Friday, October 25, 2024

முடிந்த கதை தொடர்வதில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை 



'இளவரசிய தூக்கிட்டுப்போன ராஜா,  அவளையே கல்யாணமும் பண்ணிக்கிட்டார். அப்புறம் ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க.'

'அவ்வளவுதான். கதை முடிஞ்சது. எல்லாரும் தூங்கப்போங்க' - கதை சொன்ன தாத்தா பேரனையும், பேத்தியையும் தூங்க போக சொன்னார்.

'தாத்தா, இளவரசியும், ராஜாவும் இப்ப தூங்க போவாங்களா?' - பேரன் கேட்டான்.

'இல்ல தங்கம், அது கதை. கதை முடிஞ்சா எல்லாம் முடிஞ்சது. அதுக்கு மேல ஒண்ணும் இருக்காது.' - தாத்தா அவர்களை தூங்க வைக்க பார்த்தார்.

'நேத்து கிருஷ்ணர் கதை சொன்னீங்க. கதை முடிஞ்சு  அவரும் செத்துட்டார். பின்ன எதுக்கு அவர் படத்தை வச்சு கும்பிட சொல்றீங்க?' 

தாத்தாவுக்கு யாரோ தன்னை பிடரியில் ஓங்கி அடித்ததுபோல் இருந்தது.

கிருஷ்ணரின் காலம் துவாபர யுகத்தின் முடிவாகவும்,  கலி யுகத்தின் ஆரம்பமாகவும் சொல்லப்பட்டு வருகிறது. கலி யுகத்தில் கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுப்பார் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

மஹாபாரதப்போரில் கண்ணன் அருளிய கீதை இன்றும் நமக்கு படிக்க கிடைக்கிறது. கண்ணனின் சந்ததியினர் என்ன ஆனார்கள்? கதை முடிந்ததால் அவர்களும் மடிந்து போனார்களா?

'மானிடர் ஆன்மாவுக்கு மரணம் இல்லை. மறுபடி மறுபடி பிறக்கும்.' -என்றவன் கண்ணன்.

கண்ணன் தேவர்களின் வம்சம், அதனால் அவதாரம் மட்டுமே எடுக்க முடியும்.

எல்லாம் சுவையான கதைதானே. கதை முடிந்தால் எழுந்து போய்விடுவதுதானே முறை. ஏன், அதையே கட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறோம். அடுத்தடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுத்து அவர்களையும்  சிந்திக்க விடாமல் செய்கிறோம்.

பழையனவென்று பூஜிப்பவர்களும், நிந்திப்பவர்களும் சிந்திக்க வேண்டியது என்று ஒன்று உண்டு.

அறிவுக்கு ஒவ்வாத பழமை கருத்துக்களை ஒதுக்குவது, பூஜிப்பவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், நிந்திப்பவர்கள் அறிவுக்கு உகந்த பழமை கருத்துகளை ஏற்றுக்கொள்வது.

இதில் சோகம் என்னவென்றால், இவர்களுக்கென்று ஒரு கூட்டம் சேர்ந்தவுடன், தன்னுடைய கருத்தை வலுப்படுத்த, அவர்களின்  கருத்து சரியோ, தவறோ,  முட்டுக்கொடுக்க ஆரம்பிப்பதுதான்.

சரி என்று பட்டதை சுயமாக சிந்தித்து அதன் வழி  நடப்பது  ஒன்றுதான் உண்மையான மெய்ஞ்ஞானத்தை வழங்கக்கூடியது.

நல்லன போற்றி அல்லன அகற்றுவதால் கிடைக்கும்  பலனை  திருமூலர் சுட்டிக்காட்டுவதையும் கேட்டுக்கொள்வோம்.

குயவன் மண்ணைக்குழைத்து  இரண்டு  மண்பானைகளை செய்தான். ஒன்றினை சூளையில் இட்டு சுட்டான். மற்றொன்றை அப்படியே வைத்து விட்டான். மழைபெய்த போதும், தீயில் சுட்ட பானை  திடமாக இருந்தது. சுடாத பானை மீண்டும் மண்ணாகவே கரைந்து  விட்டது. தீயில் சுடாத பானையைப்போல் எண்ணற்ற மனிதர்கள் மண்ணோடு மண்ணாக மறைந்துபோகிறார்கள். 

திருமந்திரம் - 143

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் 
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது 
விண்ணின்று நீர்வீழின் மீண்டுமண் ஆனாற்போல் 
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாரே.

இறைவனைப்பற்றிய எண்ணங்களை சிந்தித்து அறவழியில் வாழ்பவர்கள், சுட்ட பானை போல் திடமாக இருந்து,  இறைவனடி சேரும் பேறு பெற்றவர்கள். மீண்டும் பிறப்பதில்லை. 

மற்றவர்கள் சுடாத பானை, மீண்டும் மீண்டும் மண்ணாக கரைந்து, பிறந்து பிறவிச்சுழலில் சிக்கித் தவிப்பவர்கள்.

*** *** *** *** ***











  

 

No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...