Wednesday, September 16, 2026

போதுமென்னும் மனம்

போதுமென்னும் மனம் 

இறைவன் கொடுத்த பாத்திரமொன்று 
கைகளில் இருக்கிறது 
இரவும் பகலும் நிரந்தரமாக 
நம்முடன் வருகிறது - அது  
நம்முடன் வருகிறது..

எவ்வளவு உழைத்தாலும் 
        எப்படித்தான் சேர்த்தாலும் 
நிறைவதில்லை 
        பாத்திரம் நிறைவதில்லை..
எள்ளளவு மனம் போதும் என்றால் 
        மனம் போதும் என்றால் 
நிறைந்துவிடும் 
        பாத்திரம் நிறைந்துவிடும்..

கடவுள் நமக்கு கொடுக்கும் பாத்திரம் தற்செயலானது அல்ல. எவர் மீதும் விருப்போ, வெறுப்போ கொள்ளும் நிலையில் இறைவன்  இல்லை. ஒருவருடைய மண்ணில் வாழ்வென்பது , ஓர் ஆணும் பெண்ணும் கலந்து இன்புறும் நேரத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அங்கே, ஓர் உயிரை விதைத்து வைப்பதோடல்லாமல், அவ்வுயிருடனே இறுதி வரை பயணிப்பவனும் இறைவனே!

திருமந்திரம்-453

இன்புறு காலத் திருவர்முன் பூறிய 
துன்புறு பாசத் துயர்மனை வானுளன் 
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் 
அன்புறு  காலத்து  அமைத்தொழிந் தானே.

உயர்ந்த வானத்தில் உள்ள இறைவன், ஓர் உயிரை படைக்கும்போது அவனுடைய முந்தைய பிறவிகளின் வினைப்பயனாக, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் அவன் பெற்ற  இன்ப, துன்ப நிலையும் கணக்கில் கொள்கிறான்.  அவன் இந்த மண்ணின்  பண்புகளுக்கேற்ப வாழும் காலமும், அதற்கேற்ற உலக வாழ்வும் அமைத்து விடுகிறான். இதை, ஓர் ஆணும், பெண்ணும் அன்புடன் கலந்து இன்புற்றிருக்கும் நேரத்தில் செய்து முடிக்கிறான்.


*** *** *** *** ***


வீரா..
160926



No comments:

Post a Comment

நீண்ட நாள் வாழ ஆசையா?

நீண்ட நாள் வாழ ஆசையா? நீரினில் சோற்றினில்  உடலை வளர்க்கிறோம்  பாரினில் மேனியே மெய்  என்றிருக்கிறோம்  காற்றினில் உயிரினில் கடவுள் இருக்கிறான்...