Monday, June 28, 2021

பேரண்டம் அகண்டம்

உன்னை அறிந்தால் நீ 
உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம்  


ஒரு பொருளை பகுத்து அறிந்து கொள்ளும் அறிவு மனிதர்கள் பெற்ற கொடை. ஆனால், அதற்கு மேற்பட்ட அறிவு நிலை உள்ளதை உணரும் மனிதனால், அதனை என்னவென்று அறிந்து  கொள்ளும் ஆற்றல்  இல்லை.

உதாரணமாக, இரு பரிமாண நிலையில் வாழும் இனம், முப்பரிமாணம் என்றால் என்ன என்பதை அறியும் ஆற்றல் அற்று இருக்கும். முப்பரிமாண நிலையில், மேலிருந்து  விழும் பொருளினைப்பார்த்து,  அது எவ்வாறு சாத்தியம் என்று ஆராய்ந்த வண்ணம் இருக்கும். அதனுடைய அறிவு நிலைக்கு முப்பரிமாணம் என்ற ஒன்று இருப்பதே எட்டாது.

மனிதனின் பகுத்தறிவும் இந்த விதிக்கு உட்பட்டதே.

ஆய்வகங்கள் இன்றி, இறை சக்தி ஒன்றையே விதியாக ஏற்று, நமக்கு அருமையாக தமிழில் எளிமையான பாடல்களாக சொல்லி சென்றுள்ள சித்தர்களை போற்றி, அவர்கள் வழியில் நின்று, மனித அறிவின் எல்லைகளைத்தாண்டிய  உண்மைகளை  அறிந்து கொள்வோம்.

ஆதியில் தோன்றிய பரம அணு, பாழ் நிலையை அழித்து ஒளியும், ஒலியுமாக விளங்கியது. பரமணுவில் தோன்றிய நாதம், 'ஓம்' என்றறியப்பட்டது. பேரண்டத்தில் இந்த ஓங்காரம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இதே நாதம், நம் உயிரணுவில், மூலாதாரமாம் அகண்டத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

மூலமாம் நாதத்துண்மை உணர விப்போதே முத்தி 
ஆலமுண்டானும் மாலும் அயனுமிப் படியுணர்ந்தே 
சாமா இறைவராகிச் சமைந்தது சகத்துக்கென்றால் 
ஏலு மந்திர  வாதத்தே இருமையும் பெறலாம் அன்றே.

                                                                                    - தத்துவ நிசானு போக சாரம் 285

மூலாதாரத்தில் உள்ள உயிரணுவில் 'ஓம்' எனும் நாதம் உண்டாகும் தன்மையை நீ உணர்ந்தால், பிறவிப்பெருங்கடல் கடந்து, உன் உயிர் முக்தி நிலை எய்தும்.

அடங்கு பேரண்டத்து அணுஅண்டம் சென்றங்கு 
இடம்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ 
கடம்தொறும்  நின்ற உயிர்கரை காணில் 
திடம்பெற நின்றான் திருவடி தானே.
                                                                                       - திருமந்திரம் 137

 பேரண்டத்தில் அடங்கி நிற்கும் அணுவே உயிரிகள்தோறும் விளங்கும்  உயிரணுவாகும்.

பேரண்ட நாதமும், உயிரணு நாதமும் ஒன்றே. இந்த நாதத்தையே பிரணவ நாதம் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

'ஓம்'

'ஓம்' என்பதுவே  பிரணவ நாதம், பிரணவ மந்திரம்.

இதுவே உயிர் ஆற்றலை  உறுதியாக வைக்கும் மந்திரம். 

மந்திரம் என்று எதனால் கூறினார்கள்; மந்திரம் என்றால் என்ன என்பதை பின்னொரு படைப்பில் பார்ப்போம்.


பேரண்டம் 

மனிதனால் அணுவைப் பிளக்க முடிந்தது. அணுவினுட்பொருள் [Neutron, Proton, Electron] என  காண முடிந்தது. உட்பொருளின் ஆக்கம் குவார்க், எதிர்-குவார்க் [Quark, Anti-quark]  எனப்படும் நேர் மின்சுமை , எதிர் மின்சுமை  என்றறிய முடிந்தது. அதாவது ஆணும், பெண்ணும் ஒன்றிணைந்து, ஹர்தநாரியாக  இருப்பதைப்போன்று. குவார்க்குகளே அணுவின் கட்டமைப்பில்  அடிப்படை பொருளாக அமைகிறது. 

புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவையும் பிணைப்பதும் இயற்கையில் உள்ள நான்கு வகை அடிப்படை விசைகளில் ஒன்றுமான 'ஸ்ட்ராங் இன்டராக்ஷன்'. அணுக்களின் இண்டராக்ஷன், உராய்வின்  போது போட்டான் [Photon] என்னும் ஒளி அணு உண்டாகிறது; கூடவே ஒலி என்னும் நாதமும். இந்த ஒலி  'ஓம்' என்ற சப்த வடிவை கொண்டது.

ஓர் அணுவும், எதிரணுவும் சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து இரண்டும் கதிர்வீச்சாக, ஆற்றலாக மாறி அழிந்து விடும். இது அறிவியல் விதி.

இந்தப் பேரண்டம் விரிவடையத் தொடங்கியதில் இருந்து துல்லியமாக சமமான எண்ணிக்கையிலேயே அணுக்களும், எதிரணுக்களும் உற்பத்தியாகி வந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு அணுவையும், எதிரணு ஒன்று அழித்திருக்குமானால், இந்த உலகத்தில் ஓர் அணுவோ, ஒரு பொருளோ இருந்திருக்கக் கூடாது.

பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி  ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப்பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடையில்லை. 

சமநிலை திரிபு  என்பது  பரமணுக்களில் உண்டான இறை நிலை என்பது ஆன்மீகத்தின் தீர்ப்பு.

அகண்டம்:

ஓரணு உயிரியாகத் தோன்றி, பல பல பிறவிகள் பெற்று  பல படிநிலைகள் கடந்து மனிதனாக பிறக்கின்றோம். மனிதப் பிறவி பெற்றவர்களுக்கே சிந்திக்கும் ஆற்றல் உண்டு. யார் ஒருவன் அணுவிலிருந்து மனித பிண்டமாக வெளிப்பட்டு இந்த அண்டத்தை அறிகின்றானோ அவனே அண்டமும் பிண்டமும் அற்ற அகண்டம் நான் என்பதை அறிகின்றான்.


No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...