Friday, October 31, 2025

காணாததை காணலாம்

 காணாததை காணலாம் 



கடவுளைக் காண்பது சாத்தியமா?

கடவுளை யாரும் கண்டிருக்கிறார்களா?

கடவுள் என்பது யார்?

இறைவனா? தெய்வமா? அல்லது கடவுளா?

கோயிலில் இருப்பது இறைவனா? தெய்வமா அல்லது கடவுளா?

இறைவன் கோயிலில் உள்ள சிலையில் மட்டும் இருந்தால், பிரபஞ்சத்தில் உள்ள  மற்ற  பொருட்களில் இறைவன் இல்லை என்றாகிவிடும். எங்கும் எதிலும் இருப்பவன் இறைவன்.

இறைவனே  இயற்கை என்பதால் இறைவனை  கோயிலில் இருந்து எடுத்து விடுவோம்.

இனி கடவுளுக்கு வருவோம்.

ஒவ்வொரு உயிர்வாழ் உடலிலும் இறைவனின் இணைப்பு இருக்கிறது. அதை உயிர்வாழிகள் உணர்வதில்லை. தனக்குள்ளே பரம்பொருள் உறைகிறான் என்று உணர்ந்து, கடும் முயற்சி செய்து, அறிய முற்படும் பொழுது இறைவன் கடவுளாக வெளிப்படுகிறான்.

அடுத்து தெய்வத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

பூவுலகில் தானும் வாழ்வாங்கு வாழ்ந்து, தன்னை சார்ந்தோர்க்கும் பயனளிப்பவனாக இருந்து, தன்னை ஒரு முன்னோடியாக கொண்டு மக்கள் வாழ  வழிகாட்டியாக வாழ்ந்தவர்கள் தெய்வம் ஆகிறார்கள்.

திருக்குறள் - 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

எனவே, நாம் இன்று தெய்வம் என்று வணங்குபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து சென்றவர்கள் என்று கொள்ளலாம். குறிப்பாக, ஆதி யோகியாகிய சிவன், தமிழ்க்கடவுளான முருகன் மற்றும்  திருமூலர் போன்ற சித்தர்களை இந்த வரிசையில் கொண்டு வரலாம். இவர்கள்  அஷ்டமா சித்திகள் என்னும் எட்டு வகை  ஆற்றலை  கைவரப்பெற்றவர்கள். 

அஷ்டமா  சித்திகள் என்பது எட்டு வகை ஆற்றல்கள்:

1. அணுவை விட சிறிய நிலை எடுப்பது 

2. அண்டத்தை விட பேரண்டமாக விரிந்து நிற்பது 

3. காற்றினும் மென்மையாக இருப்பது 

4. மலையினும் பாரமாய் இருப்பது 

5. எண்ணம் போல் நினைத்தவற்றை அடைவது  

6. உலகப்பொருட்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பது  

7. தன்னுயிரை பிறிதோர் உடலில் மாற்றுவது 

8. தெய்வ நிலையில் நிற்பது 

அதாவது, தெய்வ நிலையில் இருக்கும் இவர்கள் கோயிலில் இருந்து மக்களுக்கு அருள் பாலிப்பவர்களாக இருக்கிறார்கள். கருவறையில் உள்ள கல்லிலும் இவர்களால் உறைந்திருக்க முடியும்.

இந்தக் கோட்பாட்டில்தான் நம் முன்னோர்கள் கல்லிலும், பொன்னிலும்  தெய்வ சிலைகளை வடித்து அதனை கருவறைக்குள் வைத்திருக்கிறார்கள். மனிதன் வடித்த சிலைகளில் எல்லாம் தெய்வங்கள் வாழ்கின்றனர்.

சிவன் கோயில் கருவறை சிலையில்  சிவன் இருப்பதும், முருகன் கோயில் கருவறை சிலையில் முருகன் இருப்பதும், சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பின்னர்  கோயில்களில் சித்தர்கள் இருப்பதும்  இவ்வாரென்று கொள்ளலாம்.

கல்லென்று பார்ப்பவர்களுக்கு கல்லாகவும், தெய்வம் என்று பார்ப்பவர்களுக்கு தெய்வமாகவும் இருக்கிறார்கள்.

திருமூலர் இந்த கருத்தை மிகத் தெளிவாக திருமந்திரத்தில் விளக்குகிறார்.

திருமந்திரம் - 2290

மரத்தை மறைத்தது மாமத யானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே. 

மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது, நம் கண்களுக்கு யானை மட்டுமே தெரிகிறது. இந்த யானை, மரத்தால் செய்யப்பட்டது என்று உணர்ந்து யானையைப் பார்க்கும்போது யானை மரமாக தெரிகிறது. அதுபோலவே, இந்த உலகம், இறைவனை மறைத்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பெரும்  பூதங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுது, இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்கிறோமோ அப்பொழுதே பஞ்ச பூதங்கள் மறைந்து இறைவனுக்குள்  ஐக்கியமாகி விடும்.

இனிமேல், கோயிலில் தெய்வத்தை வணங்கும்போது, முழு விழிப்புணர்வு நிலையில் வணங்கினால் நம் முன் இருப்பது கற்சிலையல்ல, சிலை வடிவில் உள்ள நாம் வணங்கும் தெய்வம். 

அங்கே  மனமுருக பிரார்த்திக்கும்போது, ஒலியற்ற நம்  குரல் தெய்வத்திற்கு கேட்டிடும், தெய்வத்தின் கருணை அளவின்றி பொழிந்திடும்.

*** *** ***



No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...