Monday, November 23, 2020

கனவு ஏன் வந்தது?

கனவு ஏன் வந்தது?

நீல நயனங்களில் 
ஒரு நீண்ட கனவு வந்தது 
அதன் கோல வடிவங்களில் 
பல  கோடி நினைவு வந்தது! 



 

'அரச மண்டபம் போன்ற தோற்றம். கோயிலாகவும் இருக்கலாம்.

அந்த மண்டபம் முழுதும் மரகதப்பச்சையில் ஒளிரும் தீபங்கள்.  மனிதர்களுக்கு மாற்றாக பச்சை வண்ண பாம்புகள்  சீரான இருக்கைகளில் அமர்ந்திருந்தது. அவைகளுடன், நானும் இருப்பது போன்ற உணர்வு.

எந்த உரையாடலும் இல்லை. ஆனால், அனைவருக்கும் செய்தி பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது.'

ஏழு வயதில், என்னுடைய நினைவில் நின்ற முதல் கனவு. பயந்துபோய், வியர்த்து அலறிக்கொண்டெழுந்தது இன்னும் என் நினைவில் பசுமரத்தாணிபோல் இருக்கிறது.

கனவு ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது? கண்டது எப்படி?

ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறால் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில் மாயைதானே.
                                                                                  - திருமந்திரம் 2197     

உடல், மனம்  இயங்கு தன்மையை மொத்தம்  96 வகைகளாக பிரித்து, அதன் செயல்பாட்டினிற்கேற்ப உடல் இயக்கம் பெறுவதை கூறுகிறார்கள். இதில் 36 தத்துவங்கள் பிரதம தத்துவங்கள் என்று அறியப்படுகிறது. மற்றவை சார் தத்துவங்கள்.

ஆறாறு என்று 36 தத்துவங்களை குறிப்பிடும் திருமூலர், அதில் 25 தத்துவங்கள் அமைதி நிலையில் இருக்கும்போது, நனவில் நனவு, அதாவது   முழு உணர்வு நிலை. மேலும்  ஐந்து தத்துவங்கள் அமைதி நிலை கொள்ளும்போது, உணர்வுடன் கூடிய  கனவு  நிலை. மீதமுள்ள ஐந்து தத்துவங்களையும்  விட்டு விட, நனவின் இறுதி நிலையான உறக்கத்திற்கு சென்று விடுகிறது. இந்த நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது வெறும் மாயை மட்டுமே.  

சரி, இப்பொழுது நீங்கள் கண்ட கனவுக்கு வருவோம். எப்பொழுதாவது, உங்கள் கனவும், நிஜ வாழ்வும் ஒன்றி போனதுண்டா? 

பாஸ்போர்ட் கூட எடுக்காத, வெளி நாடு செல்வது  பற்றி எண்ணியே  பார்த்திராத   கால கட்டத்தில்,  பன்னாட்டு விமான நிலையத்தில்,  என்னை ஆஸ்திரேலியா வழியனுப்பும் கனவு எனக்கு வந்தது.

எதிர்காலம் பற்றி கனவு வருவது எப்படி சாத்தியம்?

வானியலில் இதுவரை அறியப்படாத ரகசியம் கருந்துளை [Blackhole]. காலப்பயணம் செய்யக்கூடியது. அதே கருந்துளை நமக்குள், மூலாதாரத்தில் உள்ள குண்டலினி. இது பல கோடி வருடங்கள் முன்னும், பின்னும் பயணம் செய்த அனுபவம் கொண்டது. கனவுகளில் நம்மை ஆட்கொண்டு தன் காலப்பயணத்தில் ஒரு துளியை காட்டி செல்வது  ஒன்றும் ஆச்சரியம் இல்லைதானே! 

மனித உடல் உயிர் தத்துவங்கள் 

பூதம்: 5
தத்துவங்கள்: 96 [பூதமைந்தில்]

பிரதம தத்துவங்கள்: 36 [உடல் கருவி]
சார் தத்துவங்கள்: 60

பிரதம தத்துவங்கள் 

ஞானேந்திரியங்கள்                                                                           5
[கண்,  காது, மூக்கு, வாய், மெய்]
கர்மேந்திரியங்கள்                                                                             5
[வாய், கை, கால், கழிவுறுப்பு, பிறப்புறுப்பு]
பூதங்கள்                                                                                                  5
[ நிலம், நீர்,நெருப்பு,  காற்று, ஆகாயம்]
தன்மாத்திரைகள்                                                                                5
[சப்தம், ஸ்பர்ஷம், ரூபம், ரசம், கெந்தம்]
புத்தி                                                                                                           4
[மனம், புத்தி, ஆங்காரம், சித்தி]
வித்யா  தத்துவங்கள்                                                                          7
[காலை, நியதி, கலை, வித்தை, ராகம், புருடன், மாயை]
சிவ  தத்துவங்கள்                                                                                 5
[சுத்த வித்யா, ஈஸ்வரம், சாதாக்கியம் அல்லது சதாசிவம், சக்தி, சிவம்] 












No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...