நெருப்பு டா..
நெருப்பு டா..
நெருங்கு டா..
முடியுமா?
நெருப்பு டா..
உன் உள்ளும், புறமும் நெருப்பு டா..
அடிவயிற்றில் உனக்குள் கனன்று கொண்டிருப்பது அகத்தீ; பிரபஞ்சத்தில் இருந்து உனக்கு வந்து கொண்டிருப்பது புறத்தீ [இறைக்கனல்]. இறைக்கனல் வேறு, சூரியக்கனல் வேறு.
அகத்தீ அளவு மாறும் தன்மை கொண்டது. புறத்தீ அளவு மாறாதது, பிறவி முழுதும் தொடர்ந்து ஒரே சீராக பிரபஞ்சம் வழங்கிக்கொண்டிருப்பது.
நம் உடலின் ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும், இக்கனல்களின் சந்திப்பு இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கிறது. இச்சந்திப்பில் கிடைக்கும் ஆற்றலினால் தான், உடலின் அனைத்து இயக்கங்களும் நடந்து கொண்டிருக்கிறது. உடலின் இச்சை செயல்கள், அனிச்சை செயல்கள், சோர்வு, தூக்கம், விழிப்பு என்று அனைத்திற்கும் மூல காரணம் இக்கனல்களின் சந்திப்பே. எந்த கணத்தில் இந்த சந்திப்பு சங்கிலி அறுபடுகிறதோ, அந்த கணத்தில் உடல் உயிரற்றதாகி விடுகிறது.
குழந்தையாக இருக்கும்போது கிடைக்கும் அதே அளவு புறக்கனல், உடல் உயிரை விடும் வரை கிடைத்துக்கொண்டிருக்கிறது. முதலில், உடல் முழு வளர்ச்சி பெற உதவும் இக்கனலின் ஆற்றல், நாட்பட நாட்பட, உலக நாட்டங்களின் பால் செல்லும் ஐம்புலன்களின் எண்ண ஓட்டங்களுக்கேற்பவும், இனப்பெருக்கத்திற்காகவும் செலவிடப்படுகிறது.
இறைவன் இப்பிரபஞ்சக்கனலை, பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் வழங்குவதை திருமூலர் இவ்வாறு கூறுகிறார்:
சூரியனின் ஒளியை குவித்தால், அந்த வெப்ப ஆற்றல் சூழ்ந்துள்ள பஞ்சினை எரித்து விடும். ஆனால், அதே மாதிரியான பிரபஞ்சக் கனலை குவித்து, உடலென்னும் பஞ்சினை சுட்டுவிடாமல் வழங்கிக்கொண்டுள்ளான். அதே நேரத்தில், சூரியனின் சந்நிதியில் வைக்கும் பொருள் சுடப்பட்டு அதன் தன்மை மாறுவது போல், மனிதனை படைக்கையில், உடலுக்குள் இருக்கும் முந்தைய பிறவிகளின் பற்று, பந்தங்களையும் எரித்து விடுகிறான்.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சை சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
- திருமந்திரம் 117
அகத்தீ என்னும் அகக்கனல் எப்படி உடலுக்கு இறைவன் வழங்கியுள்ளான் என்பதனையும், திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்:
ஏழுலகையும் படைத்த இறைவன், எங்கும் கனல் மிகுந்து போகாமல் அளவோடு வைத்தான். உடலுக்குள்ளும் தங்கும் கனலின் அளவை அறுதி செய்தான். திருமந்திரம் என்னும் தமிழ் மறையின் உள்ளே, கனலின் முழுப்பொருளையும் அனைவரும் அறியும் அளவிற்கு முழுமையாக வைத்தான்.
அங்கிமிகாமை வைத்தான் உலகு ஏழையும்
எங்கும்மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
தங்கிமிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமிகாமை வைத்தான் பொருள் தானுமே.
- திருமந்திரம் 87
என் குறிப்பு:
திருமந்திரப்பாடல்களுக்கு நான் கொடுத்துள்ள விளக்கம், சரியோ, தவறோ தெரியாது. ஆனால், பாடல்களின் பொருள் அவரவர் நுண்ணறிவிற்கு ஏற்ப மாறுபடும் என்பது மட்டும் உண்மை. எனவே, பாடல்களின் விளக்கம் உங்கள் அறிவுக்கு மாறுபட்டால் பொறுத்தருளவும்.
மகிழ்ச்சி..
இறைக்கனல்: 2 தொடரும்..
No comments:
Post a Comment