Friday, October 17, 2025

நட்சத்திரமடி நீ எனக்கு

நட்சத்திரமடி நீ எனக்கு 




நிச்சயம் மறுபடியும் பிறந்திருப்பேன் - எனினும் 
நானாக பிறப்பது நிச்சயமில்லை - குறிப்பாக  
மனிதனாக பிறப்பதும் நிச்சயமில்லை.

செய்யக் கூடாததை செய்தும் 
செய்ய வேண்டியதை செய்யாமலும் 
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் - மீண்டும் 
மனிதனாக பிறப்பது நிச்சயமில்லை.

இயமநியமம் ஈரங்க யோகநிலை 
இயல்பான  வாழ்வாக  பழகிவிட்டால் 
அறமதுவே பிறவிக்  கடமை - மறுபடியும் 
மனிதனாக பிறப்பதற்கது  கடவுச்சீட்டு.


திருமந்திரம் - 113

விண்ணின்‌ றிழிந்து வினைக்கீடாய்‌ மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத்‌  தலைக்காவல்‌ முன்வைத்து 
உண்ணின்‌. றுருக்கியொ ரோப்பிலா ஆனந்தக்‌ 
கண்ணின்று காட்டிக்‌ களிம்பறுத்‌ தானே.


வானத்திலிருந்து இறங்கி வரும் இறைவன், ஒருவன் முற்பிறவியில்  செய்த நன்மை, தீமைக்கேற்ப உடல் கொடுக்கிறான்.

அந்த உடல் மனித உடலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தனது குளிர்ந்த காலை, உடலுக்கு காவலாக தலையில் வைக்கிறான்.   முற்பிறவியின் நினைவுகளையும், மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்னும் களிம்பை  அகற்றும் இறைவன், ஒப்பற்ற ஆனந்தப் பேரொளியாக கண்களின் இடையே திகழ்கிறான்.

இந்தப்பாடலில் மிகவும் கடினமான  மெய்யியல்  கேள்விக்கு பதில் இருக்கிறது.

கேள்வி: 

முதன் முதலில் மனிதன்  பிறக்கும்போது, வினைப்பயன் அற்ற நிலையில் தானே இருந்திருப்பான். நல்வினை, தீவினை  என இருவினைகளுக்குள் செல்ல வேண்டிய அவசியம் எப்படி அமைந்தது?

பதில்: 

முதல் பிறப்பில் தூய உடலில் இருந்தாலும், மண்ணில் பிறந்தவுடன் மும்மலங்கள் என்னும் ஆணவம், கன்மம், மாயைக்குள் வாழ்க்கையை  துவங்குகிறான். வாழ்வில் இன்பம் ஒன்றையே நாட்டமாக கொள்வதால், நல்லவை, கெட்டவை என்று பகுத்தறியாமல் இருவினைகளின் மாய வலையில் சிக்கிக்கொள்கிறான்.

ஒவ்வொரு முறை மனிதனாக பிறப்பெடுக்கும்போதும், உடல் மற்றும் பின்புலம் அவன் முற்பிறப்பின்  முழு வினைப்பயனாலே  அமைகிறது. அதாவது முந்தைய பிறவியின் மும்மலங்கள்  அழிக்கப்பட்டு புதிதாகவே பிறக்கிறான்.

இதைத்தான் திருமந்திரம், 

வினைக்கீடாய் மெய்கொண்டு.. களிம்பு அறுத்தானே..  என்று விளக்குகிறது.

*** *** ***



No comments:

Post a Comment

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள்   நீங்கள் கனவு காண்பவர்களா? கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருக...