Friday, October 2, 2026

நான் யார்?

நான் யார்?

என்னைத்தான் நானறிவேன் 
என்னை இங்கு யாரறிவார்?

பாசமிகு குடும்பமும் உறவும் 
நேசமிகு நட்பும் தோழரும் 
அரசு வங்கி கணக்குகளிலும் 
ஒப்பந்த பத்திரங்களில் அன்றி  
என் பெயரை யாரறிவார்?

எண்ணில் நூறு தேறுமா - நூறும்  
மண்ணில் நிலைத்து வாழுமா?

'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர்களை பார்க்கும்போது நம்மையறியாமல் இறந்தவரின் வயதைப்பார்க்கிறோம். இளையவராயிருந்தால் மனதுக்குள் சிறிய வருத்தம். வயதில் மூத்தவராயிருந்தால், இன்னும் நமக்கு வாழும் காலமிருக்கிறது என்ற மகிழ்ச்சி. மற்றபடி, RIP போடுவதெல்லாம் ஒரு சடங்காகிப்போய்விட்டது.

இறந்தவுடன் பெயர் மாறி பிணம் என்றாகிவிடும். ஒரு வாரம் பத்து நாட்களுக்கு ஆசை ஆசையாக கட்டிய வீடு இழவு வீடாகிவிடும். ஒரு மாதத்திற்குள் எல்லாம் முடிந்து, அவரவர் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

வாழ்ந்ததுக்கான அடையாளங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டு மிச்சமென்று ஒன்றுமிருக்காது.


திருமந்திரம் - 340

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் 
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் 
தோற்பையுள் நின்று தொழிலறச்  செய்தூட்டும் 
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.

உடலென்னும் தோல் பைக்குள் இருந்து இறைவன் இயக்குகிறான். உடலை விட்டு இறைவன் நீங்கியவுடன், காகங்கள் சொந்தம் கொண்டாடினாலென்ன?
யாரும் பழித்து இழிவாக பேசினாலென்ன? பதினாறாம் நாள் பால் ஊற்றினாலென்ன? தெரிந்தவர்கள் உயர்த்தி பேசினாலென்ன?  
எதுவும் உன்னைப்  பாதிக்கப்போவதில்லை.

மிச்சமென்று ஒன்றுமிருக்காது. காலம் எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடும்.

வாழும்வரை அறம் சார்ந்து வாழ்ந்து விடு.

*** *** *** *** ***

வீரா..
031026

No comments:

Post a Comment

நான் யார்?

நான் யார்? என்னைத்தான் நானறிவேன்  என்னை இங்கு யாரறிவார்? பாசமிகு குடும்பமும் உறவும்  நேசமிகு நட்பும் தோழரும்  அரசு வங்கி கணக்குகளிலும்  ஒப்ப...