Friday, October 9, 2020

பாலும், தேனும், அமுதமும்

பாலும், தேனும், அமுதமும் 

பக்கத்தில் பழம் இருக்க 
பாலோடு தேனிருக்க  


மாத்தாடு மாத்தாடு மல்லிகே..

'தேனொடு, பால் தரும் செவ்விளநீர்களை 
ஓரிரு வாழைகள் தாங்கும்' - அது என்ன?  

'தெரியலையா?'

மாத்தாடு மாத்தாடு மல்லிகே..

 குறிஞ்சிப் பாட்டு:

கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் (தமிழ்ப்பண்பு) அறிவித்தற்குப் பாடியது – என்று கூறப்படுகிறது

காதலர் தாமே கூடிப் பின் மணந்துகொள்ளும் தமிழ்நெறியை ஆரிய அரசன் பிரகத்தன் உணராமல் ஏதோ பேசினான்.

அவனுக்குத் தமிழ்நெறி இத்தகையது என்று காட்டுவதற்காகக் கபிலர் இந்தக் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார். குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன், வள்ளி கதையாக பின்னர் அறியப்படுகிறது. 

பண்பு கெடாமல் நிகழ்ந்த தற்செயல் இயல்புப் புணர்ச்சியை இப்பாடலில் காணலாம்.

நாணும்  உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், சுவைஇ   
ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி,
பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை,
முழு முதற் தீம் கனி உதிர்ந்தென.....   

                                                                            - குறிஞ்சிப்பாட்டு 

நாணமும், அச்சமும் கொண்டு தோழி நான் பிரிந்து விட்டேன், அவர்களை தனித்திருக்க விட்டு விட்டு.

'ஒய்' என்று தலைவி  நெஞ்சை தலைவன்  தன் நெஞ்சில் அணைத்து தழுவிக்கொண்டான். பிரிய முயன்ற அவளை விடவில்லை அவன். மயிலாடும் பாறையில் இருந்த பழுத்த மிளகின் உள்ளிருந்த சுனையில்  பலாப்பழத்தேன் ஒழுகியது. அதில் முழு மாம்பழம் விழுந்தது.

'இன்னும்  விளங்கலையா?'


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
.
                                                                                                        - திருக்குறள் 1121

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

இவ்வின்பத்தினூடே  இறைவனைக் காணும் வழியை  சொல்லுகிறார் திருமூலர்.

பாலொடு தேனும் பழத்துள் இரதமும் 
வாலிய பேரமுது ஆகும் மதுரமும் 
போலும் துரியம் பொடிபட உள்புகச் 
சீல மயிர்க்கால் தொறும் தேக்கிடுமாமே.

                                                                                                                                    - திருமந்திரம் 2831

துரியம்  என்பது பேரின்பம்; மோக்ஷம் அடைகின்ற நிலை. இதனை அடைகின்ற வழியாக இல்லற வாழ்வும் துணை நிற்கிறது என்று தெளிவாக்குகிறார்.

'இப்பவும் புரியலன்னா விட்டுருங்க, எப்பவுமே புரியாது.'









Wednesday, October 7, 2020

ஆஸ்திரேலியா பட்ஜெட் 2020

ஆஸ்திரேலியா பட்ஜெட்  2020 

அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா - அவ 
ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா


 

'அய்ய.. பண்டிகை.. பண்டிகை..' - சுண்டு விரல் குதித்தது.

'பண்டிகைக்கு என்ன பண்றது' - மோதிர விரல் கேட்டது.

'இனிப்பு செய்யணும்' - நடு விரல் சொன்னது.

'பணத்துக்கு எங்கே போறது? - ஆள்காட்டி விரல் சோகமாய் கேட்டது.

'நானிருக்கிறேன், எஜமானப்பன்' - கட்டை விரல் தம்ஸப் காட்டியது.

இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவை சரி கட்டும், பற்றாக்குறை பட்ஜெட் 2020 இது. ஆனால், பொருளாதாரத்தை நிமிர்த்தும் எல்லா அம்சங்களும் அதில் அடக்கம்.

JOBKEEPER, JOBSEEKER  என்று மக்களிடம் பணப்புழக்கம் இருப்பதை உறுதி செய்த அதே அரசு, பட்ஜெட்டில் மீண்டும் சலுகைகள் வழங்கி உள்ளது:

வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டி,

1. தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழிலாளர்கள் எடுக்க ஊக்கத்தொகை.  

2. வருமான வரி கணிசமான அளவில் குறைப்பு, அதுவும் நடப்பாண்டில் இருந்தே.

இத்தோடு நிற்காமல், 

நிறுவனம் கடந்த ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்குகிறதா? அதற்கு முந்தைய ஆண்டுகளில் வரி செலுத்தி இருந்தால், நஷ்டத்தை கணக்கில் கொண்டு, முன்னர் கட்டிய வட்டியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்.

நான் நினைத்துக்கூட பார்க்காத கோணம் இது, பல வருடங்களுக்கு முன்னர் கட்டிய வரியை திரும்ப பெறுவது, கடலில் கரைத்த உப்பு, மீண்டும் அதே உப்பாக, மக்கள் கைகளில்.

ஆஸ்திரேலியா - எஜமானப்பன்!

நம்மூர்ல என்னடான்னா, மாநிலங்களுக்கு தர வேண்டிய GST நிலுவைத்தொகையே, மத்திய அரசிடம் இழுவைத்தொகையாக உள்ளது. 

இருபது லட்சம் கோடி அறிவிப்பு, பொருளாதாரத்தை நிமிர்த்த. எங்கே போச்சுன்னு, யாருக்கும் தெரியாது, நிதிமந்திரி உட்பட.

அரசாட்சி செய்பவர்கள் மக்களை காப்பது நல்லது. மக்களும் அரசன் வழி நிற்பர். அத்தன்மையில்லாமல், தானே அனைத்துலக  செல்வங்களையும் பிறரிடம் இருந்து பறித்து, தன்னகப்படுத்த போராடுவது, இலக்கில்லாமல் பாயும் புலியின் செயலைப்  போன்றதே.

வேந்தன் உலகை மிகநன்று காப்பது 
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர் 
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாம்கொள்ளப் 
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 

                                                                                          - திருமந்திரம் 245


Sunday, October 4, 2020

மே 2021

மே 2021


வாழ்ந்தவர் கோடி 
மறைந்தவர் கோடி 
மக்களின் மனதில் 
நிற்பவர் யார் 




மே 2021

[நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் நடக்க வாய்ப்புள்ள ஒரு கற்பனை] 

' ஜெ. ஜெயலலிதா என்னும்  நான்.. '  - கேட்ட காதுகளில், இன்று 
'நிர்மலா சீதாராம் என்னும்  நான்..'

'இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம், இந்தி பேசாத இம்மாநிலத்தை. மற்ற மாநிலங்களுக்கு இணையாக மாற்ற அயராது பாடுபடுவேன். அதே மாதிரி, தமிழ்நாடு மட்டும் நிதி நிலையில் தனித்துவம் என்பது கூட்டாட்சி தத்துவத்தை அவமதிக்கும் வண்ணம் இருப்பதால், நிதிப்பரவல் முறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வேன்' - முதல்வரின் முதல் அறிக்கையில் இருந்த செய்தி ஊடகங்களின் விவாத மேடைக்கு கருவாக இருந்தது.

234 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட,  N O T A-வையும், வெல்ல முடியாத கட்சி எப்படி ஆட்சிக்கு வரலாம் என்று பேசுவது கூட, தேசத்துரோகமாக சித்தரிக்கப்பட்டது.

'வணக்கம். ஜெகம் புகழும் எங்கள் கட்சி, அயோத்தியா ராமரின் கட்சி,  ஆட்சி அமைய பாடுபட்ட அனைத்து தமிழ் நாட்டு மக்களுக்கும் சேவை செய்வது என் கடமை' - பிரதமர் தமிழக மக்களுக்கு உரை ஆற்றியது தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக  வந்தது.

தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வரவேண்டிய துர்பாக்கிய நிலையில் அந்த கட்சி இல்லை.

சதுரங்க ஆட்டம், ஜெயலலிதா மறைந்த நாளிலேயே ஆரம்பித்து விட்டது.

2021 தேர்தலுக்காக காய்கள் சரியாக நகர்த்தப்பட்டது. கட்சி பாரபட்சமில்லாமல், வேட்பாளர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டார்கள். பிரதான எதிர் கட்சிகள், தலா நூறு இடங்களை பிடிக்க, மீதமுள்ளவை கூட்டணிக்கட்சிகளுக்கும், சுயேட்சைகளுக்கும் சென்றது.

அனைத்து கட்சிகளிலிருந்தும் விலை போன பதினைந்து சட்ட மன்ற உறுப்பினர்கள்,  நான்கு சுயேட்சைகள், ஆக பத்தொன்பது!

யாருக்கும் பெரும்பான்மை இல்லை.

ஆட்சி அமைக்க உரிமை கோரிய, மத்தியில் ஆளும் கட்சியால் பதவி வழங்கப்பட்ட ஆளுநர், அவர்களையே ஆட்சி அமைக்க அழைப்பினை விடுத்தார்.

'ஜெயிச்சு கப்பு வாங்குறதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது ஆத்தா'

துணை முதல்வர் பதவிக்காக, எடப்பாடி டெல்லி செல்ல, பன்னீர் மெரினா கடற்கரை சென்றார். வழக்கம் போல, தன்னை பதவி ஏற்பு விழாவில், இறுதி வரிசையில் அமர வைத்து, தமிழக மக்களை,  அவமரியாதை செய்து விட்டார்கள் என ஊடகத்திடம் உளறிக்கொண்டிருந்தார், பெருங்காய டப்பா தலைவர்.  

பண மதிப்பிழப்பு 
ஜி.எஸ்.டி 
கொரோனா கட்டுப்பாடு, தளர்வு  

'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' - துகிலுரிக்க ஆணையிட்ட துரியோதனின் அவையில் பீஷ்மரை நோக்கி தீக்கணை தொடுத்தாள் பாஞ்சாலி.

"தீங்கு தடுக்கும் திறம் இல்லேன்!" - பீஷ்மர் தலை குனிகிறார், பாஞ்சாலியின் வாதம் கேட்டு. 

உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமையால் தலை குனிந்து நிற்கிறது பாரதம்.

அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விடாதீர்கள். ஆதரித்து பேசும் அதிகார வர்கத்தையும், அரசியல்வாதிகளையும் அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள். 

இதனை அரங்கேற்றிய கொடூரர்களை, பீமன் துரியோதனனை தொடையில் அடித்து கொன்றதுக்கு இணையாக தண்டியுங்கள்.

யோகி ஆதித்யநாத்கூட, தமிழக முதல்வராக வரமுடியும், நினைவில் கொள்ளுங்கள்.

எனக்கு எப்பொழுதும் மனதில்  எழும் கேள்வி. குற்ற பின்புலம், சிறை தண்டனை என உள்ளவர்கள் அரசு பணிக்கோ, மற்ற எந்த பணிகளிலோ  சேர முடிவதில்லை. ஆனால் அரசியலில் சேர்ந்தால் அவனே, முதல்வராகவும் ஏன் பிரதமராகவும் வர முடிகிறதே!
என்ன வகையான அரசியலமைப்பு சட்டம் இது. படிப்பும், வயதும் கூட இது போலத்தான். மக்களை ஆள அடி முட்டாள் போதும் என்ற அரசியலமைப்பு சட்டம்.

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் 
கல்லா  அரசனின் காலன் மிகநல்லன் 
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான் 
நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
                                                                   - திருமந்திரம் 238 

படிப்பறிவற்ற மன்னன், எமன்,  தர்ம நிலை அறியாது 'கொன்று வா' என்பான். அவனை விட நல்லவன் எமன், நல்லவரைக்கண்டால் துன்பம் தரமாட்டான்.

பின் குறிப்பு:
இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுரங்கப்பாதையில் பயணம் செய்த பிரதமர் மிகவும் ஆர்வத்துடன், தீவிரமாக  கை அசைத்தது, யாருமற்ற  சுரங்கத்தில். யாருக்கு டீ ஆத்தினார்?














 

Thursday, October 1, 2020

சூரியன்

சூரியன் 

காலையில் மலரும் தாமரைப்பூ 
அந்திக்கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ 
இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ  

 


 
கிழக்கில் உதித்தால்  காலை 
மேற்கில் மறைந்தால்  மாலை 
மறைந்து நின்றால்  இரவு - எனில்                                         சூரியனுக்கில்லை   காலம்.

காலத்தை கடந்தவன், ஒளி வடிவான  இறைவன். 

சுடர்மிக்க ஒளி வீசித்திகழும் அந்தப்பகலவனே,  உடலில் உள்ள மாயை என்னும் பேரிருளை ஞானத்தால் அகற்றும்  பேரருளாளனாக விளங்குகின்றான்.

சுடர்உற  ஓங்கிய ஒள்ஒளி ஆங்கே 
படர்உறு  காட்சிப் பகலவன் ஈசன் 
அடர்உறு மாயையின் ஆர் இருள் வீசில் 
உடல்உறு ஞானத்து உறவியன் ஆமே.

                                                                         - திருமந்திரம் 2694




 

 


Saturday, September 26, 2020

ஆயிரத்தியொரு நிலா

ஆயிரத்தியொரு  நிலா 

என்னுயிரிலே உன்னை எழுத 
பொன்மேனி தாராயோ



பொன் விளையும் பூமி
உன்மேனி விதைத்திடவே 
தந்ததின்று மேனி.. 

நீ அழைத்த  ஆயிரம் நிலவுகள் 
உன்னை இணைத்துக்கொண்டது  
ஆயிரத்தியொரு நிலவாய்..

'ஆயிரம் நிலவே வா' என்னுமுந்தன்  முதல் பாடல், புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தேந்தமிழ்ப்பாடலை
திருவேங்கடத்தான் நீ பாட  
மூவேந்தர் வழிவந்த மன்னவனும் 
காவிரி தந்த பேரெழிலும் ஆட 
திராவிடமே  மலர்ந்ததங்கே!   

பாடும் நிலா என மக்களால் அன்புடன் அறியப்பட்ட  நீங்கள் இன்று தெய்வமானீர்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

                                                                            - திருக்குறள் 50


நிறை வாழ்வு உங்களுடையது. குறையொன்றுமில்லை தெய்வமாய் மிளிர்ந்து நிற்க!

 




Friday, September 18, 2020

மின்னலிழை

மின்னலிழை 

மின்சாரம் 
பாய்ந்ததுபோல் 
மேனியெல்லாம் 
நடுங்குவதேன் 





ஒரு பத்து மாதங்கள் பின்னோக்கி செல்லுங்கள், உங்கள் பிறந்த நாளிலிருந்து.

அப்பொழுது எங்கிருந்தீர்கள்?

பெற்றவர்கள் பெற்றவர்களே, நம்மைப் படைத்தவன் இறைவன்.

நெல் முளைத்தெழ, உமியுடன் இருக்க வேண்டும். உமியைப்போன்றவர்களே நம் பெற்றோர்கள். 

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

                                                                                - அவ்வையார் மூதுரை 11

பேராற்றல் கொண்ட இறைவனுக்கும், அவன் படைப்பிற்கு உறுதுணையாய் நின்றவர்கள் பெற்றோர்கள். நெல்லுக்குள் அரிசியாய், நம் உயிரினை, உடலுடன்  படைத்தவன் இறைவன்.

திருமூலரும் வித்தினில் இருந்து முளை விடும் தன்மையை சொல்லுகையில், முளை விட்டபின் முளையும் வித்தும் வேறு வேறல்ல, இரண்டும் ஒன்றே என்கிறார். 

வித்தினில் அன்றிமுளை  இல்லை அம்முளை 
வித்தினில் அன்றி வெளிப்பாடு மாறில்லை 
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல 
அத்தன்மை யாகும் அரனெறி காணுமே.

                                                                                         - திருமந்திரம் 1932

இவ்வாறாக உடலினைப் படைத்த இறைவன், நமக்குள் அடுத்த தலைமுறைக்கான வித்தினைப் படைக்கிறார்.

அன்னம் பிராணன் என்றுயார்க்கும் இருவிந்து 
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் 
சொன்னமாம் உருத்தோன்றும் எண் சித்தியாம் 
அன்னவர் எல்லாம் அழிவற  நின்றதே.

                                                                                          - திருமந்திரம் 1966

நம் உடலில் உள்ள வித்தினில் ஒன்று அன்னம், மற்றொன்று பிராணன். அதாவது, நெல்லாகிய வித்தில் உள்ள உமியும், அரிசியும் போன்றதே இது.

உடலில் லட்சக்கணக்காக உருவாகும் இவ்வித்து, எப்பொழுதும் எதிர்ப்பாலினத்தை நோக்கியே கவரப்பட்டிருக்கும். உடலில் இவ்வித்தை சேர்க்க வல்லார்க்கு, உடல் தங்கத்தைப்போலிருக்கும்; அஷ்டமா சித்திகளும் கைகூடும்.

பெற்றோர்கள் கூடுகையில், மின்னலிழைப்போல் உடலில் இன்ப அதிர்வுடன், உடல் முழுதும் உள்ள உயிர் வித்துக்கள் பாய்ந்து செல்லும். அப்படி வித்துக்களை வீணாக்காமல், அஷ்டாங்க யோகம் மூலம், சந்திர மண்டலம் என அறியப்படும் சுழுமுனைவரை ஏற்றம் தரவல்லோர்க்கு, எந்நாளும்  மின்னலைப்போன்ற ஒளி இன்பம் நம் உடலுக்குள் சுடர் விட்டிருக்கும்.

விளங்கொளி மின்ஒளி ஆகிக் காந்து 
துளங்கொளி ஈசனைச் சொல்லும் எப்போதும் 
உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற 
வளங்கொளி எங்கும் மருவி நின்றானே.

                                                                                           - திருமந்திரம் 2687 

பின்குறிப்பு:

இதனை எழுத எந்த இறையருள் எனக்கு ஊக்கம் கொடுத்ததோ, அதே அருள்தான் உங்களையும்  படிக்க வைத்திருக்கிறது. 

ஓம் நமக்ஷிவய  


Saturday, September 5, 2020

தவறும் தப்பும்

தவறும் தப்பும் 

தவறு என்பது தவறிச் செய்வது 
தப்பு என்பது தெரிந்து செய்வது 
தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்  
தப்பு செய்தவன் வருந்தியாகணும் 



'மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்ததை உண்டு, மண்ணுக்குள் மறையும் மனிதன், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்கும் இறைவனை, உண்டதின் கழிவை  சுமக்கும் தன்னையொத்த  மனிதனாக உருவகப்படுத்தியது தவறா? இல்லை தப்பா?'

தவறாய் இருந்தால் திருத்த வேண்டும். தப்பாய் இருப்பதால் வருந்தும் மக்களை மேலும் குழப்பாமல் நல்வழி காட்ட வேண்டும்.

மணவாழ்வில் இன்பம் பெறவும், நல்ல  குழந்தைகளை பெற்றெடுக்கவும்,  உடலில் சேர்ந்துள்ள உணவின்  கழிவுகளைக்  அகற்றி,    கடைபிடிக்க வேண்டிய    வழிதனை காட்டுகிறார் திருமூலர்.

கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல் 
நலத்தக வேண்டின்  அந்நாரி உதரக் 
கலத்தின் மலத்தைக் தண் சீதத்தைப் பித்தை 
விலக்குவன செய்து மேல் அணைவீரே.

                                                                           - திருமந்திரம் 1955  

காதலில் இன்பத்தைப்பெற, கூடுமுன்னர் உடலில் உண்ட உணவின் கழிவுகள் நீங்கப்பெறுதல் வேண்டும்.

மாதா உதரம் மலமிகில் மந்தனாம் 
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் 
 மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை 
மாதா உதரம் வந்த குழவிக்கே.

                                                                                               - திருமந்திரம் 481

மந்த புத்தியுடைய, ஊமையான, கண்ணற்ற மக்களை யார்தான் பெற விரும்புவார்கள். மேலும் தொடரும் 482, 483, 484 பாடல்களில் நன்மக்களை பெற்றெடுக்கும் உபாயங்களை தெரிவிக்கிறார் திருமூலர்.


மலக்குடம்  மீதினிலே மஞ்சள் பூச்சென்றும் 
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும் 
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும் 
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.

                                                                                        - பாம்பாட்டி சித்தர் பாடல் 59

இந்த மனித உடலானது மேற்கூறிய  தன்மைகளை பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாயினும், இறைவனை மனித உருவில் படைத்து, தானுண்ணும் உணவினையும் படைப்பது சரியா, தவறா, தப்பா?



கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...