ஒரே ஒரு கேள்வி
ஒருநாள் கடவுளைப் பாக்கணும்
ஒண்ணே ஒண்ணு கேக்கணும்
மனிதனைப் படைத்தானே காரணம் கேட்கணும்
வினைப்பயன் என்பான் மூலத்தை கேட்கணும்
கோயில்கள் தோறும் சிலையாய் நிற்கிறான்
அத்தனை மனிதனும் அங்கே பிச்சை எடுக்கிறான்
எதற்கு இந்த மாயை சொல்லிவிட்டு நில்
இதற்கு மேலாவது அவன் வாழட்டும் செல்
ஒருநாள் கடவுளைப் பாக்கணும்
ஒண்ணே ஒண்ணு கேக்கணும்
ஆண்டவனே, எனக்கு ஒரு உண்மை தெரியும்.
நீ பிறக்கும்போதே நானும் பிறந்துவிட்டேன்.
நம்மோடு மாயையும் சேர்ந்து பிறந்து விட்டது.
எனக்குள் நீ இருப்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல் உன்னைச்சுற்றி நானிருப்பதும் உண்மையே! ஆனால், உன்னை அணுகாமல் மாயை என்னும் பாசம் பார்த்துக்கொள்கிறது.
நீ ஒரு மதி மயக்கி வனம். உன்னுள் நுழைந்தவர் எவரும் தன்னிலை மறப்பது உறுதி. நானும் என்னுடனிருக்கும், மாயையும் உன்னுடன் இணைந்தால், உன்னுள் கரைந்து போவோம்.
இதை நான் சொல்லவில்லை. திருமூலர் சொல்லி இருக்கிறார்.
திருமந்திரம் - 115
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி
பதியினை சென்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசம் நிலாவே.
உலகம் தோன்றும்போதே, இறைவனுடன் அனைத்து உயிர்களும், பாசம் என்னும் மாயையும் தோன்றி இருக்கிறது. இறைவன் எப்படி ஆதி பகவன் என்றறியப்படுகிறாரோ அதேபோன்று உயிர்களும், மாயையும் ஆதியில் தோன்றியவையே. உயிர்கள், இறைவனை சென்று சேராமல் பார்த்துக்கொள்கிறது மாயை. ஒருவேளை, நல்ல முறையில் தவம் இயற்றி, மாயையை வெல்லும் உயிர்கள் இறைவனை சென்றடையும். அவ்வாறு சென்றடையும்போது, உயிர்களும், மாயையும் தன்னிலை இழந்து இறைவனிடம் ஐக்கியம் ஆகிவிடும்.
*** *** *** *** ***
No comments:
Post a Comment