பாறாங்கல்
'அந்த ரெண்டு பாறையும், கொஞ்ச நாள்ல ஒண்ணா சேந்துரும்'
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, வெள்ளியங்கிரி ஏழாவது மலையின் உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி நாதரின் குகைக்கோவிலின் நுழைவு வாயில்.
பத்து வயதில், பெரியம்மாவுடன் மலை ஏறியபோது இரண்டு பாறைகளின் இடையே நல்ல இடைவெளி இருந்தது. ஒரு ஐம்பது வருட இடைவெளியில், அவ்விரு பாறைகளுக்கு இடையே இடைவெளி இல்லை.
'அவையினர் கருத்து சொல்லலாம்', சிம்மக்குன்றில் உள்ள பாறைகளை கொண்டு எல்லைக்கோட்டையை நிர்மாணிக்க எண்ணிய அரசனுக்கு, கருத்து சொல்ல அரசவையை கேட்டுக்கொண்டான் மந்திரிப்பிரதானி.
'பேரரசே, கற்கள் மிகவும் உயர்ந்த தரத்தில் இருப்பதால், அவைகளை நம் கால வரலாற்றை பிரதிபலிக்கும் கடவுள் சிலைகளாக வடித்து, சிற்பக்கூடமாகவும், கோயிலாகவும் மாற்றலாம்' என்றான் தலைமை சிற்பி.
' மன்னா, நம் தலைமை சிற்பி சொன்னது போல், கற்கள் நல்ல தரமாக இருப்பதால், அதனை அறுத்து, மெருகூட்டி நல்ல விலைக்கு வெளிநாடுகளில் விற்று வாணிபம் செய்தால், பொருளாதாரத்தில், நம் நாட்டுக்கு இணை யாரும் இருக்க முடியாது'- இது நிதி மந்திரி.
'பாறைகளை அகற்றி கோட்டை கட்டுவது, அதனை கடவுளாக்குவது அல்லது அதனை அறுத்து வாணிபம் செய்வது, இவை நாம் நம் சந்ததியினர்க்கு செய்யும் துரோகம் ஆகும்' - என்றார் எதனையும் மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்ற சித்தாந்தம் கொண்ட பகுத்தறிவுப்பிரசங்கி .
திருக்குறள்-423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
மன்னனுக்கு காவல் முக்கியம். சிற்பிக்கு தன்னுடைய திறமை முக்கியம். நிதி மந்திரிக்கு நிதி முக்கியம். பகுத்தறிவுவாதிக்கு தன்முனைப்பு முக்கியம். அவரவர் அறிவுக்கேற்ப பாறைகளின் மெய்ப்பொருள் மாறுபடுகிறது.
திருமூலர் எப்படி சொல்கிறார் பாருங்கள்; உங்கள் பார்வைதான் முக்கியம்.
திருமந்திரம்-2290
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.
மரத்தால் செய்யப்பட்ட யானையை பார்க்கையில், யானையாக பார்த்தால் மரம் தெரிவதில்லை. மரத்தின் தன்மையை பார்த்தால் யானை தெரிவதில்லை. இவ்வுலகில் ஐம்பூதங்களை பார்த்தால் அதில் உறையும் பரம்பொருள் தெரிவதில்லை. கண்ணால் காண்பவை எல்லாம் பரம்பொருளாகப்பார்த்தால் ஐம்பூதங்கள் தெரிவதில்லை.
இவ்வளவு பெரிய பாறைகள் எப்படி உருவாகி இருக்க முடியும். அதை யார் தூக்கி இவ்வளவு உயரத்தில் வைத்திருக்க முடியும்? தானாகவே, இறையருளால், அணுவாகி, மூலக்கூறாகி, பாறையாகி இருந்தால் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமே.
வளர்ந்து கொண்டே இருப்பதன் சாட்சிதான் வெள்ளியங்கிரி மலை உச்சியில் நான் கண்ட பாறைகளின் இணைப்பு.
*** *** ***
No comments:
Post a Comment