மே 2021
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில்
நிற்பவர் யார்
மே 2021
[நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் நடக்க வாய்ப்புள்ள ஒரு கற்பனை]
' ஜெ. ஜெயலலிதா என்னும் நான்.. ' - கேட்ட காதுகளில், இன்று
'நிர்மலா சீதாராம் என்னும் நான்..'
'இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம், இந்தி பேசாத இம்மாநிலத்தை. மற்ற மாநிலங்களுக்கு இணையாக மாற்ற அயராது பாடுபடுவேன். அதே மாதிரி, தமிழ்நாடு மட்டும் நிதி நிலையில் தனித்துவம் என்பது கூட்டாட்சி தத்துவத்தை அவமதிக்கும் வண்ணம் இருப்பதால், நிதிப்பரவல் முறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வேன்' - முதல்வரின் முதல் அறிக்கையில் இருந்த செய்தி ஊடகங்களின் விவாத மேடைக்கு கருவாக இருந்தது.
234 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட, N O T A-வையும், வெல்ல முடியாத கட்சி எப்படி ஆட்சிக்கு வரலாம் என்று பேசுவது கூட, தேசத்துரோகமாக சித்தரிக்கப்பட்டது.
'வணக்கம். ஜெகம் புகழும் எங்கள் கட்சி, அயோத்தியா ராமரின் கட்சி, ஆட்சி அமைய பாடுபட்ட அனைத்து தமிழ் நாட்டு மக்களுக்கும் சேவை செய்வது என் கடமை' - பிரதமர் தமிழக மக்களுக்கு உரை ஆற்றியது தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வந்தது.
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வரவேண்டிய துர்பாக்கிய நிலையில் அந்த கட்சி இல்லை.
சதுரங்க ஆட்டம், ஜெயலலிதா மறைந்த நாளிலேயே ஆரம்பித்து விட்டது.
2021 தேர்தலுக்காக காய்கள் சரியாக நகர்த்தப்பட்டது. கட்சி பாரபட்சமில்லாமல், வேட்பாளர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டார்கள். பிரதான எதிர் கட்சிகள், தலா நூறு இடங்களை பிடிக்க, மீதமுள்ளவை கூட்டணிக்கட்சிகளுக்கும், சுயேட்சைகளுக்கும் சென்றது.
அனைத்து கட்சிகளிலிருந்தும் விலை போன பதினைந்து சட்ட மன்ற உறுப்பினர்கள், நான்கு சுயேட்சைகள், ஆக பத்தொன்பது!
யாருக்கும் பெரும்பான்மை இல்லை.
ஆட்சி அமைக்க உரிமை கோரிய, மத்தியில் ஆளும் கட்சியால் பதவி வழங்கப்பட்ட ஆளுநர், அவர்களையே ஆட்சி அமைக்க அழைப்பினை விடுத்தார்.
'ஜெயிச்சு கப்பு வாங்குறதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது ஆத்தா'
துணை முதல்வர் பதவிக்காக, எடப்பாடி டெல்லி செல்ல, பன்னீர் மெரினா கடற்கரை சென்றார். வழக்கம் போல, தன்னை பதவி ஏற்பு விழாவில், இறுதி வரிசையில் அமர வைத்து, தமிழக மக்களை, அவமரியாதை செய்து விட்டார்கள் என ஊடகத்திடம் உளறிக்கொண்டிருந்தார், பெருங்காய டப்பா தலைவர்.
பண மதிப்பிழப்பு
ஜி.எஸ்.டி
கொரோனா கட்டுப்பாடு, தளர்வு
'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' - துகிலுரிக்க ஆணையிட்ட துரியோதனின் அவையில் பீஷ்மரை நோக்கி தீக்கணை தொடுத்தாள் பாஞ்சாலி.
"தீங்கு தடுக்கும் திறம் இல்லேன்!" - பீஷ்மர் தலை குனிகிறார், பாஞ்சாலியின் வாதம் கேட்டு.
உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமையால் தலை குனிந்து நிற்கிறது பாரதம்.
அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விடாதீர்கள். ஆதரித்து பேசும் அதிகார வர்கத்தையும், அரசியல்வாதிகளையும் அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள்.
இதனை அரங்கேற்றிய கொடூரர்களை, பீமன் துரியோதனனை தொடையில் அடித்து கொன்றதுக்கு இணையாக தண்டியுங்கள்.
யோகி ஆதித்யநாத்கூட, தமிழக முதல்வராக வரமுடியும், நினைவில் கொள்ளுங்கள்.
எனக்கு எப்பொழுதும் மனதில் எழும் கேள்வி. குற்ற பின்புலம், சிறை தண்டனை என உள்ளவர்கள் அரசு பணிக்கோ, மற்ற எந்த பணிகளிலோ சேர முடிவதில்லை. ஆனால் அரசியலில் சேர்ந்தால் அவனே, முதல்வராகவும் ஏன் பிரதமராகவும் வர முடிகிறதே!
என்ன வகையான அரசியலமைப்பு சட்டம் இது. படிப்பும், வயதும் கூட இது போலத்தான். மக்களை ஆள அடி முட்டாள் போதும் என்ற அரசியலமைப்பு சட்டம்.
கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
- திருமந்திரம் 238
படிப்பறிவற்ற மன்னன், எமன், தர்ம நிலை அறியாது 'கொன்று வா' என்பான். அவனை விட நல்லவன் எமன், நல்லவரைக்கண்டால் துன்பம் தரமாட்டான்.
பின் குறிப்பு:
இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுரங்கப்பாதையில் பயணம் செய்த பிரதமர் மிகவும் ஆர்வத்துடன், தீவிரமாக கை அசைத்தது, யாருமற்ற சுரங்கத்தில். யாருக்கு டீ ஆத்தினார்?
No comments:
Post a Comment