Monday, July 26, 2021

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

தாமரை மலரில் 
மனதினை எடுத்து
தனியே  வைத்திருந்தேன் 




கவியரசர் கண்ணதாசன் இயற்ற, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மெட்டமைக்க, இசைக்குயில்  பி.சுசீலா குரலில், நவரச இயக்குனர் ஸ்ரீதர் இயக்க, கல்யாண்குமார் மற்றும் தேவிகா நடிப்பில் உருவான காவியப்பாடல் இது.

தமிழ்த்திரையிசை பாடல்களில் மிகவும் அபூர்வமான பாடல் 'நெஞ்சம் மறப்பதில்லை' எனும் பாடல்.

தாமரை மலரில் 
மனதினை எடுத்து
தனியே  வைத்திருந்தேன் 

பாடலில் வரும் இந்த வரிகளில் என்ன சொல்ல வருகிறார் கவியரசர்.

நெஞ்சம் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது?

இதயம் இருக்கும் இடத்தை நெஞ்சம் என்று கூறுகிறோம். இதனையே ஆறாதார சக்கரங்களில், அநாகத சக்கரம் உள்ள இடமாக சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அறிவுக்கு மேலேறி யெட்டாமங் குலத்துக் 
கப்பாலே யநாகத்தின் வீட்டைக் கேளு 
முறிவுக்கு முக்கோண மாக நிற்கும் 
முதிர்வளையம்  பன்னிரண் டிதழு மாகும் 

                                                                                   - போகர் 7000 - 46

இந்த நெஞ்சம் பன்னிரண்டிதழ்கள் கொண்ட தாமரை மலர் என்றும் வர்ணிக்கிறார்கள்.

இதனையே திருமூலர்,

ஆயும் மலரின் அணிமலர் மேலது 
ஆய இதழும் பதினாறும் அங்குள 
தூய அறிவு சிவானந்தம் ஆகிப்போய் 
மேய அறிவாய் விளைந்தது தானே.

                                                                                  - திருமந்திரம் 1711

எதையும் ஆராய்ந்தறியும் இயல்புடையது மனம் - இதயத்தாமரை.

நெஞ்சத்தின் தன்மைகளை அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
                                          - அகத்தியரின் சௌமிய சாகரம் 32

உயிரோடு கலந்த சக்தி, மாயை நிலையில் இயங்கும்  உடல்,  உணர்வுதனை மனதுக்கு  வழங்குகிறது. மனதிற்கு என்று தனிப்பட்ட எந்த கோளும் அதாவது புலனுறுப்பும்  இல்லை.

ஆயினும், 1. மனம்  2. புத்தி/அறிவு  3. ஆங்காரம்  4. சித்தி என்ற நான்கு படிகளில் மனித உணர்வுகளை வழி நடத்துகிறது.

இந்த நான்கு தன்மைகளில் உள்ள தாமரை மலர் நெஞ்சத்தில், மனதினை மட்டும் தனியாக எடுத்து,  உன் நினைவுக்காகவே  வைத்திருக்கிறேன்.



No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...