ஆலங்காய் - நிலா
உள்ளமெலா மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே சிரிக்காயோ
மாதுளங்காயானாலும்
என்னுளங்காயாகுமோ?
பெண்ணே! உன்னுடைய உள்ளம் கனியாமல் இருந்தாலும், என்னுள்ளம் கனியாமல் இருக்குமா?
அட.. அட.. இப்படியும் ஒரு பாடல் இன்னொரு மொழியில் பிறக்க முடியுமா? கவியரசு கண்ணதாசனின் உள்ளம், தமிழால் கனிந்ததால், தமிழுக்கு மகுடம் சூட்ட, நமக்கு கிடைத்த அற்புதமான பாடல்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
- திருக்குறள் 423
தமிழ் கண்ணதாசனுக்கு கிடைத்த பொருள். தமிழின் மெய்ப்பொருளை தன் அறிவினில் உணர்ந்து படைத்ததனால் எந்த நிலையினிலும் அவனுக்கு மரணமில்லை.
இதையே இன்னொரு வகையாக விளங்கிக்கொள்ளலாம். அதாவது, ஒவ்வொருவரும் தன்னுடைய அறிவு நிலைக்கேற்ப பொருளை உணர்ந்து கொள்கிறார்கள், ஆன்மீக வழி செல்பவர்களும் சரி, நாத்திக வழி பின்பற்றுபவர்களும் சரி. எண்ணற்ற அறிவு நிலை பொக்கிஷங்களை தன்னுள்ளே கொண்டுள்ள தமிழ், அதன் மெய்ப்பொருளை உலகிற்கு வெளிப்படுத்தாமைக்கு இதுவே முழு முதல் காரணம்.
வெட்டிப்பேச்சுக்களும், விதண்டா வாதங்களும் தன்னுடைய நேரத்தை வீணடிப்பதல்லாமல் சமுதாயத்தின் நேரத்தையும் செலவழிக்க வைக்கிறது. இந்த சாபக்கேட்டை முதலில் நாம் உணர்ந்து அதை விலக்கிக்கொள்ள பழக வேண்டும்.
தங்கம் வேண்டுமென்றால், மண்ணைக்குடைந்துதான் ஆக வேண்டும்; சகதிகளையும், இடைவரும் இடற்கண்களையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். சகதிகளை மட்டும் அலசிக்கொண்டிருந்தால் பலனும் சகதியாகத்தானே இருக்கும்.
பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதனும் படித்து, உணர்ந்து கொள்ள வேண்டிய நூல் திருமந்திரம். தமிழில் உள்ள அற்புத சொத்து. நாம் படிப்பதோடு நில்லாமல், உலகோர்க்கு எடுத்து சொல்ல வேண்டிய உயிர் மந்திரம்.
தமிழில் திருமந்திரம் எப்படி வந்தது என்பதை திருமூலர் இப்படி சொல்கிறார்:
மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பவர்கள், முந்தைய பிறவியில் முயன்று தவம் செய்யாதவர்கள். பின்னர் நீ எப்படி பிறவி பெற்றாய் என்று திருமூலரை கேட்பவர்களுக்கு, இறைவன் என்னை நன்றாக படைத்தது, இப்பிறவியில் இறைநிலையை அனைவரும் அறிந்து கொள்ளுமாறு, தமிழில் தெளிவாக எடுத்து சொல்வதற்கே, என்கிறார்.
பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.
- திருமந்திரம் 81
தமிழை படிக்கிறோம்..பேசுகிறோம்..கேட்கிறோம்.. எழுதுகிறோம். உணர்வதற்கு திருமந்திரம். இதுவே தமிழனாய் பிறந்ததற்கு நாம் பெற்ற பெரும் பேறு.
இறைக்கனல்:1 தொடரும்..
No comments:
Post a Comment