கடவுளைத்தேடி
கடவுள் இல்லை என்னும் நாத்திகனும், கடவுள் இருக்கிறார் என்னும் ஆத்திகனும் கருத்தில் ஒத்துப்போகும் இடம் ஒன்று உண்டு.
நாம் வாழும் பூமியானாலும், நம் சூரியக்குடும்பமோ அல்லது பிரபஞ்ச வெளியோ, அவற்றில் இருக்கக்கூடிய பொருட்களில் எதற்கேனும் தானாக உருவாகும் தன்மை உண்டோ? அங்கு வாழும் உயிர்களால் புதியதாக ஒன்றை உருவாக்கும் திறன் உள்ளதோ? கண்டிப்பாக இல்லை. ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றும் படைப்புத்திறன் இருக்கிறதே தவிர, உருவாக்கும் திறன் யாருக்கும் இல்லை.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். எவ்வளவு நகைப்புக்குரிய கருத்து இது?
ஒரு வாதத்திற்கு இதை பரிணாம வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டாலும், மனிதனின் பரிணாம வளர்ச்சி என்ன? மனிதன் மனிதனாகவே இருப்பது ஒன்றே போதும், குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது கட்டுக்கதை என்று. இந்த வாதம் நாத்திகவாதிகளுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும்.
கடவுளுக்கு மனித வடிவம் கொடுத்து, குழந்தை குட்டிகளோடு அவனுக்கு புராணக்கதைகள் எழுதி வைத்த ஆன்மீகவாதிகளுக்கு, நாத்திகவாதிகள் எவ்வளவோ மேல் என்று தோன்றும். இதில், நம்முன் நடக்கும் அத்தனை செயல்களுக்கும் கடவுள் பொறுப்பேற்க வேண்டும் என்று முறையிடுவதுதான் இன்னும் வேடிக்கை.
கடவுள் என்பவன் பெண்ணுமல்ல, ஆணுமல்ல, மூன்றாம் பாலினமும் அல்ல.
உள்ளத்தில் எழும் உன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு தியானத்தில் சமாதி நிலையில் இருக்கும்பொழுது, உன்னுடைய கண்களுக்கு மத்தியில் பேரொளியாய் நிற்பவன் இறைவன். அவனுடைய தன்மைகளை அறிய அறிய ஒருவனுக்கு மிகவும் அரிதான கண்ணின்றி காணும் சக்தியும், காதின்றி கேட்டிடும் திறனும் வாய்க்கப்பெறும்.
திருமந்திரம் - 1872
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்இன்றிக் காணும் செவி இன்றிக்கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
கடவுள் என்று ஒன்று இல்லை என்னும் நாத்திகனின் வாதமும், கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, [அது உனக்குள்ளே இருக்கும் பெருஞ்சோதி], என்னும் ஆத்திகனின் நிலைப்பாடும் ஒன்றிப்போகிறது.
*** *** *** *** ***
கடவுளைத்தேடும்
பாதை நீள்கிறது
பயணம் தொடர்கிறது
No comments:
Post a Comment