Tuesday, September 1, 2026

கடலைத்தேடி

 கடலைத்தேடி


யணப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது.

நெருங்கி செல்கிறேனா அல்லது விலகி செல்கிறேனா என்று தெரியாமல் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மனையைத் துறந்து, மனைவி, மக்கள், சுற்றத்தார் அனைவரையும் துறந்து பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். பொறுப்புகளைத் துறந்து, சும்மா இருக்கும் சோம்பேரிக்கு, முகமூடி 'துறவு' என்கிறார்கள். ஆனால், நான் முழுமையாக நம்பி செல்லும் இந்தப் பயணம் ஒரு நாள் என் இலக்கை காட்டிக்  கொடுக்கும்.

கடலை நான் நேரில் காண்பேன்.

ஒரு பக்கம் கடல் என்று ஒன்று இல்லவே இல்லை என்னும் பகுத்தறிவுக்கூட்டம். கடல்தான் நமக்கு எல்லாமே என்னும் ஆன்மீகக்கூட்டம். இரண்டு கூட்டமும் நாம் அனைவரும்  கடலுக்குள்தான் வாழ்கிறோம் என்று அறியாத கூட்டம்.

கல்வி நிலையங்களில் யாருமே சொல்லித்தரவில்லை. பாடப் புத்தகமும் இல்லை; பரீட்சையும் இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விட்டு சென்ற முன்னோர்களின் அறிவுரை மட்டும் நூல்களில் இருக்கிறது. இன்றைய கல்வி எல்லாமே வேலை வாய்ப்பை நோக்கித்தான் என்றாகிவிட்டது.

‘நான் யார்?’ - என்று தெரிந்து கொள்ளும் உரிமை சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. பிறப்பிலிருந்து இறக்கும் வரை, மெய்யியல் கேள்வி மனதில் எழா வண்ணம் நம் சமுதாயம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு கொடூரமான சமுதாய சீர்கேடு.

நான் எப்படியாவது கடலைக் கண்டுபிடித்தாக வேண்டும். வேறு யாருக்காக இல்லாவிட்டாலும், எனக்காக  நான் கண்டுபிடித்தே தீருவேன். யாரும் எனக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை. அடிக்கடி என்னை விழுங்க முயற்சிக்கும் சுறாக்களின் பார்வையில் படாமல் மட்டும் இருந்தால் சரி. என்னுடைய லட்சியப் பயணம், என் இனத்து மீன்களுக்கே தெரியவில்லை, சுறாவை குறை சொல்லி என்ன பயன்.

நிலத்தைப் போல நீரும் ஒரு பரிமாணம் என்கிறார்கள். கடல் முழுக்க நீரால் நிரம்பி இருக்கும் என்று நம்புகிறோம். நீருக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நீர் நிறைந்து அலை அடிக்கும் கடல் எப்படி இருக்கும் என்று தெரிய எத்தனை நாள்கள் ஆகுமோ தெரியவில்லை.

கடலைத்தேடும் என் பயணம் தொடர்கிறது.

*** *** ***

குறிப்பு:

ஆறறிவு பெற்று சிந்திக்க தெரிந்த மனிதர்களின் கடவுளைத் தேடும் நிலை, கடலுக்குள் வாழ்ந்து கொண்டு கடலைத் தேடும் மீனைப் போன்றதுதான். ஆறறிவு கொண்டு ஆராய்வதில், இறை நிலை பரிமாணத்தை அறிந்து கொள்ள முடியாது. ஒளியும், நாதமும் கொண்ட மின்னலிழைப் பரிமாணமே இறையாக இருக்கலாம்.

'நாத விந்து கலாதி நமோ நமோ'

நாதம் - ஒலி  விந்து - ஒளி, ஆதியில் தோன்றியவை.

கண்ணை மூடிக்கொண்டு ஒலியும், ஒளியும் இல்லாத உலகை சிந்தித்துப் பாருங்கள் தெரியும். 

 ***  ***  ***

கடவுள் இருப்பது இங்கே 

மாடிக்கு வந்தது ஒரு நிலவு 
மனதுக்குள் மலர்ந்தது பல கனவு 
ஒலியாக நானும் ஒளியாக அவளும் 
ஒன்றி இருப்போம் உயிராக நாளும் 
பேச்சிலும் மூச்சிலும் புது வெள்ளம் 
சிவசக்தியை அறிந்தது என் உள்ளம்

 

 *** *** ***

இறைவன் இருக்கின்றானா? இறைவன் இருக்கின்றானா?

மனிதன் கேட்கிறான்..  அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?

எங்கே வாழ்கிறான்?

நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை

நான்  நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

வீரா.. 01092026

கடலைத்தேடி

  கடலைத்தேடி ப யணப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது. நெருங்கி செல்கிறேனா அல்லது விலகி செல்கிறேனா என்று தெரியாமல் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ...