Tuesday, September 15, 2026

ஒளி உடல்

ஒளி உடல் 


நான் உன்னைப் பார்க்கிறேன் 
            பார்ப்பது நானல்ல..
நீ சொல்வதைக் கேட்கிறேன் 
            கேட்பது நானல்ல..
புதிரல்ல நான் சொல்வது 
            பார்த்ததும் கேட்டதும் என்னிழலே..
புதியதல்ல நான் சொல்வதும் 
            என்றோ சொன்னது திருமந்திரம்..

'அனுபவம்தான் வாழ்க்கையென்றால் நீ யார் என்று கேட்ட மனிதனுக்கு அந்த அனுபவமே நான் என்றான் இறைவன்' - கவியரசர் கண்ணதாசனின் வார்த்தைகள் இவை.

அனுபவம் என்பது புலன்களின் செயல்களால் கிடைப்பது. ஆனால், அந்த ஐம்புலன்களின் அதிகாரியாக செயல்படுவது மனம். மனத்தின் கட்டளைகளால் பெறுகின்ற இன்பமும், துன்பமும் நான்தானே அனுபவிக்கிறேன் என்றால் அது உண்மையல்ல. என்னுடைய உடல் ஒரு கருவி மட்டுமே. உடலை சார்ந்து இன்னொரு உடல் இருக்கிறது. அதுவே, ஒளி உடல். அந்த ஒளி உடலே அனைத்தையும் அனுபவித்து, கர்ம வினைகளாக தன்னுள் கொண்டிருக்கிறது. 

திருமந்திரம் - 2123 

அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால் 
சத்த பரிச ரூப ரசகந்தம் 
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.

இறைவன் நமக்கு  கொடுத்த உடல் பரு உடல், ஒளி உடல்  என்று இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. அதில், சுத்தமான உடல் என்பது ஒளி உடல் ஆகும். ஒளி உடல் எட்டு வகையான செயல்களை ஈர்க்கும் தன்மை கொண்டது.

புலன்கள் வழங்கும் உணர்வுகள்:
சத்த     - ஒலி 
பரிச      - ஊறு 
ரூப        - பார்வை 
ரச          - சுவை 
கந்தம்  - மணம்

மனம் அறியும் அனுபவங்கள்:
புத்தி                          - அனுபவ அறிவு 
மான் (மனம்)            - செயல் நிலை 
ஆங்காரம்                 - அறிவின் வெளிப்பாடு   

உடலின் இரு கூறுகள்:
பரு  - ஸ்தூல உடல் 
புரியட்ட காயம் - ஒளி உடல் 
[புரியாக திரிக்கப்பட்ட நூல்போல், மேற்சொன்ன எட்டு வகையான தன்மைகளும் ஒருங்கிணைந்து இருப்பது  சூக்கும உடல் என்னும் ஒளி உடல்]

இப்பொழுது தெரிகிறதா, ஒருவரைப் பார்த்தவுடன் ஈர்ப்போ, வெறுப்போ ஏன் வருகிறதென்று.  கர்ம வினைகளால் செயல்படும் நம் ஒளி உடல், அடுத்தவர்  சேர்த்து வைத்திருக்கின்ற கர்ம வினைகளுக்கேற்ப அவரது ஒளி உடலைக்காணும்போது  விருப்பும், வெறுப்பும் கொள்கிறது.

*** *** *** *** ***


வீரா..
140926




No comments:

Post a Comment

ஒளி உடல்

ஒளி உடல்  நான் உன்னைப் பார்க்கிறேன்              பார்ப்பது நானல்ல.. நீ சொல்வதைக் கேட்கிறேன்              கேட்பது நானல்ல.. புதிரல்ல நான் சொல்...