Wednesday, December 3, 2025

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர் 


உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும் ஒன்று.

அறிவியலின்  துணை கொண்டு எவ்வளவு அலசினாலும், அடியும், முடியும் காண முடியாத அதிசயம் உயிர்.

தில்லை அம்பலத்தில் நடனமாடும் அந்த பரம்பொருள், ஒவ்வொரு உயிரியின் உடலிலும்  உள்ள உயிருக்கு பற்று கோலாக இருக்கிறான். அண்ட சராசரங்களை ஆட்டுவித்து தானும் ஆடிக்கொண்டிருக்கிறான் இறைவன். 

உடலும் அதற்கு விதிவிலக்கல்ல. கண்ணால் காணும் பரு உடலும், சூக்கும உடலான ஒளி உடலும் இறையோடு இணைந்து ஆடிக்கொண்டிருக்கிறது என்கிறார் திருமூலர். 

திருமந்திரம் - 913

ஒன்றிரண்டு ஆட ஓரொன்றும் உடனாட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும்  ஒத்தாட 
ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே. 

பரு உடலும், ஒளி உடலுமாக உள்ள உடல் ஆடிக்கொண்டிருக்கிறது .

இதுவே, ஒன்றிரண்டு ஆட

அதனுடன் உயிர் சேர்ந்து  மூன்றாக மாறி ஆடுகிறது.. 

ஓரொன்றும் உடனாட ஒன்றினின் மூன்றாட

இந்த மூன்று பரிமாணங்களும் உடலின் ஏழு ஆதார நிலைகளான, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை மற்றும் துரியத்துடன் இணைந்து ஏழும்  ஒத்து ஆடுகிறது.

 ஓரேழும்  ஒத்தாட 

இவை அனைத்தும் ஒன்றி நிற்கும்போது, இதனுடன் ஐம்பொறிகளின் குணமும், நான்கு அகக்கருவிகளான மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என ஒன்பது குணங்களும் பொருந்தி இருக்கும். இந்த ஒன்பது குணங்களும் பாசம் என்னும் இச்சா சக்தியுடன் சேர்ந்தாடும்.

ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட

இவ்வாறு பொருந்தி நிற்கும் உடலையே மன்றமாக கொண்டு  இறைவன் மாணிக்க ஒளிக்கீற்றுகளாக ஒளிவீசி உடலின் உள்ளே  நடனம் புரிவான்.

மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே

சிதம்பர நடராஜரின் திருக்கூத்து நம் ஒவ்வொருவர் உடலிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

*** *** *** *** ***






No comments:

Post a Comment

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள்   நீங்கள் கனவு காண்பவர்களா? கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருக...