என்றென்றும் உன்னை மறந்து வாழ்ந்திருக்க மாட்டேன் - அகக்கனல். இனி என்றும் நீயில்லாமல் நானிருக்க மாட்டேன் - புறக்கனல்.
நாம் உண்ணும் உணவை, ஏழு வகை தாது சத்துக்களாக மாற்றும் வேலையை அகக்கனல் செய்கிறது. சத்துக்களை எரித்து, ஆற்றலாக மாற்ற புறக்கனல் துணை நிற்கிறது.
நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இங்கே இருக்கிறது. அகத்தையும், புறத்தையும் இணைக்கும் சங்கிலித்தொடர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
விழித்திருக்கும் நேரமும், உறங்கும் நேரமும் அல்லது உயிருள்ள ஒவ்வொரு கணமும் அகக்கனலும், புறக்கனலும் எவ்வாறு நம் உடலுடன் தொடர் இணைப்பில் இருக்கிறது?
இணைக்கும் சக்தியை திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்:
அண்ட சராசரங்களும், எல்லையற்ற பேரண்டப் பெருவெளியும் உருவாக வித்துவாக இருக்கும் விந்து, புறக்கனலாக திகழ்கிறது. அதுவே, ஐம்பூதங்களின் காரிய மாயையில் சிக்கியுள்ள உடலில் அகக்கனலாக உருவெடுத்து நிற்கிறது.
வித்து ஒன்றுதான். சங்கிலித்தொடராக இருக்கும் கனலின் தன்மையே மனித உடலின் செயல் திறனாக இருக்கிறது. இந்த வித்தின் தன்மையையும் கீழ்க்கண்டவாறு திருமூலர் விளக்குகிறார்:
தூய வெண்மை நிறத்தில் ஒளிரும் தன்மையையும், தன்னுள்ளே சீரான ஒலியையும் கொண்டுள்ள விந்து, உடலில் எங்கும் நிறைந்துள்ளதுபோல், புறத்திலும் பரவி நிற்கிறது. இங்கேதான், சக்தியும் சிவமும் உறைந்துள்ளதை மகிழ்வுடன் உணர்ந்து வாழ்பவர்களுக்கு, வாழ்நாள் கூடும், வீடுப்பேறடையவும் கூடும்.
புறம்அகம் எங்கும் புகுந்தொளிர் விந்து நிறம்அது வெண்மை நிகழ்நாதம் செம்மை உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் திறனொடு வீடளிக்கும் செயல் கொண்டே.
- திருமந்திரம் 1929
அகம், புறம் இணைத்து நம் உடலை பாதுகாக்கும் முறையை அறிந்து, போற்றி, அதன் வழி நடக்க திருமந்திரம் நல்ல வழிதனை காட்டி உள்ளது.
அடிவயிற்றில் உனக்குள் கனன்று கொண்டிருப்பது அகத்தீ; பிரபஞ்சத்தில் இருந்து உனக்கு வந்து கொண்டிருப்பது புறத்தீ [இறைக்கனல்]. இறைக்கனல் வேறு, சூரியக்கனல் வேறு.
அகத்தீ அளவு மாறும் தன்மை கொண்டது. புறத்தீ அளவு மாறாதது, பிறவி முழுதும் தொடர்ந்து ஒரே சீராக பிரபஞ்சம் வழங்கிக்கொண்டிருப்பது.
நம் உடலின் ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும், இக்கனல்களின் சந்திப்பு இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கிறது. இச்சந்திப்பில் கிடைக்கும் ஆற்றலினால் தான், உடலின் அனைத்து இயக்கங்களும் நடந்து கொண்டிருக்கிறது. உடலின் இச்சை செயல்கள், அனிச்சை செயல்கள், சோர்வு, தூக்கம், விழிப்பு என்று அனைத்திற்கும் மூல காரணம் இக்கனல்களின் சந்திப்பே. எந்த கணத்தில் இந்த சந்திப்பு சங்கிலி அறுபடுகிறதோ, அந்த கணத்தில் உடல் உயிரற்றதாகி விடுகிறது.
குழந்தையாக இருக்கும்போது கிடைக்கும் அதே அளவு புறக்கனல், உடல் உயிரை விடும் வரை கிடைத்துக்கொண்டிருக்கிறது. முதலில், உடல் முழு வளர்ச்சி பெற உதவும் இக்கனலின் ஆற்றல், நாட்பட நாட்பட, உலக நாட்டங்களின் பால் செல்லும் ஐம்புலன்களின் எண்ண ஓட்டங்களுக்கேற்பவும், இனப்பெருக்கத்திற்காகவும் செலவிடப்படுகிறது.
இறைவன் இப்பிரபஞ்சக்கனலை, பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் வழங்குவதை திருமூலர் இவ்வாறு கூறுகிறார்:
சூரியனின் ஒளியை குவித்தால், அந்த வெப்ப ஆற்றல் சூழ்ந்துள்ள பஞ்சினை எரித்து விடும். ஆனால், அதே மாதிரியான பிரபஞ்சக் கனலை குவித்து, உடலென்னும் பஞ்சினை சுட்டுவிடாமல் வழங்கிக்கொண்டுள்ளான். அதே நேரத்தில், சூரியனின் சந்நிதியில் வைக்கும் பொருள் சுடப்பட்டு அதன் தன்மை மாறுவது போல், மனிதனை படைக்கையில், உடலுக்குள் இருக்கும் முந்தைய பிறவிகளின் பற்று, பந்தங்களையும் எரித்து விடுகிறான்.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சை சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
- திருமந்திரம் 117
அகத்தீ என்னும் அகக்கனல் எப்படி உடலுக்கு இறைவன் வழங்கியுள்ளான் என்பதனையும், திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்:
ஏழுலகையும் படைத்த இறைவன், எங்கும் கனல் மிகுந்து போகாமல் அளவோடு வைத்தான். உடலுக்குள்ளும் தங்கும் கனலின் அளவை அறுதி செய்தான். திருமந்திரம் என்னும் தமிழ் மறையின் உள்ளே, கனலின் முழுப்பொருளையும் அனைவரும் அறியும் அளவிற்கு முழுமையாக வைத்தான்.
அங்கிமிகாமை வைத்தான் உலகு ஏழையும் எங்கும்மிகாமை வைத்தான் உடல் வைத்தான் தங்கிமிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமிகாமை வைத்தான் பொருள் தானுமே.
- திருமந்திரம் 87
என் குறிப்பு:
திருமந்திரப்பாடல்களுக்கு நான் கொடுத்துள்ள விளக்கம், சரியோ, தவறோ தெரியாது. ஆனால், பாடல்களின் பொருள் அவரவர் நுண்ணறிவிற்கு ஏற்ப மாறுபடும் என்பது மட்டும் உண்மை. எனவே, பாடல்களின் விளக்கம் உங்கள் அறிவுக்கு மாறுபட்டால் பொறுத்தருளவும்.
உள்ளமெலா மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரிக்காயோ
மாதுளங்காயானாலும் என்னுளங்காயாகுமோ?
பெண்ணே! உன்னுடைய உள்ளம் கனியாமல் இருந்தாலும், என்னுள்ளம் கனியாமல் இருக்குமா?
அட.. அட.. இப்படியும் ஒரு பாடல் இன்னொரு மொழியில் பிறக்க முடியுமா? கவியரசு கண்ணதாசனின் உள்ளம், தமிழால் கனிந்ததால், தமிழுக்கு மகுடம் சூட்ட, நமக்கு கிடைத்த அற்புதமான பாடல்.
தமிழ் கண்ணதாசனுக்கு கிடைத்த பொருள். தமிழின் மெய்ப்பொருளை தன் அறிவினில் உணர்ந்து படைத்ததனால் எந்த நிலையினிலும் அவனுக்கு மரணமில்லை.
இதையே இன்னொரு வகையாக விளங்கிக்கொள்ளலாம். அதாவது, ஒவ்வொருவரும் தன்னுடைய அறிவு நிலைக்கேற்ப பொருளை உணர்ந்து கொள்கிறார்கள், ஆன்மீக வழி செல்பவர்களும் சரி, நாத்திக வழி பின்பற்றுபவர்களும் சரி. எண்ணற்ற அறிவு நிலை பொக்கிஷங்களை தன்னுள்ளே கொண்டுள்ள தமிழ், அதன் மெய்ப்பொருளை உலகிற்கு வெளிப்படுத்தாமைக்கு இதுவே முழு முதல் காரணம்.
வெட்டிப்பேச்சுக்களும், விதண்டா வாதங்களும் தன்னுடைய நேரத்தை வீணடிப்பதல்லாமல் சமுதாயத்தின் நேரத்தையும் செலவழிக்க வைக்கிறது. இந்த சாபக்கேட்டை முதலில் நாம் உணர்ந்து அதை விலக்கிக்கொள்ள பழக வேண்டும்.
தங்கம் வேண்டுமென்றால், மண்ணைக்குடைந்துதான் ஆக வேண்டும்; சகதிகளையும், இடைவரும் இடற்கண்களையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். சகதிகளை மட்டும் அலசிக்கொண்டிருந்தால் பலனும் சகதியாகத்தானே இருக்கும்.
பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதனும் படித்து, உணர்ந்து கொள்ள வேண்டிய நூல் திருமந்திரம். தமிழில் உள்ள அற்புத சொத்து. நாம் படிப்பதோடு நில்லாமல், உலகோர்க்கு எடுத்து சொல்ல வேண்டிய உயிர் மந்திரம்.
தமிழில் திருமந்திரம் எப்படி வந்தது என்பதை திருமூலர் இப்படி சொல்கிறார்:
மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பவர்கள், முந்தைய பிறவியில் முயன்று தவம் செய்யாதவர்கள். பின்னர் நீ எப்படி பிறவி பெற்றாய் என்று திருமூலரை கேட்பவர்களுக்கு, இறைவன் என்னை நன்றாக படைத்தது, இப்பிறவியில் இறைநிலையை அனைவரும் அறிந்து கொள்ளுமாறு, தமிழில் தெளிவாக எடுத்து சொல்வதற்கே, என்கிறார்.
பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.
- திருமந்திரம் 81
தமிழை படிக்கிறோம்..பேசுகிறோம்..கேட்கிறோம்.. எழுதுகிறோம். உணர்வதற்கு திருமந்திரம். இதுவே தமிழனாய் பிறந்ததற்கு நாம் பெற்ற பெரும் பேறு.
பாவம் என்ற கல்லறைக்கு பல வழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
மனம் - புத்தி - அஹங்காரம் - சித்தி
இந்த நான்கு தத்துவங்கள் உடலின் பிரதம தத்துவங்களான 36 தத்துவங்களில் வரும் ஆன்ம தத்துவங்களில் அந்தக்கரணம் என்று அறியப்படுகிறது.
ஐம்புலன்களால் தொடர்ந்து வரும் செய்திகள் எண்ணங்களாக மாறி உடலின் சக்தியை ஆக்கிரமித்துக்கொள்கிறது. மனம், கனவுகளற்ற உறக்கம் தவிர்த்து, மற்ற நேரங்களில் எண்ணங்களால் புடை சூழப்பட்டு, உடலின் ஆற்றலை தொடர்ந்து உபயோகித்து கொண்டு உள்ளது.
நம் பட்டனுபவம், படிப்பனுபவம், கேள்வி அறிவு, குரு வழி காட்டுதல் மற்றும் கரு வழி செய்திகளுமாக மனம் அடுத்த கட்ட புத்தி என்னும் அறிவு நிலையை அடைகிறது.
அறிவுநிலை மிக மிக, தன்னிச்சையாக அஹங்காரம் தலை தூக்கி நிற்கிறது.
சித்தி நிலை செல்வதென்பது சாதாரண மனிதர்களால் இயலாத காரியம்.
இதனையே ஷீரடி சாய்பாபா உபதேசத்தில், ஆன்மீக நாட்டமுள்ள ஏழ்மையிலுள்ள மனிதனால், தன் வீட்டு நிலைப்படியை தாண்டி செல்ல முடியாது என்று சொல்கிறார். இங்கு ஏழ்மை என்பது அஹங்கார நிலைப்படி.
அஹங்காரம்தான் அத்தனை அலட்சியங்களுக்கும் ஆணி வேர்!
திருமூலரோ, தொடர்ந்து உங்கள் சிந்தையில், மனித குலத்தின் தேவனை, நிலைபெற நினைப்பதன் மூலம் உலக வாழ்வின் துன்பங்களில் இருந்து தப்பி சித்தி நிலை அடையுங்கள் என்கிறார்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே.
- திருமந்திரம் 2104
திருவள்ளுவரும் தன் பங்கிற்கு அறிவு நிலையில் இருந்து, ஒன்றினை அறிந்து கொள்வதெப்படி என்று கோடி காட்டுகிறார்.
யார் சொன்னார்கள் என்பதனை விட்டு விட்டு, என்ன சொன்னார்கள் அதன் உட்பொருளென்ன என்று அதனின் உண்மை நிலை தெரிந்து கொள்வதே அறிவு.
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
உண்மை நிலை அறியாமல், வெறும் பட்டறிவு அனுபவமே போதும், அதை வைத்தே அனைத்தையும் தீர்மானிப்பது என்பது வெறும் அறிவற்ற செயல்.
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது!
'அரச மண்டபம் போன்ற தோற்றம். கோயிலாகவும் இருக்கலாம்.
அந்த மண்டபம் முழுதும் மரகதப்பச்சையில் ஒளிரும் தீபங்கள். மனிதர்களுக்கு மாற்றாக பச்சை வண்ண பாம்புகள் சீரான இருக்கைகளில் அமர்ந்திருந்தது. அவைகளுடன், நானும் இருப்பது போன்ற உணர்வு.
எந்த உரையாடலும் இல்லை. ஆனால், அனைவருக்கும் செய்தி பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது.'
ஏழு வயதில், என்னுடைய நினைவில் நின்ற முதல் கனவு. பயந்துபோய், வியர்த்து அலறிக்கொண்டெழுந்தது இன்னும் என் நினைவில் பசுமரத்தாணிபோல் இருக்கிறது.
கனவு ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது? கண்டது எப்படி?
ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறால் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில் மாயைதானே.
- திருமந்திரம் 2197
உடல், மனம் இயங்கு தன்மையை மொத்தம் 96 வகைகளாக பிரித்து, அதன் செயல்பாட்டினிற்கேற்ப உடல் இயக்கம் பெறுவதை கூறுகிறார்கள். இதில் 36 தத்துவங்கள் பிரதம தத்துவங்கள் என்று அறியப்படுகிறது. மற்றவை சார் தத்துவங்கள்.
ஆறாறு என்று 36 தத்துவங்களை குறிப்பிடும் திருமூலர், அதில் 25 தத்துவங்கள் அமைதி நிலையில் இருக்கும்போது, நனவில் நனவு, அதாவது முழு உணர்வு நிலை. மேலும் ஐந்து தத்துவங்கள் அமைதி நிலை கொள்ளும்போது, உணர்வுடன் கூடிய கனவு நிலை. மீதமுள்ள ஐந்து தத்துவங்களையும் விட்டு விட, நனவின் இறுதி நிலையான உறக்கத்திற்கு சென்று விடுகிறது. இந்த நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது வெறும் மாயை மட்டுமே.
சரி, இப்பொழுது நீங்கள் கண்ட கனவுக்கு வருவோம். எப்பொழுதாவது, உங்கள் கனவும், நிஜ வாழ்வும் ஒன்றி போனதுண்டா?
பாஸ்போர்ட் கூட எடுக்காத, வெளி நாடு செல்வது பற்றி எண்ணியே பார்த்திராத கால கட்டத்தில், பன்னாட்டு விமான நிலையத்தில், என்னை ஆஸ்திரேலியா வழியனுப்பும் கனவு எனக்கு வந்தது.
எதிர்காலம் பற்றி கனவு வருவது எப்படி சாத்தியம்?
வானியலில் இதுவரை அறியப்படாத ரகசியம் கருந்துளை [Blackhole]. காலப்பயணம் செய்யக்கூடியது. அதே கருந்துளை நமக்குள், மூலாதாரத்தில் உள்ள குண்டலினி. இது பல கோடி வருடங்கள் முன்னும், பின்னும் பயணம் செய்த அனுபவம் கொண்டது. கனவுகளில் நம்மை ஆட்கொண்டு தன் காலப்பயணத்தில் ஒரு துளியை காட்டி செல்வது ஒன்றும் ஆச்சரியம் இல்லைதானே!
மனித உடல் உயிர் தத்துவங்கள்
பூதம்: 5 தத்துவங்கள்: 96 [பூதமைந்தில்]
பிரதம தத்துவங்கள்: 36 [உடல் கருவி] சார் தத்துவங்கள்: 60
உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம் உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்
விழித்திருக்கும் நேரம் எல்லாம் நினைத்திருக்கும் பெண்ணினம் தவிர ஆன்மீகத்திற்கு பெரிய தடை ஒன்றும் இல்லை, ஆண்களுக்கு.
பெண்ணாசையை விட்டொழி! அதுவே உனது ஆன்மீக தேடலின் முதல் வெற்றி.
திருமந்திரம்-1937
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
உன்மீது இச்சை கொண்டு அல்லது நீ பார்க்கின்ற பெண்ணைப் பார்க்காமல் விலகிப்போய்விடு. மூலாதாரத்தில் தியானித்து, ஆர்ப்பரித்து உள்ளத்தில் எழும் எண்ணங்களை எரித்து, கண்களால் உண்டான ஆசையை அழித்து விடு. இவ்வாறு செயல் படுத்தும் சிவயோகிகளைப்போல் செய்தால் நீயும் சிவயோகி ஆவாய்.
பட்டினத்தாரைப்பாருங்க.. போட்டுத் தாக்குகிறார் கச்சித் திரு அகவலில்..
திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக் குலவிய சிவபதங் குறுகாது அவமே மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்.. 27
இப்படி ஆரம்பித்து, 40-வது பாடல்வரை ஒரே திட்டுதான்.
இப்படி ஆரம்பித்து, பத்து பாடல்களில் பெண்களை ஏன் விரும்பக்கூடாது என்று பின்னிப் பெடல் எடுக்கிறார்.
மலக்குடல் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.. 59
மேல் குறிப்பிட்ட பாடல்களை எழுதியவர்கள் எல்லாம் ஆண்கள். அவர்களை மிகவும் பாதித்த ஒன்றை, அவர்களது ஆன்மீக தேடலில் தடையாக வந்ததால் எழுதி சென்றுவிட்டார்கள்.
உண்மையில், நடந்தது என்ன?
அவர்களால் வெல்ல முடியாத சக்தியாக நின்றது பெண்மை. ஆணுக்கு சரி நிகரான இணை சக்தி.
அணுவினுள் உள்ள புரோட்டான் எனும் நேர் விசைக்கு எதிர் விசையாக நிற்கும் எலக்ட்ரான் போன்றது.
மூலாதாரத்தில், ஓம் எனும் நாதத்தில், மகார நாதமாக விளங்குவது.
மானிட நிலையில், சக்தியை உணர்ந்து ஏற்று,. அறிந்து நீரோட்டம் போல் ஆணும் பெண்ணும் இருந்தால் இவர்கள் இப்படி பாடி செல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
இவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கு, மூன்று காரணங்கள் கணக்கிடலாம்:
1. கடின பயிற்சியினால், விந்துற்பனம் மூலம் உடலில் செய்து கொண்ட மாற்றங்கள்.
2. உடலில் ஐம்புலன்களை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்காதது.
3. பெண்களை கவர முடியாத உடல் அல்லது போகத்திற்கு பெண்கள் கிடைக்காத சூழ்நிலை.
திருமந்திரம்-180
விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரம் காயும் ஒத்தேனே.
அழகிய இளம் கன்னியருக்கு நான், அடிக்கரும்பில் பிழிந்தெடுத்த சாறுபோல் இனித்த காலங்கள் உண்டு. என் இளமை நீங்கியபின், பெண்கள் என்னை மிகுந்த கசப்பு சுவை உடைய எட்டிக்காயைப் போல் ஒதுக்கித்தள்ளுகிறார்கள்.
இளமை நீங்கிய நிலையில் பெண்களைத் தேடினால் எப்படி அது நடக்கும்?
உறவின் நிலையில் பெண்ணின் மேல் ஏற்படும் அன்பு உணர்வை அப்படியே தன்னுள் தக்க வைக்க கொள்ள முடிபவர்களுக்கு அதுவே இம்மை தரும் சிற்றின்பமும், மறுமை தரும் பேரின்பமும்.
சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்திற்கு அழைத்து செல்லும் கருவியாக இருக்கும் பெண்ணே ஆன்மீகத்தில் நோயும், மருந்தும்.
ஊர்வசிகள் நடனமாடினால், விஷ்வாமித்திரர்கள் எல்லாம் 'க்ளீன் பௌல்ட்'.
உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம் உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்
பெண் கிடைக்கவில்லை என்றால்,
பந்தலில் தொங்கிக்கொண்டிருக்கும் திராட்சை பழத்தை கவ்வி பிடிக்க, பல முறை குதித்து முயன்று, தோல்வியில் முடிந்த நரி, சொல்லிக்கொண்டே ஓடியது -
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம் வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
கோதுமை அல்வா நன்றாக திரண்டு, நெய் மணத்தோடு நல்ல நிறத்தோடு வந்திருப்பதை பார்த்து திருப்தி அடைந்த வெங்கடேச ஐயர், இதுவரை கிண்டி வைத்திருந்த அல்வாவை எடுத்து பெரிய தட்டில் ஊற்றினார்.
'டேய் சோமு, செத்தே பாத்துக்கோ. இதோ வந்துர்றேன்' - பன்னிரண்டு வயது பையனிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அல்வா கடையின் முன் பக்கம் சென்றார் ஐயர்.
வெங்கடேச ஐயர் தலை மறைந்ததும் அவசரமாக, சூடாக இருந்த அல்வாவை ஒரு கரண்டியில் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டான், சோமு.
அடுத்த வினாடியே, அவன் அலறிய அலறலில் மொத்த கடை ஊழியர்களும் அங்கு வந்துவிட, அவன் துடி துடித்து இறந்ததை பார்ப்பதை தவிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.
நிச்சயம் சோமு அதை சுவைக்கவில்லை. அது இனிப்பான அல்வா என்று தெரிந்த ஒரே காரணத்தினால் எடுத்து விழுங்கிவிட்டான்.
இதைத்தான் நாம் அனைவரும் தினம்தோறும் செய்து கொண்டிருக்கிறோம். எதையும் சுவைத்து, ரசித்து அனுபவிப்பதில்லை. சாப்பிட்டோம் என்ற திருப்தியில் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதற்கான சன்மானத்தை பல வகைகளில் பெற்று, வாழ்க்கையை துன்ப மயமாக்கிக்கொள்கிறோம்.
நம் உடல், அன்னமயகோஷம் என்று சொல்லப்படுகிற வண்ணம், உண்ணும் உணவினால் உண்டானது. உணவினாலேயே உடலில் உயிர் தங்கி உள்ளது.
உயிர் காக்கும் உணவை தினம் தினம் நமக்கு வழங்குபவர்களை நன்றியுடன் வாழ்த்த வேண்டாமா?
நாம் உண்ணும் உணவு, நம் உடலில் எப்படி செயல்படுகிறது என்று திருமூலர் சொல்வதை பார்ப்போம்.
திருமந்திரம்-1933
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம் பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத் திருந்தும் உடல் மனமாம் கூறுசேர்ந்திடு இருந்தன முன்னாள் இரதம் அதாகுமே.
உடலுடன் சேரும் சக்தி, உணவால் திருப்தியுறும் மனம் மற்றும் கழிவு என நாம் உண்ணும் உணவு மூன்று கூறாக உள்ளது. உடலும், மனமும் சேர்ந்தியங்குவதின் காரணம் நாம் முன்னர் உண்ட உணவின் சக்தியாலேதான்.
கொஞ்சம் சமையல் கலையும் கற்றுக்கொள்வோமே!
நமக்கு ஒரு ஃபில்டர் காபி போட தெரியாமல், இன்ஸ்டன்டில் திருப்தி பட்டுக்கொள்கிறோம். ஒரு challenge-ஆக எடுத்துக்கொண்டு முயற்சி செய்தால்.