Sunday, August 23, 2020

லங்கனம்

 லங்கனம் 

வாழ நினைத்தால் வாழலாம்  வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும்  
ஆசை இருந்தால் நீந்தி வா 


லங்கனம் எனப்படும் பரம மருந்தின் மூலம், உடல் தனக்கு வரும்  நோய்  மற்றும்  உபாதைகளில் இருந்து தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொள்ளும். லங்கானத்தை சாதாரண மனிதர்களும் பயனுறும்  வண்ணம் நான்கு வகையாக முறைப்படுத்தியுள்ளார்கள்.

1. உடலின் தேவைக்கு மட்டும் உண்ணுதல் 
2. முறையாக மூச்சு விடும் பழக்கத்தை மேற்கொள்ளுதல்
3. தேவையானதை மட்டும் கருத்தூன்ற பேசுதல் 
4. தன்னையே நினைந்து அமைதியாக இருத்தல் 

இவ்வளவு சிறப்பான கருத்தை திருமந்திரத்தில் தேடினேன். திருமூலர் ஒரு படி மேலே சென்று, உடலை ஏன் நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்து லங்கானத்தில் உள்ள அனைத்து வகைகளையும் விளக்கி சென்றிருப்பது நமக்கு கிடைத்த பாக்கியமே.

உடம்பை வளர்த்தல் 

உடம்பை வளர்க்கும் உபாயத்தை அறிந்தவர், தானும் வளர்த்து நமக்கும் அதை அளித்து சென்றுள்ளார்.

உடம்பார் அழியில் உயிரார்  அழிவர் 
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

                                                                           - திருமந்திரம் 724

தேவைக்கு மட்டும் உண்ணுதல்

உடலில் உயிர் நிலைத்திருக்க, நாம் உண்ணும் அளவில் கருத்து கொண்டு உடலின் தேவைக்கு மட்டும் உண்ண வேண்டும்.

அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை 
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் 
உண்டி சுருங்கில் உபாயம் பலஉள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.

                                                                              - திருமந்திரம் 735

மூச்சுக்காற்றை முறைப்படுத்துதல் 

நாம் சுவாசிக்கும் காற்று, உட்செல்லுதல், வெளியேறுதல் மற்றும் தங்கி இருத்தல் எனும் மூன்று தன்மையதாகவும், நாம் உணர உட்செல்லுதல், வெளியேறுதல் மட்டும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. உட்தங்கும் காற்றின் நேரத்தை அதிகப்படுத்தி பயிற்சி செய்ய உடம்பு நிலைத்து வாழும்.

மூன்று மடக்குஉடைப் பாம்புஇரண்டு எட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான் 
நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே.

                                                                            - திருமந்திரம் 725 

அளவறிந்து பேசுதல்

முறையாக முயன்று, பேசும் பேச்சை கட்டுப்படுத்தி,  உடலை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் மறைந்துள்ள உண்மை என்ன வென்றால், நாம் எண்ணியதை எல்லாம் ஊருக்கு  சொல்லி பறைசாற்ற  வேண்டிய அவசியமில்லை. 

முறை முறை ஆய்ந்து  முயன்றிலர் ஆகில் 
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது 
மறையது காரணம் மற்றோன்றும் இல்லை 
பறைஅறை யாது பணிந்து முடியே.

                                                                                - திருமந்திரம் 748

தன்மயமாக திளைத்திருத்தல்

ஓவியம் போல் ஆடாமல் அசையாமல் ஒன்றில் ஒன்றிக்  கலந்து இலயிக்கின்ற அறிவுணர்வைப்பெறுங்கள். அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களிலும் மூலாதாரத்திலிருந்து தினமும் சஞ்சரியுங்கள்.  

ஓவிய மான  உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வார்இல்லை 
தீவினையாம் உடல் மண்டலம் மூன்றுக்கும் 
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

                                                                                   - திருமந்திரம் 751


இந்த பாடல்கள், மனித குலத்திற்கே பெரு நன்மை விளைக்கும் அற்புதமானவை. நோயெதிர்ப்பு சக்தி கிடைக்க, பெருந்தொற்றுகளில் இருந்து மனித சமுதாயம் விடுபட மிகவும் உதவிகரமாக இருக்கும்.


 

  



No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...