் கிளைமாக்ஸ்.

முதலில் மண் பானை, இரண்டாவது உடல். இரண்டும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியும்?

சித்தர்கள் அனைவரும் சொல்லும்  கருத்து, உடல் என்பது மண்ணால் வனையப்பட்டது. மண்ணெல்லாம் மனிதர்கள்.

கடுவெளி சித்தர் பாடல் 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

பத்துமாதம் தாய் வயிற்றில் இருந்து பிறக்கும் நம் உடல்  ஒரு மண் பானையை ஒத்ததது. 

எதனால், மண்ணுக்கு உடலை ஒப்பிட்டார்கள் என்றும் நாம் அறிந்துகொள்ள, மனித வாழ்க்கையின் உண்மை நிலையையும் தெளிவாக்கி இருக்கிறார்கள். நம் மானிட  வாழ்க்கை 96 உண்மை நிலைகள் என்னும் சூத்திரத்திற்குள் அடங்கி நிற்கிறது.

இவற்றில் முதலில் சொல்லப்படுவது பஞ்ச பூதங்கள் என்னும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். 

நிலம் என்னும் மண்ணின் தன்மையாக மனிதன் பெறுவது உடலுக்கு ஐந்து காரணிகள். அவை முறையே, மயிர், தோல், சதை, நரம்பு மற்றும் எலும்பு.

சௌம்ய சாகரம் - 37

ஆறான பூதம் ஐந்தின் விரிவைக் கேளு
அப்பனே பிரிதிவியின் கூர்தான்மைந்தா
நேரான மயிருடனே எலும்பு சிரமம்
நிலையான நரம்பு சதை ஐந்துமாச்சு
பேரான பிரிதிவியின் கூறைச்சொன்னேன்
பொறுமையுடன் தான் ஐந்துப் பிலமாய் நின்று
கூரான அப்புடைய கூறு பாரு
குணமான புலத்தியனே குவித்துப் பாரே.

இது அகத்தியரின் பாடல்.

எனவே, நம் உடல் தன்னிச்சையாக மண்ணின் குணங்களைப்பிரதி பலிக்கிறது. மண், பானையானாலும், அல்லது உடலானாலும், அதனுடைய குணங்கள் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது.

மண்ணால் ஆன பொருள் மீது  நீர் பட்டால்,   கரைந்து விடுவதுதானே இயற்கை. நீரை சேமிக்கும் பானை கரைவதில்லை. மழையில் நனைந்தாலோ, நீரில் குளித்தாலோ  உடலும்  கரைவதில்லை.

குயவன் மண்ணில் வனையும் பானையை சூளையில் போட்டு சுட்டு எடுத்து விடுவதால், நீரில் கரைவதில்லை. உடல் நீரில் கரையாவிட்டாலும் ஒரு நாள் மண்ணோடு மண்ணாய்,  மண்ணில் கரைந்து விடுகிறது. 

இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.

திருமந்திரம் - 143

மண்ணொன்று  கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது 
விண்ணின்று நீர்விழின்  மீண்டும் மண்ணானாற்போல்  
எண்ணின்று மாந்தர் இருக்கின்ற வாறே. 
 

மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், நீர் பட்டால்,  கரைந்துவிடும். சுட்ட பொருட்கள் திடமாக இருக்கும். இதை நினைத்துப்பார்க்காமல் மக்கள் இருக்கிறார்கள். மண்ணோடு மண்ணாய் மறைந்து போகிறார்கள்.

ஆனால், உடலை சுடுவதெப்படி?

மூலாதாரத்தில் உள்ள குண்டலினியில்  மூண்டெழும் செழுஞ்சுடர் கொண்டு, புருவ மத்தியில் உள்ள சந்திர மண்டலத்தில் லயித்திருங்கள். இந்த தியான நிலை, சமாதி நிலையாக மாறும்போது, துரியமும், பரதுரியமும் வசப்படும்.

இந்த நிலை எய்தப்பெற்றவர்களின் உடல் அகத்தீயினால் சுட்ட உடலாகி விடுகிறது. அவர்களாக சமாதி அடைய நினைத்தால் ஒழிய உடல் அழிவதில்லை. 

ரகுவிற்கு தெளிவாக புரிந்தது, தன்னுடல்  மண்மாண் புனைபாவை என்று. 


*** *** *** *** *** ***






No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...