சுவாமியே சரணம் ஐயப்பா!
- வீரா
ஐயப்பனைக் காண வாருங்கள்
1. என் கனவு
அன்று அமைதியான உறக்கம் என்று சொல்ல முடியாது. கர்ண கொடூரமான என்னுடைய குறட்டை சத்தம் எனக்கே கேட்காத அளவிற்கான உறக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம். கொஞ்சம் கண் மூடும்போதுதான், சுளீர் என்று இடது கால் பாதத்தில் வலி தெறிக்கும். வலிக்குத் தெரியுமா நான் விழித்திருக்கிறேன் அல்லது தூங்குகிறேன் என்று.
இருந்தாலும் இடையில் கனவு வந்தது.
கனவு எப்படி வருகிறது என்று முதலில் பார்த்து விடுவோம்.
விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்ல மனம், புத்தி, அகங்காரம் வழிகாட்டியாக இருக்கிறது. மனமும் புத்தியும் மட்டும் செயல்படும் நிலையில் கனவு நிலை மாறி உறக்கம் உண்டாகிறது. மனமும் புத்தியும் மறைகின்ற பொழுதில் சித்தம் தலை தூக்கி துரியம் எனப்படும் பேருறக்க நிலைக்கு செல்கிறது.
தியானத்தில் வெறும் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. இதுவே சமாதி நிலை.
திருமந்திரம் - 2201
புரியட் டகமே பொருந்தல் கனவு
புரியட் டகம் தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்து ஒன்று புக்கல் துரியமே.
புரியட்டகம் என்றால் சூக்கும உடல் அல்லது நுண்ணுடலில் வருவது கனவு. அதாவது பஞ்சபூதங்களின் தன்மைகள், ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின் தன்மைகள் அடங்கி, அந்தக்கரணங்களில் மனம், புத்தி மற்றும் அகங்காரத்தை ஆன்மா ஏற்கும் நிலை கனவு.
தியானத்திலும் இவ்வாறே விழிப்பு நிலையில் கனவு நிகழ்கிறது.
தியானத்தின் தொடர்ச்சியில் நுண்ணுடலில் மனம், புத்தி செயல்படும் நிலை உறக்க நிலையாகும். மனம் புத்தி செயலற்று நுண்ணுடலில் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. அதுவே சமாதி நிலை.
நான் இப்போது காண்பது சாதாரண உறக்க நிலையில் காணும் கனவு.
'அங்கே பார். அவர் உனக்கு வழி காட்டுவார்' - மறைந்த அம்மாவின் குரல் மட்டும் கேட்கிறது.
தூரத்தில் நின்றுகொண்டிருந்த மனிதரைப் பார்க்கிறேன், மறைந்த அப்பாவைப் போன்ற தோற்றம். கருப்பு நிறத்தில் வேட்டியும், சட்டையும். தோளில் துண்டு இருந்ததா என்று நினைவில்லை.
அவர் முன்னே செல்ல, நான் அவரைத்தொடர்ந்தேன். தொடர்ந்து சென்று பார்க்கிறேன், மறைந்து விட்டார். தேடுகிறேன்.
அவர் சென்று மறைந்த இடம் ஒரு பெரிய மண்டபம் போன்ற தோற்றம். நிறைய ஆண்களும், பெண்களும் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அவர் கிடைக்கவில்லை.
இனித்தேடி பலனில்லை. வீட்டிற்கு போவோம் என்று மண்டபத்தை விட்டு வெளியே, சாலைக்கு வருகிறேன். அப்பொழுதான் கவனிக்கிறேன், கையில் பணம் இல்லை. கை பேசி இல்லை. என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டே மீண்டும் மண்டபத்திற்கு வருகிறேன். ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒருவர் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். அவர் பார்வை, எனக்கு ஏதாவது வேண்டுமா என்பது போல் இருந்தது.
கனவு கலைந்தது.
காலையில் கண் விழித்தவுடன், கனவு மீண்டும் மனதில் மறு ஒளிபரப்பாகியது.
'ஐயப்பனைக் காண வாருங்கள்' என்ற உணர்வு நிலை கட்டளை கிடைத்தது.
ஒன்றவன் தானே!
2. என் தீர்மானம்
மீண்டும் மீண்டும், மனதில் அதே கனவின் மறு ஒளிபரப்பு.
கனவின் பொருளைத் தேடும் ஆர்வம்.
அப்பா மறைந்து நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டது, அம்மாவோ எட்டு வருடங்களுக்கு முன்னரே உலகை விட்டு சென்று விட்டார். இருவரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற சிந்தனை தொடர்ந்து என்னை யோசிக்க வைத்தது.
கருப்பு நிற உடை மட்டுமே என்னை உறுத்தியது. தந்தையின் உருவம் என்னை பாதிக்கவில்லை.
ஒன்றை அறிந்தால், இன்னொன்று இல்லை என்று ஆகிவிடுவதில்லை. ஒளியை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு பொருளைப் பார்க்கும்போது, பொருளை மட்டும் பார்க்கிறோம். பொருளைப் பார்ப்பதற்கான காரணி என்று ஒளி இருப்பதை மறந்து விடுகிறோம்.
கருவறை.
கும்மிருட்டு. கண்ணுக்கு ஏதும் தெரியவில்லை.
ஆராதனை நடக்கிறது. தீப ஒளி மூலவர் மேல் படுகிறது.
தீப ஒளியில் மூலவர் உருவமும் அதன்மேல் படரும் ஒளியும் தெரிகிறது.
முன்னர் இருட்டில் ஒளிந்திருந்த மூலவர் உருவம், இப்பொழுது உருவத்தை, வெளிச்சத்தில் பார்க்கும்போது தெரிகிறது. ஒளிதான் உருவத்தை காட்டுகிறதென்றாலும் ஒளி இருப்பதை நாம் உணர்வதில்லை. நாம் ஒளியை உணரும் பட்சத்தில், அனைத்தும் ஒளியாக தெரிகிறது. மூலவர் தன்மேல் ஒளி படர்ந்து நிற்க ஒளியாக நம்முடலில் நிற்கிறான்.
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன் இருந்தானே.
நாத வடிவான சிவனைப் பற்றி நிற்கும் வெண்சுடரொளியாய் நிற்கும் சக்தியை அறிந்து கொண்டால் சிவமும் சக்தியும் ஒன்றெனத்தெரியும். ஒளிக்குள் ஒளிந்திருப்பது சிவம் என்றும் தெரியும். அப்படி இல்லாமல், வெறும் ஒளியான சக்தியை மட்டும் பார்த்தால் சக்தி மட்டும் தெரியும். ஆனால், அந்த ஒளிக்குள் உறைந்த உருவமாக சிவன் எப்பொழுதும் இருக்கிறான்.
அறிவுக்கு சவால் விடும் மாய நிலைதான் ஒன்றிருந்தால் ஒன்றில்லை. இங்கே ஒன்றுக்குள் அனைத்தும் ஒன்றி நிற்கிறது.
ஒன்றவன் தானே!
அதே மன நிலைதான் எனக்கும், கருப்பு ஒன்று மட்டும் மனதில் நின்றது.
அப்படியே ஐயப்ப பக்தர்களின் புனிதப் பயணம் மனதில் ஓடியது.
கனவின் பொருள் புரிந்தது. ஐயப்பன் என்னை அழைக்கிறார்.
போய்த்தான் தீர வேண்டும். போகணும்னா இந்தியா போகணுமே.
அது அக்டோபர் மாதம், 2026.
நவம்பரில் வரும் கார்த்திகையில் துவங்கி, தை மாதம் வரை பயணம் இருக்கும். பக்தர்கள் ஒரு மண்டலம், அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள். விரதமிருந்து துவங்கும் புனித பயணங்கள் மகர ஜோதி காணும் வரை தொடரும்.
'இந்தியா போகணும்' - என்று சொல்லுமுன்னரே, 'ஏங்க, உங்க தம்பி பையன் கல்யாணம் நவம்பர் பதினொண்ணு. போகலியா?' - என்ற கேள்வி வந்து விழுந்தது மனைவியிடமிருந்து.
பழம் நழுவி பாலில் விழுந்ததோடல்லாமல், வாயில் விழுந்த மாதிரி இருந்தது எனக்கு.
'போகணும். தீபாவளி வேற வருது நவம்பர் எட்டில். டிக்கெட் பத்தாம் தேதிக்கு இருக்கு. ஆனா, ஒரு நாள் சிங்கப்பூர் ஏர்போர்ட் தங்க வேண்டி இருக்கும். கல்யாணம் போக முடியாது.' - என்றேன் தாழ்ந்த குரலில்.
'தீபாவளி என்னங்க? வருஷா வருஷம் வருது. கல்யாணம் அப்படியா?'
'ரெண்டாம் தேதி டிக்கெட் இருக்கு. போடட்டுமா?' - ஏற்கனவே தீர்மானித்து டிக்கெட் கிடைக்கும் நாட்களை பார்த்து வைத்திருந்தேன்.
மனைவி மட்டுமல்ல, மகளும் மறுப்பெதுவும் சொல்லவில்லை.
விமான இருக்கையில் அமர்ந்து கோவை விமான நிலையம் வரும் வரைக்கும் கனவு சொல்லும் செய்தி என்ன என்ற யோசனையாகவே இருந்தது.
ஐயப்பன், இந்த வயதில், அழைப்பதற்கான காரணம் என்பதை சபரி மலை போய்த்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
கன்னி சாமி
3. என் ஏற்பாடுகள்
1985-ன் இறுதி மாதங்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை.
கல்லூரி மற்றும் வங்கியில் என்னுடன் பயணிக்கும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வருகிறார்.
'கிளம்பு. நாம சபரி மலை போவோம்.'
'மாலை போடல. விரதம் இருக்கல. எப்படி மலைக்கு போறது?' - வீட்டில் வேறு மட்டன் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது.
'அதெல்லாம் பாத்துக்கலாம், கிளம்பு.'
குருவாயூரப்பனை வணங்கி, அதிரப்பள்ளியில் குளித்து, கொச்சின் படகு சவாரி செய்து, சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசித்து, எருமேலி வாவர் தர்கா திருநீறு பூசிக்கொண்டு, இருமுடி கட்டி பேட்டை துள்ளல் போகும் பக்தர்களை பார்த்துக்கொண்டே பம்பை நதிக்கரை சென்றடைந்தோம்.
இனி மலை ஏற்றம்தான். சுமார் நான்கு கிலோ மீட்டர் அளவுதான். ஏறுவது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. சரண கோஷம் போட்டுக்கொண்டே பக்த கோடிகளுடன் கரைந்து, பதினெட்டாம் படியை அடைந்தோம்.
படியேற எங்களுக்கு அனுமதி இல்லை. சற்று தூரம் வலது புறம் நடந்து சென்றால் தனி வழி, ஐயனை தரிசிக்க. பெரிய கூட்டம் ஒன்றுமில்லை. நின்று, நிதானமாக திவ்ய தரிசனம் கொடுத்தார் ஐயப்பன்.
நாற்பதாண்டுகள் கழித்து மீண்டும் செல்ல வேண்டும் என்ற மனதின் கட்டாயம். நண்பர் கிருஷ்ணமூர்த்தி, இப்பொழுது ஒரு சட்ட வல்லுநர். அவருக்கு கால அவகாசம் இல்லை.
என்னுடைய அலுவலகத்தில், ஆர்வமுள்ள இளைஞர்களிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்களுக்கும் என்னுடைய அவசரம் தெரியவில்லை. உணவு சமைக்கும் பணியாளர், கீதா அம்மாவிடம் சொல்லி வைத்தேன்.
தம்பி ரவியின் மகன் விஜயின் கல்யாணம் அமர்க்களமாக பதினோறாம் தேதி நடந்தது. பன்னிரண்டாம் தேதியில் இருந்து பயண வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தேன்.
'சார், 21-ம் தேதிக்கு இ-பாஸ் கெடச்சிருக்கு' - பிரதீப் குமாரிடம் இருந்து தகவல்.
இவர், நேற்றுவரை மாலை போட்டு, இருமுடி சுமந்து செல்லும் பக்தர்களை 'என் காலில் விழுங்கள், நான் ஆசி கொடுக்கிறேன்' என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தவர். கீதா அம்மாவின் சகோதரர். என்னுடைய சபரி மலைப் பயணத் தேவையை சொன்னவுடன், உடனே கார் ஓட்ட சம்மதித்த தல்லாமல், தானும் இருமுடி ஏந்த தயாரானார். அவரது அக்கா மகன், விவேக்கின் தயவால் உடனே இருவருக்கும் இ-பாஸ் என்னும் மலை ஏறும் அனுமதி பெற்று விட்டார்.
கார்த்திகை பிறந்தது, 17-ம் தேதி.
கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் மாலை போடும் நிகழ்வு. காலை ஐந்தரை மணிக்கே, கூட்டம் களை கட்டி இருந்தது. இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று மாலையும் போட்டாச்சு. இனி விரத நாட்கள்.
ஜடப்பொருட்களான கல்லாலோ, உலோகத்தாலோ செய்யப்பட்ட ஒரு சிலையைக் காண இவ்வளவு மெனக்கெட வேண்டுமா?
இரவு முழுதும் மலை ஏறி, ஏழாவது மலை உச்சியில் உள்ள தென் கைலாய நாதனான, வெள்ளியங்கிரி சிவனை தரிசிக்கும்போது, அங்கே காண்பது வெறும் கல் என்று எந்த பக்தனும் சொல்ல மாட்டான்.
ஏனென்றால், ஏழு மலை ஏறி மண்ணு, நீர், அனல், காலொடு விண்ணுமின்றி வெளியேறிய பக்தனின் மேனியில் அந்த சிவமே குடிகொண்டிருக்கும். காண்பதெல்லாம் சிவமாய் தெரியும்.
பழநி மலையோ, மருத மலையோ, குமரன் வீற்றிருக்கும் குன்றெல்லாம் தெய்வீக ஸ்தலங்களே.
உலோகம், நவபாஷாணம் அல்லது கல்லால் வடிக்கப்பட்ட சிலைக்கு தீப ஆராதனை நடக்கிறது.
சிலையின் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்கள், நீர் என மாற்றி மாற்றி ஊற்றி அபிஷேகம் நடக்கிறது.
பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆலயப்பணியாளர்கள் அவர்களை ஒழுங்குபடுத்தி வேகமாக அவர்களை வெளியேற்றி, வரிசையில் வந்த அனைவரும் சிலையை தரிசிக்க வசதி செய்து தருவார்கள்.
'முருகா.. முருகா.. வெற்றி வேல்.. வீர வேல்..' - வெளியே கூட்டம் ஆரவாரிக்கும்.
தரிசனம் முடித்தவர்கள் திண்ணை மீது அமர்ந்து கொண்டு ஊர்க்கதை பேசுவார்கள். பஞ்சாமிர்தத்தை விட அதுதான் சுவையாக இருக்கும் போல.
சின்னஞ்சிறு குழந்தைகளும் படிக்கட்டுகளில் தவழ்ந்து ஏறுவார்கள். வெயில் பட்டு படிக்கட்டுகள் சூடாவதால் அதன்மீது தென்னை நார்ப்பாய்கள் போடுவார்கள்.
மலைப்பாக இருக்கிறது. எண்ணற்ற காலம் நீரிலும், நிலத்திலும் பெரிய பாறையாக இருந்த கல் இன்று கருவறைத் தெய்வமாகவும், அமர்வதற்கு திண்ணையாகவும் மற்றும் படிக்கட்டுகளாகவும் மாறி இருக்கிறது.
'ஹரஹர ஹரஹர.. வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா..'
பார்த்தவர்களுக்கெல்லாம் பாறையாய் தெரிந்த கல், ஒரே ஒரு ஜோடி கண்களுக்கு மட்டும் தெய்வமாய் தெரிந்திருக்கிறது. அந்தப்பார்வையில் மட்டும் மூலவராகவும், திண்ணைக்கற்களாகவும், படிக்கட்டுகளாகவும் தெரிந்திருக்கிறது.
சிற்பியின் கலைக்கண்கள்.
இன்று, சிலையை வணங்குபவர்களின் கண்கள், பக்திக்கண்கள். அவர்களுக்கு கல் தெரியவில்லை; மாறாக அவர்கள் பக்தி சிரத்தையுடன் வணங்கும் அந்த தண்டாயுதபாணியே தெரிகிறார்.
தந்தைக்கு மகளாக இருக்கும் ஒரு பெண், கணவருக்கு மனைவி, குழந்தைகளுக்கு அம்மா. இன்னும் எத்தனையோ உறவுகள் அந்த பெண்ணை சுற்றி.
பெண்ணை வெறும் பெண்ணாக மட்டும் பார்க்க முடியுமா என்ன?
திருமந்திரம் - 2290
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.
மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது அங்கே மரம் தெரிவதில்லை. அது மரம்தான் என்றுணரும்போது அங்கே யானை மறைந்து மரமாகி விடுகிறது. பஞ்ச பூதங்களில் முதலான வானம், எங்கும் பரந்துள்ள பரம்பொருளை உள்ளடக்கி மறைத்து நிற்கிறது. பரம்பொருள்தான் அனைத்தும் என்னும்போது, வானம் மறைந்து விடுகிறது.
நான் இனி கன்னி சாமி. முதல் முதலாக மாலை போட்டு சபரிமலை செல்லும் பக்தனுக்கு பெயர் கன்னி சாமி.
இனி காலை, மாலை குளியல். ஐயப்பனுக்கு பூஜை என்று இருக்க வேண்டியதுதான். நேரத்தை இறை நினைவோடு கழிக்க, கண்ணனின் கீதாஉபதேசம் படிக்க ஆரம்பித்தேன்.
மழலையின் புன்னகை
4. என் வழிப்பயணம்
'உக்காந்தா எந்திரிக்க முடியாது. எந்திரிச்சா உக்கார முடியாது. இதெல்லாம் உனக்கு தேவைதானா?' - தர்மபத்தினியின் அதட்டல்.
'அரை மணி நேரம் உக்காந்து இருமுடி கட்டணுமாம்.' - எப்படி உட்காரப்போகிறேனோ என்று நினைக்கும்போதுதான் மனைவியின் அசரீரி குரல்.
கருப்பு வேட்டி. கழுத்தில் துளசி மணி மாலை. தலையில் இருமுடி. தொந்தி வயிறு. பத்து நாட்கள் சவரம் செய்யாத முகம். கண்களில் மட்டும் ஐயப்பனைக் காணும் ஆர்வம். இதை, ஆர்வம் என்பதைவிட, என்னை அழைத்ததன் நோக்கம் என்ன என்பது தெரிய வேண்டும்.
இருமுடி ஏற்று, கோயிலிலுள்ள ஐயப்பனை தரிசிக்கின்றேன். எனக்கு, முன்னதாக, ஒரு அம்மா தன் கைக்குழந்தையுடன் சுவாமியை கும்பிட்டபடி இருந்தார்கள். குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது. நான் வேடிக்கையாய் தெரிந்திருக்கலாம்.
கண்களை மூடி ஐயப்பனை வேண்டிக்கொண்டு கண்களைத் திறந்தால், மீண்டும் அந்த மழலையின் புன்னகை, இப்பொழுது என்னை ஆசீர்வதிப்பதைப்போல்.
பின்புறமாக நடக்க சொன்னார்கள். தேங்காய் உடைக்கும் கொட்டிலில் ஒரு சிதறு தேங்காய் போட சொன்னார்கள்.
அடுத்து, ஊரான் வீட்டு நெய்யில் இனிப்பு பணியாரம். ஆமாம், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க சுண்டலும், பொங்கலும் பிரதீப் வீட்டிலிருந்து வந்திருந்தது. கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அவர் பொங்கல் கொடுக்க, நான் சுண்டல் கொடுத்தேன்.
கார் ரெடி. ஓட்டுவதற்கு இரண்டு ஓட்டுநர்கள், பிரதீப் மற்றும் அவரது அக்கா மகன் விவேக். கூடவெ மனோஜ் வேற, ஒரு குருசாமி மாதிரி. இருபது வருடமாக மலைக்கு சென்று வருகிறார். அவரிடம் கேட்டால், அவர்கள் போவது கோவையிலிருந்து நடைப்பயணம், பெருவழிப்பாதை. காரில் பயணித்து, பம்பையில் இருந்து சிறுவழிப் பயணம் என்பது ஒன்றுமே இல்லை.
20-ம் தேதி இரவு எட்டு மணிக்கு, நான்கு எலுமிச்சையை நசுக்கி, வெற்றிகரமாக சபரிமலைப் பயணம் துவங்கியது.
இங்கே நாம் பயணிக்கும் காலப்பயணத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
முதல் பயணத்திற்கும், இரண்டாம் பயணத்திற்கும் நாற்பது வருடங்கள் இடைவெளி. உடல்தான் பழுத்திருக்கிறதே தவிர மனம், மனதின் ஓட்டங்களில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை.
காலம் ஒரு மாயை.
இப்பொழுதென்பது எப்பொழுதும் இல்லை;
எப்பொழுதும் இருப்பதுவோ இப்பொழுதே!
பிறவிப்பயனால் காலப்பெருவெளிக்குள் நுழைகிறேன்.
அங்கே நிகழ் காலம் என்னும் மாயா உலகின் அமானுஷ்யப்பெருவெளிக்குள் நிற்கிறேன்.
ஒரு புறம், எக்காரணம் கொண்டும் திரும்பி செல்ல முடியாத, மாயமாக மறைந்துவிட்ட கடந்த காலம். எதிரிலோ, கண்களுக்கோ மற்ற புலன்களுக்கோ, எட்டாத எதிர் காலம்.
இதில் நான் உணரும் உண்மை என்னவென்றால், உடலுடனும், உடலற்றும் கடந்த காலங்களில் நாம் இருந்துகொண்டே இருந்திருக்கிறோம் அல்லது இருக்கிறோம் .
திருமந்திரம் - 80
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
திருமூலர் சூக்கும உடலுடன் பல கோடி வருடங்கள், காலப்பெருவெளிக்குள் இருந்ததை 'இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி' என்று குறிப்பிடுகிறார். பின்னர், இறை அருளால் மூலனின் உடலில் புகுந்து, மீண்டும் மனிதப்பிறவி பெறுகிறார்.
சித்தர்கள் முக்காலமும் அறிந்த ஞானிகள். அவர்களுக்கு காலப்பயணம் மிக எளிதாக கை வரப்பட்டிருக்கிறது. போகர் தனது போகர் 7000 என்ற நூலில் காலப்பயணம் செய்ததைப்பற்றிய பாடல்களை எழுதி இருக்கிறார். காலப்பயணத்தில் சந்தித்த முனிவர்களிடம் இருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மருந்து செய்யும் முறையை கற்று வந்திருக்கிறார். எதிர்காலப்பயணம் பற்றிய குறிப்பு எதையும் விட்டு சென்றதாக தெரியவில்லை.
எதிர்காலப்பயணம் பற்றிய குறையை, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்கள் தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள ஆகாய விமானம் முதல் கைப்பேசி வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே செதுக்கிய சிற்பங்களில் விட்டு சென்றிருக்கிறார்கள். அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிர்கால பயணம் மேற்கொண்டு, இன்றைய நாகரிகத்தை அன்றே தெரிந்து சிற்பமாக்கி இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய், புதிதாக கட்டிக்கொண்டிருந்த கோயிலின் நுழைவாயில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதை கோயிலின் உட்புற வளாகத்தில் சிற்பமாக செதுக்கி சென்றிருக்கிறார்கள். அந்த அதிசயத்தை பார்க்க விரும்பினால் நீங்கள் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும். அங்கே நீங்கள் காணும் வெளிப்புறம் சிதிலமடைந்த முன்புற வாசல், அச்சு அசலாக உட்பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள சித்திரத்தில் காணலாம்.
காலப்பயணத்தில் கடந்த காலம், எதிர் காலம் சென்று வரும் சாத்தியம் நிகழ் காலத்தில் உண்டு என்னும் உண்மை நமக்கு தெளிவாகிறது.
[சமீபத்தில் OTT-ல் வெளிவந்த BLINK என்னும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட கன்னட திரைப்படம் காலப்பயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.]
இவை அனைத்திலிருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டென்றால் அது காலப்பிரயாணம் சாத்தியம் என்பதே.
இனி முக்கியமான ஆய்வுக்கு வருவோம்.
இன்றிலிருந்து முறையாக பயிற்சி செய்து ஒரு பத்து வருடங்களில் நாம் காலப்பயணம் செய்யும் திறனைப்பெறுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அன்றைய நாளில், சோதித்து பார்க்கும் ஆவலில் பத்து வருடம் பின்னோக்கி இன்றைய நாளுக்கு வந்தால், நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். பத்து வருடம் முன்னோக்கி இருந்த நான் அந்த உணர்வு நிலையில் இருப்பேன். அதே சமயம், நிகழ் கால வாழ்விலும் எழுதிக்கொண்டிருக்கும் நானும் இன்றைய உணர்வு நிலையில் இருப்பேன்.
இது எப்படி சாத்தியம்?
முறையாக யோகப்பயிற்சி செய்த சித்தர்களுக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.
காலப்பெருவெளியில் எங்கு வேண்டுமானாலும் என்னால் செல்ல முடியும்; உணர்வு நிலையில் இருக்க முடியும். அதாவது, கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று நிலையையும் ஒரே காலத்தில் அனுபவிக்க முடியும்.
முக்காலமும் ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. பழைய கால இசைத்தட்டை எடுத்துக்கொள்வோம். அதில் எந்த புள்ளியில் முள்ளை வைக்கிறோமோ அங்கிருந்து இசை கேட்க ஆரம்பிக்கும். அப்படித்தான் மாயை நிலையில் உள்ள காலமும்.
நாம் உறக்கத்தில் இருந்து கண்விழிக்கும் வேளையில், காலப்பெருவெளியில் எந்தப்புள்ளியில் இருந்து வேண்டுமானாலும் விழித்தெழலாம். விழித்தெழுவது எந்த யுகமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
யோசிப்பதற்கே சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. யோசிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் என்னைப்போல் நீங்களும் காலப்பரிமாணத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.
மெய்யியல் பற்றிய உண்மை விளக்கம் தரும் சித்தர்கள், வித்யா தத்துவம் என்று மாயா தத்துவத்தை விளக்குகிறார்கள். மாயா தத்துவத்தின் ஏழு கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காலம்.
காலம், காலப்பரிமாணம் என்பது மீள முடியாத ஒரு மாயை.
இந்த, சிந்தனைகளோடு என் பயணம் தொடர்ந்தாலும், கனவு எனக்கு சொல்ல வருவதென்ன? என்ற கேள்வி எனக்குள் வலம் வந்து கொண்டே இருந்தது.
21-ம் தேதி அதிகாலை ஆறு மணிக்கு பம்பை சென்றடைந்தோம்.
பம்பை ஆற்றில் நீராடி , புதிய கருப்பு வேட்டி அணிந்து மலை ஏற்றம்.
கனவில் கண்ட மண்டபமாக தெரிகிறது. ஆண்கள், பெண்கள் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அனைவரும் கருப்பு ஆடையில்.
சரியாகத்தான் வந்திருக்கிறேன்.
ஆனால், கனவு சொல்ல வந்த ரகசியம்தான் என்ன?
மாணிக்கக் கூத்து
5. என் மெய்யுணர்வுகள்
சுவாமியே சரணம் ஐயப்பா!
மீண்டும் ஒரு கனவு.
கண்டது ஒரு அறிவியல் அறிஞர், ஆகஸ்ட் கேக்குலே, பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1865.
பென்சீன் [BENZENE] என்னும் வேதிப்பொருளின் தோற்றத்தை வரைய வேண்டும். கார்பனும்,ஹைட்ரஜனும் சரியான விகிதத்தில் இணைய வேண்டும். போதையின் அரைத்தூக்கத்தில் கனவு. அங்கே பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு பாம்பு தன்னுடைய வாலையே கவ்விக்கொண்டிருக்கிறது.
அறிவியல் உலகையே திகைக்க வைத்த, பல்வேறு வேதிப்பொருட்களின் தன்மை அறிய இந்த கண்டுபிடிப்பே அடிப்படை.
வேதியியல் இளங்கலை மாணவனான எனக்குள் ஒரு ஜெர்க். கண்ணால் காணும், காண முடியாத எல்லாப் பொருட்களுக்குள்ளும் ஒரு கணக்கு இருக்கிறது. அணுவுக்குள்ளும் அடங்கும் அந்த சூத்திரம் அண்டத்திற்கும் பொருந்தும்.
அணுக்களின் கூட்டமைப்பான சாதாரணமான இந்த மனித உடல் மட்டும் எம்மாத்திரம்?
இங்கே, ஆரம்பிக்கிறது ஆன்மீக தேடல்.
மெய்யியல் கணக்குப்படி மனிதனின் உடல், மனம், உயிர் 96 உண்மைகளுக்குள் [தத்துவங்கள்] அடங்குவதாக மெய்யுணர்வாளர்கள் காட்டி இருக்கிறார்கள்.
அதில், பிரதம உண்மைகள் - 36 சார்பு உண்மைகள் - 60
பிரதம உண்மைகளில் 24 ஆன்ம உண்மைகள்; 7 வித்தியா உண்மைகள் மற்றும் 5 சிவ உண்மைகள்.
ஆன்ம உண்மைகள் உடல், உயிர் மற்றும் மனம் ஆகும். சிவ உண்மைகள் இறை நிலை உண்மைகள். இவைகளுக்கு இடையில், உலக இச்சைகளில் இயங்குவது மாயை நிலை.
உடல், உயிர், மனத்தை இணைத்து வைத்திருப்பது இறை சக்தி.
இதை படிக்கும் இந்த வினாடியில் உங்கள் நிலை என்னவென்று திருமூலர் சொல்லுவதைப்பாருங்கள்.
உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும் ஒன்று.
அறிவியலின் துணை கொண்டு எவ்வளவு அலசினாலும், அடியும், முடியும் காண முடியாத அதிசயம் உயிர்.
தில்லை அம்பலத்தில் நடனமாடும் அந்த பரம்பொருள், ஒவ்வொரு உயிரியின் உடலிலும் உள்ள உயிருக்கு பற்று கோலாக இருக்கிறான். அண்ட சராசரங்களை ஆட்டுவித்து தானும் ஆடிக்கொண்டிருக்கிறான் இறைவன்.
உடலும் அதற்கு விதிவிலக்கல்ல. கண்ணால் காணும் பரு உடலும், சூக்கும உடலான ஒளி உடலும் இறையோடு இணைந்து ஆடிக்கொண்டிருக்கிறது என்கிறார் திருமூலர்.
திருமந்திரம் - 913
ஒன்றிரண்டு ஆட ஓரொன்றும் உடனாட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே.
பரு உடலும், ஒளி உடலுமாக உள்ள உடல் ஆடிக்கொண்டிருக்கிறது .
இதுவே, ஒன்றிரண்டு ஆட
அதனுடன் உயிர் சேர்ந்து ஆடுகிறது. இந்த மூன்றும் இறையோடு நின்று ஆடுகிறது..
ஓரொன்றும் உடனாட ஒன்றினின் மூன்றாட
இறையோடு சேர்ந்த இந்த மூன்று பரிமாணங்களும் உடலின் ஏழு ஆதார நிலைகளான, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை மற்றும் துரியத்துடன் இணைந்து ஏழும் ஒத்து ஆடுகிறது.
ஓரேழும் ஒத்தாட
இவை அனைத்தும் ஒன்றி நிற்கும்போது, இதனுடன் ஐம்பொறிகளின் குணமும், நான்கு அகக்கருவிகளான மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என ஒன்பது குணங்களும் பொருந்தி இருக்கும். இந்த ஒன்பது குணங்களும் பாசம் என்னும் இச்சா சக்தியுடன் சேர்ந்தாடும்.
ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட
இவ்வாறு பொருந்தி நிற்கும் உடலையே மன்றமாக கொண்டு இறைவன் மாணிக்க ஒளிக்கீற்றுகளாக ஒளிவீசி உடலின் உள்ளே நடனம் புரிவான்.
மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே
சிதம்பர நடராஜரின் திருக்கூத்து நம் ஒவ்வொருவர் உடலிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இதனை மெய்யுணர்வாக கொள்ளும் எவரும் சாத்வீக வாழ்வுக்குள் சென்று விடுவார்கள்.
சாத்வீக எண்ணங்களின் காரணத்தினாலேதான், எனக்கு வந்த கனவின் உண்மை தன்மை அறிவதற்கான பயணம்தான் சபரி மலைப் பயணம்.
உன்னத ஆனந்தம்
6. என் தரிசனம்
பம்பையில் முதலில் ஞான முதல்வனை வணங்கினோம்.
கணபதிக்கு சிதறுத் தேங்காய் போட்டுவிட்டு மலை ஏற்றம் ஆரம்பிக்கும்போது காலை மணி ஆறரை. படிக்கட்டுகளைப் பார்த்ததும் மனம் ஏனோ வெள்ளியங்கிரி மலைப் படிக்கட்டுகள் நினைவுக்கு வந்தது.
கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. சென்ற முறை வந்தபோது, வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை மட்டுமா இருந்தது, இளமையும் அல்லவா இருந்தது. பெருமூச்சோடு, படிக்கட்டுகளில் ஏற ஏற மூச்சு வாங்கியது.
'இது மாதிரி பதினெட்டு கூரை ஷெட்டுகள் இருக்குமாம்.' - பிரதீப் சொன்னார், முதல் கூரையை அடைந்தவுடன்.
வயதானவர்கள் ஏறுவதற்கு வசதியாக நடுவில் கைப்பிடி குழாய்கள் இருந்தது கொஞ்சம் வசதியாக இருந்தது. சிறுவர்களும், சிறுமிகளும் கருப்பு உடையில் துள்ளிக் குதித்து ஏறிக்கொண்டிருந்தார்கள்.
முதல் பதினைந்து நிமிடத்துக்குள் முற்றிலும் வியர்த்து டீ சர்ட் ஈரமாகிவிட்டது.
தாக சாந்திக்காக, உணவிற்காக படிக்கட்டுகளின் பக்கங்களில் கடைகள். மலை ஏறும் பக்தர்கள், இறங்கும் பக்தர்கள் எல்லா கடைகளிலும் கூட்டமாக நின்றிருந்தார்கள். சுத்திகரிக்கப்பட்ட இளஞ்சூடான மூலிகை குடி நீர் இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
நாங்களும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தோம்.
குடி நீரின் தேவை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.
ஒரு நான்கு கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான். ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அறிவிப்பு பலகை இருக்கிறதென்றால், மலை ஏற்றத்தின் கடுமையை தெரிந்து கொள்ளலாம். முதல் இரண்டு கிலோமீட்டர் எனக்கு உண்மையிலேயே கடினமாக இருந்தது.
அதன் பின்னர் கொஞ்சம் சம வெளிப்பாதையும், இறக்கமும்.
முக்கி, முனகி எட்டரை மணி வாக்கில் பதினெட்டாம்படி கண்ணுக்கு தெரிகிறது.
'சூ கழட்டிருங்க' - எங்கும் நிறைந்திருந்த காவலர்களில் ஒருவர் சொல்ல அங்கேயே ஓரமாக போட்டுவிட்டு மேலே சென்றோம்.
அடுத்து.. பதினெட்டு படிகள் - நான் எழுபது வயது கன்னி சாமி. என்னுடன் துணை இருக்கும் முட்டி வலியோடு இந்த படிக்கட்டுகளை எப்படி ஏறுவது என்ற எண்ணமே மலைப்பாக இருந்தது.
ஆனால், முதல் படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும். அலாக்காக தூக்கி மேலே கொண்டு வந்து விட்டார்கள். பெரிய ஆசை, நீண்ட நாள் ஏக்கம் நிறைவேறியது.
இங்கிருந்து நான்கு வரிசையில் இருமுடி சுமந்து வந்த பக்தர்கள். கொஞ்ச தூரத்தில், இருமுடி கட்டாமல் வரும் பக்தர்களும் மூன்று, நான்காம் வரிசையில் கலந்து கொண்டார்கள். முதல் வரிசையில் வருபவர்களுக்கு, ஐயப்பனின் தரிசனம் சற்று அருகாமையில் கிடைக்கும். மூன்றாம் வரிசையில் நின்றிருந்த நாங்கள் வேகமாக சந்நிதியை அடைந்து விட்டோம்.
பத்து வினாடிகள். வெறும் பத்து வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் நிறைவான தரிசனம்.
மனதில் ஒருவகை திருப்தியும், ஆனந்தமும்.
இறைவன் மனிதனுக்கு கொடுத்த பாத்திரம் மனம்.
கைகளில் இருக்கிறது
இரவும் பகலும் நிரந்தரமாக
நம்முடன் வருகிறது - அது
நம்முடன் வருகிறது
எவ்வளவு உழைத்தாலும்
எப்படித்தான் சேர்த்தாலும்
நிறைவதில்லை
பாத்திரம் நிறைவதில்லை..
எள்ளளவு மனம் போதும் என்றால்
மனம் போதும் என்றால்
நிறைந்துவிடும்
பாத்திரம் நிறைந்துவிடும்
கடவுள் நமக்கு கொடுக்கும் பாத்திரம் தற்செயலானது அல்ல. எவர் மீதும் விருப்போ, வெறுப்போ கொள்ளும் நிலையில் இறைவன் இல்லை. ஒருவருடைய மண்ணில் வாழ்வென்பது , ஓர் ஆணும் பெண்ணும் கலந்து இன்புறும் நேரத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அங்கே, ஓர் உயிரை விதைத்து வைப்பதோடல்லாமல், அவ்வுயிருடனே இறுதி வரை பயணிப்பவனும் இறைவனே!
திருமந்திரம்-453
இன்புறு காலத் திருவர்முன்பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்தொழிந் தானே.
உயர்ந்த வானத்தில் உள்ள இறைவன், ஓர் உயிரை படைக்கும்போது அவனுடைய முந்தைய பிறவிகளின் வினைப்பயனாக, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் அவன் பெற்ற இன்ப, துன்ப நிலையும் கணக்கில் கொள்கிறான். அவன் இந்த மண்ணின் பண்புகளுக்கேற்ப வாழும் காலமும், அதற்கேற்ற உலக வாழ்வும் அமைத்து விடுகிறான். இதை, ஓர் ஆணும், பெண்ணும் அன்புடன் கலந்து இன்புற்றிருக்கும் நேரத்தில் செய்து முடிக்கிறான்.
அப்பேற்பட்ட மனதிற்கு, ஐயப்பனை தரிசிப்பது ஒரு உன்னத ஆனந்த உணர்வுதான்.
இருமுடி அவிழ்த்து, நெய் தேங்காய் உடைத்து , உறைந்து போயிருந்த நெய்யினை கொண்டு போயிருந்த சின்ன பாத்திரத்தில் வைத்துக்கொண்டோம்.
நெய்த்தேங்காயை நெய் குண்டத்திலும், மற்றுமிரு தேங்காய்களை சிதறு தேங்காய் உடைக்கும் இடங்களிலும் வீசி உடைத்து கடமைகளை சீராக முடித்துக்கொண்டோம்.
ஒரு வழியாக ஷூவை தேடி கண்டு பிடித்து எடுத்து, காலை உணவை முடித்து நேரத்தைப்பார்க்கிறேன்: காலை மணி ஒன்பதரை.
ஐயப்பன் அழைத்தற்கான இன்னும் காரணத்தை காட்டவில்லை.
மூன்றாம் கால்
7. என் மலையிறக்கம்
'வெயில் ஏறிறுச்சு. ஒன்பதரை மணிக்கே சூடு அதிகம்தான். சீக்கிரம் இறங்கிருவோம்.' - சொல்லிக்கொண்டே இறங்க ஆரம்பித்தோம்.
மலை உச்சியில் இருப்பதற்கான குளிர்ச்சி ஒரு துளி கூட இல்லை. மரங்களும், செடிகளும் எங்கள் மேல் கோபமாக இருப்பதுபோல் ஆடாமல், அசையாமல் 'உம்'மென்றிருந்தது.
வன விலங்குகள் குறிப்பாக யானை வந்து செல்லும் மலைப்பகுதியில்தான் ஐயப்பன் வசிக்கிறார். மனிதர்கள் வந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஒரு நடு நிலைத்தன்மையோடு அனைத்து கட்டமைப்புகளும் இருக்கின்றன. குரங்குகள், உராங்குட்டான் குரங்குகள், மலை அணில்கள் அங்கும் இங்கும் சென்று வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறது.
இரண்டு வழியாக பக்தர்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். ஏறி வந்த வழியில் கொஞ்சம் பக்தர்களும், இறங்கு பாதையில் நிறைய பக்தர்களும் இறங்கிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் சம தளமாக உள்ள இறங்கு பாதையில் நடக்க ஆரம்பித்தோம்.
'ஒவ்வொரு படிக்கட்டா இறங்குறது கஷ்டம். சமதளம்னா, தூரம் கொஞ்சம் அதிகமானாலும் முட்டி வலி இருக்காது. போயிரலாம்.'
'டோலி.. டோலி.. சைட்.. சைட்' - அட.. டோலியில் சுமந்து வருகிறார்கள் பக்தர்களை. ஆச்சர்யம், நல்ல ஆரோக்கியமான பக்தர்களும் டோலியில் வருகிறார்கள். திடகாத்திரமான நான்கு டோலி தூக்கிகள், உடல் முழுதும் வியர்வை வெள்ளக்காடாய். மேலும், கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
டக்கென்று இந்த திருக்குறள் நினைவுக்கு வந்தது.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
உயிரின் பயணப்பாதை
உனக்குத் தெரியும் என்று
உனக்குத் தெரியாது
மனிதன் உடலால் அறியப்படுகிறான். உடல் என்பது ஒரு காரியப் பொருள். உள்ளம் இடக்கூடிய கட்டளைகளை நிறைவேற்றும் கருவி. உடலில் உள்ள கர்மேந்திரியங்கள் எனப்படும் கைகள், கால்கள், வாய், கருவாய், எருவாய் உறுப்புகள் இட்ட வேலையை திறம்பட செய்து முடிக்கிறது. கால் இடறி பெருவிரலில் ரத்தம் வந்தால், உணர்வது உள்ளம் அன்றி பெருவிரல் அல்ல. அதாவது உடல் என்பது உள்ளம் இடும் வேலைகளை செய்யும் ஒரு கருவியே. கீதையும், திருமந்திரமும் இன்னும் ஒரு படி மேலே போய், உள்ளத்தைத் தாண்டி அனுபவிப்பது நுண்ணுடல் என்கிறது. அதனால், கிருஷ்ணர் உன்னுடைய மனமே நான்தான் என்கிறார்.
உள்ளத்திற்கான நினைவூட்டல்களை செய்வது புலன்கள். மனித வாழ்வு புலன் வழி ஆரம்பித்து புலன் வழியே முடிந்தும் போய்விடுகிறது. உடலுக்குள் மிக முக்கியமான ஜீவநாடி ஒன்றிருப்பதை உணர்வதே இல்லை. அதுதான் உள்ளத்தையும் உடலையும் இணைக்கும் பாலம். அந்த ஜீவநாடி ஒடுங்கி விட்டால் உடலுக்கும், உள்ளத்துக்கும் வேலை இல்லை.
உடலில் ஜீவநாடியாக இருப்பது உயிர். உயிருக்கு உன்னைப்பற்றிய உண்மைகள், உனக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள் முழுவதும் தெரியும்.
மனிதன் தன்னைப்பற்றிய உண்மைகள் தனக்கே தெரியும் என்றாலும், அதைப்பற்றிய உணர்வே இல்லாமல் வாழ்ந்து மறைவது எப்படி நடக்கிறது? அதை யார் செய்வது? வேறு, யார் உயிரை எப்பொழுதும் பற்றி இருக்கும் இறைதான்.
மண்ணில் மனிதனைப்படைக்கும்போதே, உடலின் புருவ மத்தியில் குடியேறும் இறைவன், அவனுடைய பல பிறவிகளின் நினைவுகளை அப்பொழுதே அழித்தும் விடுகிறான்.
கண்ணின்று காட்டி களிம்பு அறுத்தானே..
இதுதான் பிறப்பின் உண்மை நிலை என்றால் எனக்குள் இருப்பது எனக்குத் தெரியவே தெரியாதா?
ஏன் தெரியாது? முயன்றால் முடியாததென்றொன்றுண்டா!
உன்னுயிரில் இருந்து நினைவுகளை அழித்தவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். உள்ளம் உடலை இயக்குகிறதென்றால், உயிர் உடலுக்கும், இறைக்கும் இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது. இந்த உண்மையை உயிர் அறிந்து கொள்ளாமல் இருக்கும் வேலையை உள்ளம் பார்த்துக்கொள்கிறது.
உயிர் என்றாவது ஒருமுறை உண்மைகளை சொல்ல வேண்டிய காலம் வந்தால், உள்ளத்திடம்தானே சொல்ல முடியும். எனவே, உள்ளத்திடமே சரணடைந்து விடலாம்.
'உள்ளமே, உள்ளமே எப்பொழுதும் புலன் வழி செல்லாமல், உயிரிடம் என் கதையை கேட்டு சொல்' - என்று கேட்டுப்பார்ப்போம்.
புலன் வழி வரும் எண்ணங்கள் சீர்பட சீர்பட, உள்ளம் உயிரை அறிய முற்படும். மேகங்கள் விலகிய நிலவாய் உயிர் பிரகாசிக்க ஆரம்பிக்கும். உயிருடன் இணைந்திருக்கும் இறையும் வெளிப்படும்.
யாரும் கேட்காமலே உன்னுடைய உயிரின் காலப்பயணம் வெளிப்படும்.
ஏழுலகும், விண்ணும் அவற்றில் வாழும் அனைத்து உயிர்களும் தன்னுள் கொண்ட முழுமையான அண்ட சராசரமும், அவற்றின் குணங்களும், பழமையான வேதங்களும், உலகைப்படைத்த ஆதி பகவனையும் அறிந்த ஆதி யோகியான சிவபிரான் என் கண்களின் உள்ளே அன்றி வேறெங்கும் இல்லை.
திருமந்திரம் - 1871
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்ட சிவனும்என் கண்அன்றி இல்லையே.
நாம் ஒன்று தேடப்போய் நமக்கு ஒன்று கிடைத்துவிட்டது பாருங்கள். உன்னுடைய உயிர்ப்பயணம் மட்டுமல்ல, ஏழுலகும் வசப்படும் சக்தி உன் கண்களுக்கு இடையில் வசிக்கும் இறைவனிடம் இருக்கிறது. அவன் உன் உயிரோடு கலந்திருக்கிறான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
இறை நிலையில் நின்று உயிர் இயங்க ஆரம்பித்தால், உள்ளத்திற்கு உயிரின் பயணப்பாதை தெளிவாகப்புலப்படும்.
இறை நிலையில் முக்காலமும் உணர்ந்த ஞானிகள் சாதாரண மக்களின் எதிர்காலத்தை தங்களின் அறிவுப்பார்வையில் அறிந்து சொல்வதும் இப்படித்தான்.
இறங்கும்போது, முட்டி வலியோடு, நான் பட்ட கஷ்டங்கள் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஒவ்வொரு அடி கீழ் நோக்கி எடுத்து வைக்கும்போதும், கொஞ்சம் கனமான உடலைத்தாங்கும் கால்கள் நடுங்கியது. அடுத்த அடி எடுத்து வைக்க அவகாசம் தேவைப்பட்டது.
செங்குத்தாக இறங்கும் பாதைகளில், கொண்டை ஊசி வளைவுகள் வேறு. இந்த மாதிரி வளைவுகளில் பேருந்துகள் வளைந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். வலது புறம் மெதுவாக சென்று, கவனமாக கீழ் நோக்கி வளைத்து பேருந்து செல்லும். அப்படித்தான் நானும் ஒவ்வொரு அடியாக வைத்து இறங்க வேண்டி இருந்தது.
பதினோராவது வளைவு வந்த போதுதான் அறிவிப்பு பலகையை பார்த்தேன். இன்னும் பத்து வளைவுகள் இருக்கிறது என்று நினைக்கும்போதே மூச்சு முட்டியது.
'இதுவும் கடந்து போகும்' - மனம் சொன்னாலும் உடல் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. எப்படியும், இன்னும் கொஞ்ச நேரத்தில் பயணம் முடிந்து காருக்கு சென்றுவிடுவேன். அதை, நினைத்துக்கொண்டே அடுத்த அடி.. அடுத்த அடி.
ஒரே ஒரு முறை, முட்டி பிசகினால் அவ்வளவுதான். கொண்டை ஊசி வளைவுகளில் மருத்துவ உதவிகளுக்காக கொட்டகைகள். கடைகளின் முன்னர், இலவச டர்பெண்டைன் ஆயில் பாட்டில்கள். தேவைப்பட்டவர்கள் வலி உள்ள இடத்தில் பூசி கொஞ்சம் மசாஜ் செய்து கொள்ளலாம்.
வெள்ளியங்கிரி நாதனை ஏழாவது மலையில் தரிசிக்கும்போது, அங்குள்ள வனக்காவலர் [பூஜாரி அல்ல], நெற்றியில் பூசி விடும் திருநீறில் இதே வாசம் வரும். அதுவும் இதே டர்பெண்டைன் ஆயில் தானா என்று தெரியாது. ஆனால், கொஞ்சம் சுகமாக இருக்கும் அதன் வாசமும், நெற்றில் அதன் விறுவிறுப்பும்.
நான் மட்டும் மெதுவாக இறங்கவில்லை. எல்லோரும் என்னைப்போலத்தான் இறங்கினார்கள். எப்படியோ, அந்த ஹரிஹரனின் தயவால் பம்பையை அடையும்போது மணி பன்னிரண்டரை.
உச்சி வெயில்.
ஒரு பிஸ்கட்டும், சுக்கு பானகமும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பிஸ்கட் கொடுத்த, அந்தப் பெண்ணின் கனிவான பார்வையில் ஒரு கணம் திகைத்துப்போனேன்.
கனவின் இறுதியில் வந்த பெண்ணின் பார்வை.
ஐயப்பன் என்னதான் சொல்ல வருகிறார்?
உண்மை விளக்கம்
8. என் மெய்யியல் பயணம்
'தோற்றமும், முடிவுமற்ற என்னுடன் சேர்பவர்கள், என்னுடன் கரைந்து போவார்கள். மீண்டும் அவர்கள் வாழ்க்கை சூழலில் சிக்க மாட்டார்கள்' - கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்னது.
20-ம் தேதி, புறப்படும் நாள் காலையில் கீதையில் எனக்கு கிடைத்த வாசகம் இது.
மெய்யியல் பற்றிய ஆர்வத்தில் சித்தர்கள் எழுதிய புத்தகங்களான, திருமூலரின் திருமந்திரம், அகத்தியரின் சௌம்ய சாகரம், போகரின் 7000, பாம்பாட்டி சித்தரின் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள், திருக்குறள் மற்றும் பலப் பல நூல்களில் தேட ஆரம்பித்த நேரம்.
நாட்பட, நாட்பட மெய்யியல் பற்றிய உண்மை நிலை அறிய நாட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. படித்ததை எழுதவும் ஆரம்பித்தேன், ஒரு பிளாக்கர் ஆக.
இந்த சமயத்தில்தான் என் தம்பி, ரவியிடமிருந்து இரண்டு .pdf நூல்கள் கிடைத்தது. ஒன்று உண்மை விளக்கம், மற்றொன்று சிவப்பிரகாசம்.
நூல்களைப்பற்றி சொல்லுமுன்பு அதன் பின்புலத்தை சொல்வது சுவாரசியமாக இருக்கும். ரவிக்கு இந்த மென்புத்தகங்கள் ஒரு தமிழ் அறிஞரிடமிருந்து கிடைத்தது.
'கடவுளை நேரில் பார்த்தவர்கள் இருக்க முடியுமா?' - என்னும் கேள்விக்கு பதிலாய் வந்தவர். தான் கடவுளை நேரில் பார்ததல்லாமல் தன்னுடைய நண்பருக்கும் நேரில் தரிசனம் தர சொல்லி காட்டியவர். அவர் பெயர் தமிழரசு, கோவை வெள்ளலூரில் வசித்தவர்.
நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க சில அற்புதங்களையும் தெய்வம் நிகழ்த்திக்காட்டி இருக்கிறது. நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. உண்மை அதுதான்.
இரண்டு புத்தகங்களும் பாடல் வடிவில், பாடலுக்கான விளக்கங்களுடன் இருந்தது. ஏற்கனவே, மெய்யியலின் 96 தத்துவங்களைப் பற்றி படித்திருந்ததால் இவ்விரு புத்தகங்களும் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. புரிந்து கொள்ள கடினமாக இருந்தது.
இந்த கால கட்டத்தில், சிதம்பரம் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வந்தது. சிதம்பரம் நடராஜரை வணங்கி, கிழக்கு கோபுர வீதியில் வெளியே வந்தேன். அங்கிருந்த புத்தக கடையில் தேடியபோது, உண்மை விளக்கம் என்ற புத்தகம் கிடைத்தது. தம்பி அனுப்பிய புத்தகத்திற்கான தெளிவுரைப் புத்தகம். விடிவெள்ளி போல் கிடைத்த இந்த புத்தகம் என்னுடைய மெய்யியல் தேடலுக்கான விளக்கங்களை கொடுத்தது.
'இளவரசிய தூக்கிட்டுப்போன ராஜா, அவளையே கல்யாணமும் பண்ணிக்கிட்டார். அப்புறம் ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க.'
'அவ்வளவுதான். கதை முடிஞ்சது. எல்லாரும் தூங்கப்போங்க' - கதை சொன்ன தாத்தா பேரனையும், பேத்தியையும் தூங்க போக சொன்னார்.
'தாத்தா, இளவரசியும், ராஜாவும் இப்ப தூங்க போவாங்களா?' - பேரன் கேட்டான்.
'இல்ல தங்கம், அது கதை. கதை முடிஞ்சா எல்லாம் முடிஞ்சது. அதுக்கு மேல ஒண்ணும் இருக்காது.' - தாத்தா அவர்களை தூங்க வைக்க பார்த்தார்.
'நேத்து கிருஷ்ணர் கதை சொன்னீங்க. கதை முடிஞ்சு அவரும் செத்துட்டார். பின்ன எதுக்கு அவர் படத்தை வச்சு கும்பிட சொல்றீங்க?'
தாத்தாவுக்கு யாரோ தன்னை பிடரியில் ஓங்கி அடித்ததுபோல் இருந்தது.
கிருஷ்ணரின் காலம் துவாபர யுகத்தின் முடிவாகவும், கலி யுகத்தின் ஆரம்பமாகவும் சொல்லப்பட்டு வருகிறது. கலி யுகத்தில் கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுப்பார் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
மஹாபாரதப்போரில் கண்ணன் அருளிய கீதை இன்றும் நமக்கு படிக்க கிடைக்கிறது. கண்ணனின் சந்ததியினர் என்ன ஆனார்கள்? கதை முடிந்ததால் அவர்களும் மடிந்து போனார்களா?
'மானிடர் ஆன்மாவுக்கு மரணம் இல்லை. மறுபடி மறுபடி பிறக்கும்.' -என்றவன் கண்ணன்.
கண்ணன் தேவர்களின் வம்சம், அதனால் அவதாரம் மட்டுமே எடுக்க முடியும்.
எல்லாம் சுவையான கதைதானே. கதை முடிந்தால் எழுந்து போய்விடுவதுதானே முறை. ஏன், அதையே கட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறோம். அடுத்தடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுத்து அவர்களையும் சிந்திக்க விடாமல் செய்கிறோம்.
பழையனவென்று பூஜிப்பவர்களும், நிந்திப்பவர்களும் சிந்திக்க வேண்டியது என்று ஒன்று உண்டு.
அறிவுக்கு ஒவ்வாத பழமை கருத்துக்களை ஒதுக்குவது, பூஜிப்பவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், நிந்திப்பவர்கள் அறிவுக்கு உகந்த பழமை கருத்துகளை ஏற்றுக்கொள்வது.
இதில் சோகம் என்னவென்றால், இவர்களுக்கென்று ஒரு கூட்டம் சேர்ந்தவுடன், தன்னுடைய கருத்தை வலுப்படுத்த, அவர்களின் கருத்து சரியோ, தவறோ, முட்டுக்கொடுக்க ஆரம்பிப்பதுதான்.
சரி என்று பட்டதை சுயமாக சிந்தித்து அதன் வழி நடப்பது ஒன்றுதான் உண்மையான மெய்ஞ்ஞானத்தை வழங்கக்கூடியது.
நல்லன போற்றி அல்லன அகற்றுவதால் கிடைக்கும் பலனை திருமூலர் சுட்டிக்காட்டுவதையும் கேட்டுக்கொள்வோம்.
குயவன் மண்ணைக்குழைத்து இரண்டு மண்பானைகளை செய்தான். ஒன்றினை சூளையில் இட்டு சுட்டான். மற்றொன்றை அப்படியே வைத்து விட்டான். மழைபெய்த போதும், தீயில் சுட்ட பானை திடமாக இருந்தது. சுடாத பானை மீண்டும் மண்ணாகவே கரைந்து விட்டது. தீயில் சுடாத பானையைப்போல் எண்ணற்ற மனிதர்கள் மண்ணோடு மண்ணாக மறைந்துபோகிறார்கள்.
திருமந்திரம் - 143
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்வீழின் மீண்டுமண் ஆனாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாரே.
இறைவனைப்பற்றிய எண்ணங்களை சிந்தித்து அறவழியில் வாழ்பவர்கள், சுட்ட பானை போல் திடமாக இருந்து, இறைவனடி சேரும் பேறு பெற்றவர்கள். மீண்டும் பிறப்பதில்லை.
மற்றவர்கள் சுடாத பானை, மீண்டும் மீண்டும் மண்ணாக கரைந்து, பிறந்து பிறவிச்சுழலில் சிக்கித் தவிப்பவர்கள்.
மெய்யியல் கற்று மெய்ஞ்ஞானம் பெற்ற ஞானிகள் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை.
ஒருவழியாக, காருக்கு போகலாம் என்றால், பார்க்கிங் வசதி இல்லாததால், சுமார் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலக்கல் என்னும் இடத்தில் இருந்து கார் வரவேண்டும். இன்னொரு மணி நேரம் கொதிக்கும் வெயிலில் நிற்க வேண்டியதாகி விட்டது.
அப்படி, இப்படி என்று கோவை திரும்பும்போது இரவு மணி பன்னிரண்டரை. ஒரு தேங்காயை உடைத்து என்னுடைய சபரிமலை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தேன்.
'ஐயப்பா, எதற்கு என்னை அழைத்தாய்?' என்ற கேள்வி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
ஊன்றுகோல்
9. என்னை அழைத்ததேன்?
கெண்டைக்கால் பிடித்திருக்கும். தொடை இரத்தம் கட்டி இருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் நடையில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்.
இந்த முறை, எந்த தடுமாற்றமும் இல்லை.
ஏறும்போது நான்கு கிலோமீட்டர் தூரம் செல்ல இரண்டு மணி நேரம். இறங்குவதற்கு மூன்று மணி நேரம். இறங்கும்போதோ, கடும் வெயில். ஒரு மணி நேரம் வெயிலில் காத்திருப்பு வேறு.
இவ்வளவு கடினமான பயணத்திற்கு பிறகும் எந்த அசௌகர்யமும் இல்லை. இதற்கும் முதல் நாள் சுத்தமாக தூக்கம் இல்லை. இரண்டாம் நாள் விடிகாலை இரண்டு மணிக்குமேல் தூக்கம்.
திரும்ப, திரும்ப அந்த கனவு மனதில் மறு ஒளிபரப்பு. கூடவே பயணத்தின் ஒப்பு நிலையும். கனவு பம்பை அடிவார நிகழ்வுகளோடு ஒத்துப்போகிறது.
என்னுடைய வாழ்வில், சில கனவுகள் எதிர்கால நடப்புகளோடு ஒத்துப்போயிருக்கிறது. மும்பையில் பணியில் இருந்த காலம் அது. பாஸ்போர்ட் எல்லாம் நமக்கெதற்கு என்றிருந்த காலம். கனவில், நான் விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா செல்வதற்காக நிற்கிறேன். என்னை வழியனுப்ப மனைவி, மற்றும் உறவினர்கள் வந்திருக்கிறார்கள். ஒரு ஆறு வருடங்கள் கழித்து அந்த கனவு நிஜமாகியது, இன்னும் இந்தக் கனவு எனக்கு ஆச்சர்யமே.
இது மாதிரி சில கனவுகள் வந்து அது நடக்கவும் செய்திருப்பதால், இந்த கனவில் ஐயப்பன் சொல்ல வரும் செய்தி என்ன என்ற ஆய்வில் மனம் அல்லாடிக்கொண்டிருந்தது.
விடையை மனம்தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.
இளங்காலை வெயில். மென்மையான யூகலிப்டஸ் மணம் கலந்த ஊட்டி மலைக் காற்றும், குளிரும்.
'ஹேனே.. இல்லி பா' - சரித்திர ஆசிரியர் ஜோகியின் குரலுக்கு தேன் சிட்டுக்களாய் பறந்து வந்தார்கள், ஏழாம் வகுப்பு மாணவிகளான சரோஜாவும், பார்வதியும்.
என்னைக்காட்டி, 'இவன, செவந்த்-பி கிளாஸ்ல சேத்தி புடு'.
அவர்களும் செவந்த்-பி கிளாஸ் என்பதால் என்னை சந்தோஷமாக, குன்றின் உச்சியில் இருந்த வகுப்பறைக்கு கூட்டி சென்றார்கள்.
வகுப்பறைக்கு குடிநீர் எடுக்க, குன்றுக்கு கீழே வந்த அவர்களின் உற்சாகமான பேச்சும், கிளு கிளு சிரிப்பும், அதிசயமாக இருந்தது எனக்கு.
'பிக்கண்ணுனே' - செல்லும் வழியில் விக்கிப்பழ மரத்தடியில் கிடந்த பழத்தை பொறுக்கிய பார்வதி சத்தம் போட்டாள்.
'எனகா.. எனகா ' - சரோஜா கெஞ்சினாள்.
எனக்கு படுகு மொழி தெரியாது. ஆனால் அவர்கள் பேசியது மனதில் அப்படியே பதிவாகிவிட்டது.
இந்த முதல் நாள் நினைவு மலர்கள் என் மனதில் பசுமரத்தாணிபோல் உயிரில் பதிந்து விட்டது.
இந்த நிகழ்வின் எந்த அம்சமும், அது வெயிலாகட்டும், குளிராகட்டும், மணமாகட்டும், சிறுமிகளாகட்டும் வாழ்வில் அதனை ஒத்த நிகழ்வுகள் வர நேரிட்டால், மனம் பாய்ந்து அங்கு ஒரு நிமிடம் வாசம் செய்துவிட்டு, அங்கிருந்து எண்ணங்கள் மனதில் கிளை விட்டு வளரும்.
மனதின் தன்மையே அதுதான்.
கடனே என்று எதையோ செய்து கொண்டிருப்போம். அந்த செயலின் விளைவுகள், மூளையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனுபவப்பதிவுகளுடன் ஒன்றும்போது, அந்த அனுபவ நிகழ்வை எடுத்து வைத்து மனம் அசை போடும். சிறு மயிரிழை அளவு ஒத்துப்போகும் செயல்களை கூட மனம் விட்டு வைக்காமல் தாவி விடும்.
மிகுந்த சிரமப்பட்டு தியானத்தில் அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்கும் வேளையில், ஊதுபத்தி மணம்கூட, முப்பது வருடங்களுக்கு முன்னர் சுவாசித்த மணத்துடன் ஒத்துப்போனால், மனம் அங்கே போய் நின்று நம் தியானத்தை கேலிப்பொருளாக்கும்.
இவ்வாறு தொடரும் எண்ண அலைகள் மனதை ஓரிடத்தில் நில்லாமல் தொடர்ந்து திசை திருப்பிக்கொண்டே இருக்கும்.
அனுபவ நினைவுகளுடன் எண்ண அலைகளை ஒப்பீடு செய்ய விழி, செவி, மூக்கு, வாய் மற்றும் மெய் முதலியன மனதிற்கு தொடர்ந்து கொடுக்கும் செய்திகள் முக்கிய காரணிகளாக அமைகின்றன. கூடவே, புதிய அனுபவங்களை மூளையில் சேமித்து வைக்கவும் செய்கிறது.
மனிதனுக்கு இன்பத்தை கொடுக்கும் இதே காரணிகள்தான் துன்பத்திற்கும், மயக்கத்திற்கும் காரணமாகின்றன.
புலன்களுக்கு, புறக்காரணிகளால் கிடைக்கும் இன்பம், சிற்றின்பம் என்னும் போகம். அகக்காரணிகளால் கிடைக்கும் இன்பம், பேரின்பம் என்னும் போதம்.
போதம் என்பது ஞானம். விழிப்புணர்வில் மெய்யுணர்வு, மெய்யறிவு பெற்று துரிய நிலையில் பெரும் பேராஇயற்கை அல்லது முடிநிலை. இந்நிலையே சுத்தம் எனப்படும்.
இதுவே ஆன்மா சுத்த நிலையில் பெரும் போதம் என்னும் ஆனந்தமாகும்.
உண்மை விளக்கம் - 1
பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதாநந் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய்! விண்ணப்பம்;- பொய்காட்டா
மெய்யா! திருவெண்ணை வித்தகா! சுத்த வினா
ஐயா!நீ தான்கேட் டருள்.
ஆன்ம தத்துவங்கள் 24, வித்யா தத்துவங்கள் 7, சிவ தத்துவங்கள் 5 என்னும் முப்பத்தாறு தத்துவங்களில், ஆன்ம தத்துவங்கள் பொய்யான, நிலையில்லாத இன்பம், துன்பம், மயக்கம் என்னும் மூவுணர்வுகளைத்தருகிறது.
புலன்களால் பெறப்படும் இந்தப்பொய்யான மாயை அகலும்போது போதானந்தப்பொருள் வெளிப்படுகிறது.
இறை நிலை, ஜோதியாய், அறிவாய் வெளிப்பட்டு இன்பம் வழங்குவதே போதானந்தப்பொருள். இதனையே, துரிய அருள் நிலை என்றும் துரியாதீத ஆனந்த நிலை எனவும் சொல்வார்கள்.
திருமந்திரம் - 1459
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
வோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுத் தறியாமே.
போதானந்த வேளையில், மலரின் மொட்டுக்குள் மணம் அடங்கி இருப்பதுபோல், ஜீவனுக்குள் அடங்கி இருக்கும் இறை மணம் வெளிப்படும். தியானத்தில் துரிய நிலையில், மெய்யுணர்வில் நிற்பவரின் சுழுமுனை நாடியில் கஸ்தூரி மணம் பரவி நிற்பதைபோல் இறைமணம் பரவி நிற்பதை உணர்ந்தின்புறுவார்கள்.
கேவல நிலை என்னும் பிறப்பின் முன்னரும், சுத்த நிலை எனப்படும் இறப்பின் பின்னரும் இல்லாமல் சகல நிலையில் இருக்கும் நாம் எவ்வாறு போதானந்தப்பொருள் பெறுவது என்ற கேள்வி மனதில் தோன்றுகிறதல்லவா?
அதற்கான பயிற்சி இதோ!
எளியமுறை நான்கு படிகள்:
1. குறைந்த பட்சம் ஒரு முப்பது நிமிட நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி.
2. காயகற்ப பயிற்சி அறிந்திருந்தால், காயகற்ப பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
3. தியானப்பயிற்சி துவங்குமுன்னர் ஒரு பத்து நிமிடம் பிராணாயாமப் பயிற்சி.
4. தியானம்:
முதலில், நம் புலன்களை கருத்தில் கொண்டு அவற்றை அகத்தின் உள்ளே நிலை பெறுமாறு தியானப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆக்கினையில், புருவ மத்தியில் இருக்கும் இறை நிலையை மனதில் எண்ணுங்கள். அங்குள்ள ஜோதியை கண்களில் உள்முகமாக கண்டு உணர தலைப்படவும். அங்கு எழும் நாதத்தை காதுகளால் கேட்கவும். அந்த ஆகுதியில் உண்டாகும் மணத்தை முகருங்கள். அண்ணாக்கில் வழியும் அமிர்தத்தை உண்பதாக கருத்தில் கொள்ளுங்கள். உடலின் ஒவ்வொரு சிற்றறையிலும் பேரானந்தம் பரவுவதை, இந்நிலையில் சிந்தித்திருங்கள்.
பேரானந்த நிலையில் இருப்பதை பதினைந்து நிமிடத்திலிருந்து வளர்த்துக்கொண்டே செல்லுங்கள்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
போதானந்தமும் மனப்பழக்கம்.
மனம் சொன்னது.
ஒரே ஒரு ஊன்றுகோல் மட்டும் இறங்கும்போது கையில் இருந்திருந்தால், பயணம் மிக எளிதாக அமைந்திருக்கும்.
எனக்கு மட்டுமல்ல, மலை இறங்கும் அனைவருக்கும் ஊன்றுகோல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
இதுவரை, பொறுமையாக படித்திருந்தால், 'என் கனவின் உள்நோக்கம் என்ன?', உங்கள் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி!
சுவாமியே சரணம் ஐயப்பா!
,

No comments:
Post a Comment