மந்திரம்
என்ன சத்தம்
இந்த நேரம்
உயிரின் ஒளியா?
உயிரின் ஒளிக்கு சப்தமுண்டோ?
வாருங்கள் ஆராய்ந்து பார்ப்போம்.
அளவின் வரி வடிவம் எண்.
ஒலியின் வரி வடிவம் எழுத்து.
எண்கள் அளவினை துல்லியமாக தெரிவிக்கும். எழுத்துக்களோ ஒலியின் ஓசையை தோராயமாக வெளிக்கொண்டு வரும். சில நேரங்களில் ஒலியை வரிவடிவில் கொண்டு வர இயலாத பலவீனமும் எழுத்துக்களுக்கு உண்டு.
மத்தள ஓசையை 'டும்.. டும்..' என்று எழுதினாலும், காதில் விழும் மத்தள ஓசையும், எழுத்தும் ஒன்றுவதில்லை. பறவைகள், விலங்குகளின் குரல் ஓசைக்கு புதிய வார்த்தைகளை எழுதி புரிந்து கொள்கிறோம். குயிலின் கூவலை, சிங்கத்தின் கர்ஜனையை எழுத்தில் எழுதி விட முடியாதுதானே.
எழுத்துக்களுக்கு உள்ள இயலாமை இது.
க, ச, ட, த, ப போன்ற உயிர்மெய் எழுத்துக்களுக்கு வார்த்தைகளின் தன்மைக்கேற்ப உச்சரிப்பு வேறுபடுகிறது.
இந்த சமயங்களில், நாம் எழுத்துக்களின் உச்சரிப்பை அனுபவ ரீதியாக படித்தறிந்து கொள்கிறோம். புதியதாக தமிழ் கற்பவர்களுக்கு இந்த படிப்பறிவு சிம்ம சொப்பனமே.
ஆங்கில வார்த்தைகளில், உச்சரிப்புக்கு ஏற்றவாறு துணை எழுத்துக்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
க என்பதை ka kha ga gha என்றெழுதி உச்சரிப்பை மாற்றலாம்.
தமிழில் இது சாத்தியமில்லை.
ஆனால், அவ்வாறான உச்சரிப்பிற்கான தேவையை உணர்ந்து, தமிழில் ஆதி [கிரந்த] எழுத்துக்களில் இதனை சாத்தியப்படுத்தி இருந்தார்கள். அந்த எழுத்துக்களை, புதிய ஒலியின் வரி வடிவத்தை 'அக்ஷரம்' என்றழைத்தார்கள்.
அதன் அளவு 51. அதாவது ஐம்பத்தொரு அக்ஷரங்கள். இதனை பல பாட்டுக்களில் திருமூலர் அளவிட்டிருக்கிறார். மேலும், என்னை நன்றாக இறைவன் படைத்தான், அவனை நன்றாக தமிழில் மக்களுக்கு எடுத்துரைக்க என்னும் திருமூலர், வேற்று மொழியில், திருமந்திர மாலையை [300] 51 அக்ஷரங்களால் அலங்கரித்திருக்க வேண்டிய அவசியம் இல்லைதானே.
மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழ்
மூலன்உரை செய்த முன்னூறு மந்திரம்
மூலன்உரை செய்த முப்பது உபதேசம்
மூலன்உரை செய்த மூன்றும் ஒன்றாமே.
- திருமந்திரம் 3046
உடல் ஒலி:
இப்பொழுது தமிழ் எழுத்துக்களில் இருந்து சற்று விலகி, ஆதி எழுத்துக்களான அக்ஷரங்கள் பற்றி அறிய வேண்டிய அவசியத்தை பார்ப்போம்.
மனித உடல் 51 ஒலி அலை நிலைகளை கொண்டிருப்பதாக அளவிட்டிருக்கிறார்கள். இவ்வொலி அலைகளை முறையாக வெளிப்படுத்துவது, மனதுக்குள் உச்சரிப்பது, ஜெபிப்பது போன்றவை உடலின் வலிமையை, உள்ளத்தின் ஆற்றலை, நடைமுறை வாழ்வின் செயல்திறனை ஊக்கப்படுத்தும் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். உடலின் அனைத்து பகுதிகளிலும் 51 அக்ஷரங்கள் விரவி உள்ளது.
இந்த அக்ஷரங்கள் ஆறு ஆதார நிலைகளில் மையம் கொண்டுள்ளது என சித்தர்கள் வகைப்படுத்தி உள்ளார்கள்.
ஆறு ஆதாரங்களும், ஐம்பத்தியொரு அக்ஷரங்களும்:
1 மூலாதாரம் - [வ, ச, ஷ, ஸ] - 4
2 சுவாதிட்டானம் - [ப3, ப4, ம, ய, ர, ல] - 6
3 மணிபூரகம் - [ட3, ட4, ண, த, த2, த3. த4, ந, ப, ப2, ம] - 11
4 அனாகதம் - [க, க2, க3, க4, ங, ச, ச2, ஜ, ஜ2, ஞ, ட, ட2] - 12
5 விசுத்தி - [அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஒள, அம், அஹ] - 16
6 ஆக்கினை - [ஹ, ள] - 2 (51)
- போகர் 7000
இது எப்படி என்றால், எல்லா மலர்களிலும் தேன் இருந்தாலும், தேனடையில் சேமிப்பு நடப்பதைப்போன்றது. தேனடையில் உள்ள தேனை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படிதான் ஆறு ஆதாரங்களில் சித்தர்கள் ஞான அறிவில் சேகரித்து தெரிவிக்கும் 51 அக்ஷரங்கள்.
அக்ஷரங்களின் மூலம் முறையான ஒலி அலைகளை உருவாக்கும் தொகுப்பே, நாம் பயன்படுத்திக்கொள்ளும் தேனைப்போன்ற, மந்திரம்.
உயிர் ஒலி:
காணவே மூலமஃ தண்டம் போலக்
காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
புறம்பாக விதழதுவும் நாலு மாகும்
நாணவே நாற்கமலத் தட்ச ரங்கள்
நலமான வ-ச-ஷ- ஸவ்வு மாகும்
மூணவே முக்கோணத் துள்ளொளியோங் கார
முயற்சியா யதற்குள்ளே அகார மாமே. - போகர் 7000
ஓரெழுத்து மந்திரம் எனும் 'ஓம்' மூலாதாரத்தில் உதிக்கும் உயிரணு மந்திரம். இதனையே பிரணவ மந்திரம் என்றும் சொல்கிறோம். இந்த ஓம்காரம் மூலாதாரத்தில் ஒளியுடன், ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
உயிரின் ஒளிக்கு சப்தமுண்டு.
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.
- திருமந்திரம் 85
அண்டத்தை பற்றி நிற்கும் மந்திரத்தை சொல்ல வேண்டும் என்றால் அது உடலைப்பற்றி நிற்கும் உணர்வு நிலை மந்திரம் ஓம். இதனைப்பற்றி நிற்க அதனுடைய உண்மை நிலை நமக்கு விளங்கும்.
பிரணவ மந்திரத்தின் ஒலி அலைகளை தொடர்ந்து தூண்டுவதன் மூலம், மூலாதாரமும், பிரபஞ்சமும் ஒரே அலை வரிசையில் பயணிக்கும்.
இது மனிதன் வாழும் நாட்களை மகிழ்வுடனும், ஆனந்தத்துடனும் கழிக்க மிகச்சிறந்த ஆன்மீக வழி முறை ஆகும். பேரின்ப நிலையில் மூழ்கி, ஜீவன் முக்தியடையும் மார்கமும் இதுவே!
.
No comments:
Post a Comment