நீண்ட நாள் வாழ ஆசையா?
நீரினில் சோற்றினில் உடலை வளர்க்கிறோம்
பாரினில் மேனியே மெய் என்றிருக்கிறோம்
காற்றினில் உயிரினில் கடவுள் இருக்கிறான்
காற்றினில் உயிரினைக் கட்டி வைக்கிறான்.
கண்ணுக்குத் தெரிவதில்லை காலமும் காற்றும்
கண்களும் கண்டதில்லை கடவுளையும் உயிரையும்
காற்றைக் கொண்டு உயிரைக் கட்டினால்
தோற்றிடும் காலமும் உடலும் வாழுமே.
நாம் கண்களால் பார்க்க முடியாத முதல் பொருள் கடவுள். பின்னர்தான் உயிரும், காற்றும். காலம் என்று ஒன்று இருப்பதாக உணர்வு கூட இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நேற்றைய வருத்தங்களும், நாளைய கவலைகளும் சூழ்ந்து இன்றைய இன்பங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நிகழ் காலம் பற்றிய உணர்வே இருப்பதில்லை.
உடலுக்குள் உயிரை வைத்த இறைவன், அதை கட்டி வைக்க காற்றைக் கொடுத்தான். எந்த அளவு காற்று உயிருடன் பிணைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு உயிர் உடலுடன் ஒட்டி இருக்கும். அதாவது, காலம் தன்னுடைய அளவை நீட்டித்து உலகில் நீண்ட நாட்கள் உடலில் உயிர் வாழ உறுதி செய்யும்.
திருமந்திரம் - 592
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டில்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
உடலில் கலந்த உயிர், வாழும் காலத்தை அறிய வேண்டுமானால்
காற்றும் உயிரும் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது என்று தெரிய வேண்டும். காற்றைக்கொண்டு உயிரை நெருக்கமாக கட்டி விட்டால், உடலில் உயிர் நீண்ட காலம் இருக்கும்.
காற்றினால் உயிரைக் கட்டுவது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தருகிறார் திருமூலர். அஷ்டாங்க யோகம் பற்றி கூறுகையில், இயமம், நியமம், ஆசனம் பற்றி எடுத்துரைத்து, நான்காவதாக பிராணாயாமம் பற்றி விவரிக்கிறார். அதன் செயல் முறைகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.
முறையாக பிராணாயாமம் செய்வதே, பிராணவாயுவைக் கொண்டு உயிரைக் கட்டி வைக்கும் வழியாகும்.
*** *** *** *** ***
வீரா.. 180926
No comments:
Post a Comment