கடமை அதுவே வாழ்க்கை
யாரடா இங்கே கடங்காரன்
காட்டடா நானும் பாக்கணும்
எங்கிருந்து கொண்டு வந்தான்
யாருக்கு அவன் கொடுத்தான்
கொண்டு வந்தவன் எவனுமில்லை
எடுத்து செல்ல ஏதும் இல்லை
அவனுக்கு கொடுத்தவன் எவனோ
அவனே இவனுக்கும் கொடுத்தான்
கடங்காரன் என்று யாருமில்லை
கொடுத்தவனும் இங்கிருந்தே கொடுத்தான்
உடலைக் கொடுத்த ஆண்டவனே
உலகில் வாழவும் வைத்தான்
உனக்காக நொந்தவள் அன்னை
வளர்த்திட வந்தவன் தந்தை
கடனை எல்லாம் தீர்த்துவிடு
கடமை அதுவென வாழ்ந்துவிடு
மண்ணில் பிறந்த நாள் முதல், மறையும் நாள் வரை வாழ்க்கை கற்றுக்கொடுக்கிறது.
முதலில் அம்மா, தொடர்ந்து அப்பா, உறவுகள் மற்றும் ஆசிரியர் என பாடங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நண்பர்கள் வந்த பிறகு கற்றலின் தன்மை மாறுகிறது. நல்லதெல்லாம் அடக்குமுறையாக தெரிகிறது.
பெண்ணொருத்தி காதலியாய் வந்தவுடன், உலகமே வண்ண மயமாகிவிடுகிறது.
மனைவி என்றானவுடன் கடமை கண்ணுக்குத் தெரிகிறது. குடும்ப சுமை ஏறும்போது வாழ்வில் பயம் நிழலாடுகிறது.
இதற்குமேல் வழியில்லை என்று தெரியும்போது வாழ்க்கை பற்றிய கேள்வி எழுகிறது. இதுவரை தெரியாத கடவுள்மேல் கோபம் வருகிறது, கூடவே பக்தியும் வருகிறது.
நான் ஏன் பிறந்தேன்? என்ற கேள்வி எழும்வரை வாழ்க்கை இழுத்துச்செல்கிறது. வாழுகின்ற வாழ்க்கையில் நாம் பட்ட கடனும் கண் முன்னே தோன்றி போகிறது.
அன்னையும், தந்தையும் தவிர யாருக்கும் கடன்படவில்லை என்ற உண்மை விளங்கும் போது, கடமை எதுவென்று தெரிகிறது.
உன்னைச்சுற்றி எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நீ ஒரு தனித்தீவுதான் என்றுணரும்போது தான், வாழும் ஆசை உன்னுள் முளைக்கிறது.
இந்த ஆசை வந்தவுடன், வாழும் வகை அறியாமல் மண்ணில் இருந்து மறைவோர் வாழ்க்கை ஓர் நீர்க்குமிழி.
எல்லாவற்றையும் கற்றுத்தரும் வாழ்க்கை, வாழ மட்டும் கற்றுத் தருவதில்லை.
திருமந்திரம் 143
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இருக்கின்ற வாறே.
இரண்டு வகை மண்ணால் ஆன பாத்திரங்கள் இருந்தது. ஒன்று, தீயினால் சுட்டது, மற்றொன்று சுடாதது. வானத்திலிருந்து மழை பாத்திரங்களின் மீது பொழிந்தால், சுடாத பாத்திரம் மட்டும் மீண்டும் மண்ணாகிவிடும். மனிதர்கள் வாழும் நாட்களில், இறைவனை நாடி அற வாழ்க்கை வாழ்ந்து தீயில் சுட்ட பாத்திரம்போல் திடமாக இல்லாமல், மண்ணில் இருந்து மறைந்து போகிறார்கள்.
அற வாழ்க்கை என்பதே, யாருக்கும் கடன்படாமல், பட்ட கடனை தீர்ப்பதையே கடமையாக எண்ணி வாழ வேண்டும்.
*** *** *** *** ***
No comments:
Post a Comment