Thursday, July 29, 2021

ஆலயமணி


ஆலயமணியின் 
ஓசையை 
நான் கேட்டேன் 




கவியரசரின் ஆன்மீக உணர்வில் உதித்த பாடல் இது.

இரு மனம் நிறைந்த காதலில், மணவினை ஏற்ற தலைவி, முதலிரவு முடிந்து,  அதிகாலையில் பாடும் பாடலாக திரையில் வருகிறது.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் 
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் 

இளகும் மாலைப்பொழுதில் தலைவனிடம் அடைக்கலம் பெற்ற தலைவியின் தன்னுணர்வு நிலை  விளக்கப்பாடல் இது.

தலைவி அடைக்கலத்தின் உணர்வு நிகழ்வில்  ஆலய மணியின் ஓசையை கேட்டதாக  பாடுவதாக அமைந்திருக்கிறது. .

அருந்தவ யோகிகளுக்கு தியான  நிலையில் கிடைக்கக்கூடிய பேருணர்வின் ஓசை  நிலை இது. 

குண்டலினி என சொல்லப்படும் உயிர் நிலையில் இருந்து எழும் கீதம் அது.
  
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட.. ..
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

சிவ குகனான முருகன், பன்னிரண்டு கால்களில் சலங்கை மணி சத்தத்துடன்,  குண்டலினியினின் நடுவில் நின்று நடனமிடும் இடம்  அது.

உன் இறைவன் அவனே அவனே எனப்பாடும் மொழி  கேட்டேன் 
உன் தலைவன் அவனே அவனே என்னும் தாயின் மொழி கேட்டேன் 

மணவினை ஏற்ற தலைவி, சங்கம வேளையில், இறைவனையும் தன் தலைவனையும் ஒரு சேர காண்கிறாள்.

மணிகடல்  யானை வார்குழல் மேகம் 
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் 
தணிந்துஎழு  நாதங்கள் தாமிவை பத்தும் 
பணிந்தவர்க்கு அல்லது பார்க்கஒண்  ணாதே.
                                                                     - திருமந்திரம் 606

மணி ஓசையுடன் பல்வேறு இசைதனை தியானத்தில் கண்டும் , கேட்டும்  உணரலாம்.

ஆலயத்தின்  மணி ஓசை மற்றும்  இறைவனுக்கு தீப ஆராதனை  காட்டும்போது எழும் மணி ஓசை, குண்டலினியில்  எழும் ஓசையின் மறுபதிப்பாக மனிதர்கள் உணர்ந்து கொள்ளவே!

சிந்திக்கும் திறன் பெற்ற மனிதனின் உடல், தன்னில் இருக்கும் உயிர் இவை இரண்டும் தன்னுள் இறைவன் இருப்பதை அறிவதில்லை. இறைவனை அறிந்த உணர்வு  நிலை பெற்ற மனிதன் இறை நிலைக்கே  சென்று விடுகிறான்.
 
அவனும் அவனும் அவனை அறியார் 
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில் 
அவனும் அவனும் அவன் இவனாமே.
                                                                    - திருமந்திரம் 1789

மணவினை ஏற்ற தலைவி, தன்  உடல் [அவன்-1], உயிரினை [அவன்-2] தாண்டி அங்கு உறையும் இறைவனையும் [அவன்-3]காண்கிறாள்.

தமிழா? தமிழை அறிந்ததால் வந்த சிறப்பா? 

ஆன்மீகம் தந்த பெரும் பரிசாக திருமூலர் நமக்கு வழங்கி சென்றுள்ளதை நாம் அனைவரும் படித்துணர்ந்து  பயனுறுவோம்.


No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...