Monday, August 9, 2021

காற்றின் காதல்

யாரும் வாழப்பாடும் காற்றும்                                                                                         நானும் ஒன்றுதானே                                                                                                              இன்ப நாளும் இன்று தானே 


புயலாக  நானிருந்தேன்.                                                                                                      கடலாக அவளிருந்தாள்.                                                                                                              காதலை சொன்னேன்,                                                                                                        சுனாமியாக மறுதலித்தாள்.

நினைவுக்கனல் ஏற்றி, 
தென்றலாக மாறிநின்றேன். 
எனக்குள் சங்கமித்தாள்,
சாரலாக குளிர்வித்தாள்.

காற்றினை நீர் ஏற்காது. காற்றினுள் நீர் கரைந்து  நிற்கும். 

எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றை தண்ணீருக்குள் செலுத்தி நிறுத்திவிட   முடியாது. ஆனால், தண்ணீரைவிட மிக மெலிதாக வெப்பம் கூடுதலாக  தென்றல் இருக்கையில், தண்ணீரை உறிஞ்சி எடுத்து தன்னுள் வைத்துக்கொள்ளும்.

நீர்.. நெருப்பு.. காற்று.

மனித உடலிலும் இந்த  முக்கிய மூன்று அம்சங்கள்  பொதிந்திருக்கிறது.

காற்றடைத்த பை நம்  உடல். உடல் முழுதும் சென்றுவர அதற்கு எழுபத்திரண்டாயிரம் பாதைகள். 

இந்த பாதைகளில் ஏற்படும் அடைப்புகள், தடைகளே உடலின் ஆரோக்கிய கேட்டிற்கு முதல் காரணி ஆகிறது. 

    வாயுப்பிடிப்பு என்று சாதாரணமாக சொல்லி கடந்து செல்கிறோம்.

காற்று புக முடியாத பாதைகளிலும் நீர் புகுந்து விடுகிறது.

    நீர் கோர்த்துக்கொண்டது என்று இன்னொரு காரணமும் சொல்லிக்கொள்கிறோம்.

காற்றும், நீரும் ஏற்றுக்கொள்ளாத பொழுது, வெப்பம் தோன்றிய இடத்திலே  குவிய ஆரம்பிக்கிறது.

    கட்டிகளாகவும், கொப்பளங்களாகவும் தோலில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

உடலின் பாதைகள் அடைபட்டு, உபாதைகள் ஏற்படுவதை தடுக்க சித்தர்கள் பல எளிய வழி முறைகளை சொல்லி சென்றுள்ளார்கள். ஆனால், அவைகள் பாட்டு வடிவில் இருப்பதால், நிகழ் கால மக்களுக்கு அதன் பொருள் புரியாமல் அவ்வரிய வழிகாட்டுதலை தவிர்த்து வருகிறோம். வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லாமல் அவர்களுக்கு பெருந்தீங்கு இழைக்கிறோம்.

திருமூலர், நாம் அனிச்சையாக விடும் மூச்சுக்காற்றை, பயிற்சியாக  இடது மூக்கில் உள்  இழுத்து, சற்று உள்  நிறுத்தி, வலது மூக்கு வழியாக விடவும், இதனையே மாற்றி மாற்றி செய்ய சொல்கிறார்.

வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்தே 
ஏமுற்ற முப்பத் திரண்டும்  இரேசித்துக் 
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு 
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

                                                                                                       - திருமந்திரம் 573

[பதினாறு மாத்திரை அளவு உள்ளிழுத்தல் - பூரகம். அறுபத்திநான்கு மாத்திரை உள்நிறுத்தல் - கும்பகம். முப்பத்திரண்டு மாத்திரை வெளிவிடுதல் - இரேசகம்] 

இப்படி மூச்சுப்பயிற்சி செய்வதால்  என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பூரகம்
உள்ளிழுக்கும் காற்றில் நம் உடல், உயிர் இரண்டிற்கும் அத்தியாவசியத் தேவையான பிராண வாயு இருக்கிறது. 

கும்பகம் 
1. சுவாசித்த காற்றை உள் நிறுத்தும்போது, அந்த வாயு முதலில் உடலின் வெப்பத்தை ஏற்று சூடாகிறது. 

2. இந்த சூடான காற்று, அடைபட்ட பாதைகளில் உள்ள நீரினை தன்னில் கிரகித்துக்கொள்கிறது. 

3. காற்று அடைபட்ட பாதையை தகர்த்துக்கொண்டு உட்செல்கிறது. 

இரேசகம் 
வெளியேறும் காற்றில், உடலின் அதிகப்படியான வெப்பமும், ஈரமும் வெளியேறி விடுகிறது.
 
இதனையே பிராணாயாமம் என்றும் நாம் அறிகிறோம்.

உபாதைகள் பாதைகளாக மாறும்போது உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் 
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதில் ரேசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

                                                                                          - திருமந்திரம் 568  


எச்சரிக்கை: 
நன்கு தேர்ந்த ஆசிரியர்களிடம், முறையாக கற்க வேண்டிய பயிற்சி மூச்சுப்பயிற்சி. எதிர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, நாமே முறையற்று செய்யும்போது.





 

No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...