கானல்நீர் கனவுகள்
நீங்கள் கனவு காண்பவர்களா?
கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருகின்ற தியானிகளின் கனவு.
சரி, வாங்க நம்ம கனவுலகிற்கு போவோம்.
இன்றைய நாளின் கடமைகள் எல்லாம் முடிந்து விட்டது. இனி தூங்கி கனவு காணலாம்.
கண்ணை மூடினால், மனம் எதை எதையோ கொண்டுவந்து கொடுத்து, பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது.
தூக்கம் என்றால் என்ன? விழிப்பு நிலையில் இருந்து எப்படி உறக்க நிலைக்கு செல்கிறோம்?
விழிப்பும் உறக்கமும் சந்திக்கும் நேரத்தில் என்ன நடக்கிறது?
இமைகளில் அன்றைய நாளின் அனுபவத்தின் பாரம். மன வெளியிலோ வாழ்வில் கடந்து வந்த தூரம். உடலளவில் உலகின் ஆரவாரம் அடங்கிவிடும். ஐம்புலன்களும் இயல்பான குணத்தை இழந்து விடும். உள்ளம் எங்கே செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. பிறக்கும் முன்னர் உள்ளம் இல்லை. இறந்த பின்னர் உள்ளம் இருக்கப்போவது இல்லை. வாழும் நாட்களிலும் தூக்கத்தில் உள்ளம் இல்லை.
விழிப்பிலிருந்து உறக்கம், இது எப்படி நிகழ்கிறது? உறக்கத்திலிருந்து விழிப்பு எவ்வாறு நிகழ்கிறது?
சிந்தனை நீண்டு கொண்டே இருந்தது.
இன்றைக்கு எப்படியாவது விழிப்பிலிருந்து உறக்கத்திற்கு செல்லும் பாதையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த இறப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.
உறக்கத்திலிருந்து விழிப்பு நிலை என்பது புதுப்பிறப்பு எடுப்பது போன்றது. விழிப்பும், பிறப்பும் நம் கையில் இல்லை.
தூக்கத்தின் ஆரம்பத்தில் மூச்சுக்காற்று சீராக இயங்க ஆரம்பிக்கிறது. மூச்சு காற்றின் பாதையில் உள்ள தசை நார்கள் தளர்வு நிலைக்கு செல்கிறது. சீராக இயங்கும் காற்று தளர்வு நிலையில் உள்ள தசைநார்களை கடக்கும்போது மெல்லிய ஓசை. இந்த ஓசை காதுக்கு கேட்கிறது. இது நான்கைந்து சுவாசத்திற்கொருமுறை நிகழ ஆரம்பித்தது. விழிப்பு நிலையில் இருப்பதால் காதுக்கு கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சுவாச இடைவெளி குறைய குறைய தொடர் ஓசையாக மாறுகிறது. மனம் விழிப்பு நிலையிலிருந்து நழுவி வேறு ஒரு பரிமாணத்தில் இயங்க ஆரம்பிக்கிறது.
முழுவதும் தூக்கத்தில் ஆழ்வதற்குள், மனதில் தீர்மானித்தபடி, மீண்டும் விழிப்புணர்வு நிலைக்கு வருகிறேன்.
தூக்கமும் விழிப்புமான இந்த கண நேர கால இடைவெளியில் எனக்குள் என்ன நடந்தது?
எண்ணங்கள் திசை மாறாமல் இருக்க சுவாசத்தையே கவனித்துக்கொண்டிருந்தேன். சுவாசத்தை கவனித்துக்கொண்டிருந்த நான், சுவாச சத்தத்தின் ஊடே, இன்னொரு உலகிற்குள் நுழைகிறேன்.
அங்கே, 'நான் ஒரு பள்ளி மாணவன். நண்பனுடன் கோலி விளையாடிக்கொண்டிருக்கிறேன். பள்ளி மணி அடித்தாகி விட்டது. எல்லோரும் வகுப்பறைக்குள் சென்று விட்டார்கள். நானும் போக முயற்சிக்கிறேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. வீட்டுப்பாடம் செய்யவில்லை. கணக்கு வாத்தியார் ரொம்ப கண்டிப்பானவர். ஒரு கணம் அவரைப்பற்றிய பின்னூட்டம் முழுவதுமாக உணர்வுக்கு வருகிறது. [காலமான] அம்மா கூப்பிடுகிறார்கள். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை. புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு ஓட வேண்டும். ஓடுகிறேன். மூச்சு வாங்குகிறது.'
மீண்டும் விழிப்புணர்வு நிலையில் படுக்கைக்கு திரும்புகிறேன். சுவாசத்தின் சப்தம் நின்று விட்டது. மூச்சு இன்னும் அடங்கவில்லை. உடலில், ஓடியதனால் உண்டான லேசான வியர்வை பூத்திருந்தது. படபடக்கும் இதயம் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.
நான் என்னும் இந்த உடல் ஓடவில்லை. மனம் ஓடி இருக்கிறது.
எனக்கு பதிலாக என்னுடைய சூக்கும உடல் ஓடி இருக்கிறது. கனவையே நனவாக உடல் அனுபவித்திருக்கிறது.
இங்கே, விழிப்பு நிலை பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
விழிப்பு நிலை என்பது இரண்டு வகையானது. புறவெளி மட்டுமே உணரும் விழிப்பு நிலை; மற்றொன்று அகவெளி மட்டுமே காணுகின்ற விழிப்பு நிலை. சாதாரண நேரங்களில் நாம் இருப்பது புறவெளி விழிப்பு. தியானத்தின் இடையில் நடப்பது அகவெளி விழிப்பு.
பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள் செயல் நிலையில் இருக்கிறது. இது புறவெளி விழிப்பு நிலை. உறங்கும் நேரத்தில் இங்கிருந்து கனவு நிலைக்கு செல்லும்பொழுது, சூக்கும உடலாக மாறி புது உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவோம்.
ஒருவர் தியானம் செய்யும்போது மனம் உள்நோக்கி திரும்புகிறது. அப்பொழுது, பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள், விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்கிறது.
தியான நிலையிலும், விழிப்பு நிலை பரு உடலில் இருந்து நுண்ணுடலுக்குள் செல்கிறது.
விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்ல மனம், புத்தி, அகங்காரம் வழிகாட்டியாக இருக்கிறது. மனமும் புத்தியும் மட்டும் செயல்படும் நிலையில் கனவு நிலை மாறி உறக்கம் உண்டாகிறது. மனமும் புத்தியும் மறைகின்ற பொழுதில் சித்தம் தலை தூக்கி துரியம் எனப்படும் பேருறக்க நிலைக்கு செல்கிறது.
தியானத்தில் வெறும் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. இதுவே சமாதி நிலை.
திருமந்திரம் - 2201
புரியட் டகமே பொருந்தல் கனவு
புரியட் டகம் தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்து ஒன்று புக்கல் துரியமே.
புரியட்டகம் என்றால் சூக்கும உடல் அல்லது நுண்ணுடலில் வருவது கனவு. அதாவது பஞ்சபூதங்களின் தன்மைகள், ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின் தன்மைகள் அடங்கி, அந்தக்கரணங்களில் மனம், புத்தி மற்றும் அகங்காரத்தை ஆன்மா ஏற்கும் நிலை கனவு.
தியானத்திலும் இவ்வாறே விழிப்பு நிலையில் கனவு நிகழ்கிறது.
தியானத்தின் தொடர்ச்சியில் நுண்ணுடலில் மனம், புத்தி செயல்படும் நிலை உறக்க நிலையாகும். மனம் புத்தி செயலற்று நுண்ணுடலில் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. அதுவே சமாதி நிலை.
இன்றைக்கு படுக்கைக்கு சென்றதும் முயற்சி செய்து பாருங்களேன்!
*** *** *** *** ***
No comments:
Post a Comment